தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து, புதிய ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். நாகலாந்து மாநிலத்தில் ஆளுநராக இருந்த அவர், ஆளுநர் மாளிகையில் நாளை மறுநாள் ( 18 ம் தேதி) நடைபெறும் நிகழ்வில் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.
உளவுத்துறையில் அனுபவமிக்க ஆர்.என்.ரவி, மத்திய பாஜக அரசின் கைப்பாவை என்றும் தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுக அரசை வேவு பார்ப்பதற்காகவே மத்திய பாஜக அரசு அவரை நியமித்திருக்கிறது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் தேசியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள், ஆர்.என்.ரவி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படிபட்ட சூழலில் இன்று இரவு ஆர்.என்.ரவி சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்றார். பின்னர், அங்குள்ள விவிஐபி.க்கான ஓய்வறையில் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் சிறிதுநேரம் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.
முதல்முறையாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள ஆர்.என்.ரவிக்கு, விமான நிலையத்தில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.