அதிர்ச்சியில் இருந்து விலகாத திருநெல்வேலி மின்துறை
மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் ஒவ்வொரு நடவடிக்கையும் மின்சாரத் துறையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆய்வுக் கூட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் நேரத்தில், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த மின்சாரத் துறை அதிகாரிகள், அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் அதிரடி எப்படியிருக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறார்கள் என்ற பேச்சு உலாவி வருகிறது. அதுவும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக முன்வைத்து வரும் இந்த நேரத்தில், திமுக ஆட்சியில் மின்சாரத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அதிரடி ஆட்டக்காரர் போல, களத்தில் குதித்ததால், மின்சாரத் துறையைச் சேர்ந்த ஒட்டுமொத்த கூட்டமே கதிகலங்கிப் போய் விடுகிறது.
இப்படி தமிழகம் முழுவதுமே அதிரடி அரசியல்வாதி என பட்டப்பெயரைச் சுமந்து கொண்டிருக்கும் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, வணங்குதலுக்குரிய ஒரு துறவிப் போல, சத்தம் இல்லாமல் அமைதியாக ஆய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, அதுவும் ஒருநாள் முழுவதும் விரதம் என்று கூறி சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் திரும்பியதை நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் திருநெல்வேலி மாவட்ட மின்சாரத்துறை அதிகாரிகள். கூடவே அவரது சனிக்கிழமை விரதத்தின் புண்ணியமோ என்னவோ, கொலைப் பழியில் இருந்து திமுக அரசும் தப்பியிருக்கிறது என்று பொடி வைத்தும் பேசுகிறார்கள் அவர்கள்.
விரதமிருக்கிறாரா அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ? அந்த புண்ணியத்தால் திமுக ஆட்சி மீது விழ இருந்த கொலைப்பழி தவிர்க்கப்பட்டுவிட்டதா ? என்ற ஆச்சரியத்தோடு நெல்லையில் நல்லரசுக்கு மிக, மிக நெருக்கமான மின்துறை அதிகாரியிடம் விசாரித்தோம்..
கலகலவென சிரித்தவாறே, கடந்த சனிக்கிழமையன்று ((செப்.11) நடைபெற்ற மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் ஆய்வுக் கூட்ட சுவாரஸ்யங்களை முழுமையாக விவரித்தார் அந்த மின்துரை அதிகாரி.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி, வள்ளியூர், களக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் நுட்பம் காரணமாக மின்சார விநியோகத்தில் சில சிக்கல்கள் இருந்து வந்தன.அதன் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு ஊர்களில் பகல் நேரங்களில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், மின்தடை குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது தொகுதியான ராதாபுரத்திலும் அதிருப்தி குரல்கள் அதிகரித்தன. மின்தடை குறித்து பேரவைத் தலைவர் மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மேலும், சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
இதனையடுத்து, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மின்உற்பத்தியை அதிகரிக்கவும், மின்தடை ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்து, அதற்குரிய தீர்வு காணவும் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கடந்த சனிக்கிழமை அதிகாலை 6.30 மணியளவிலேயே நெல்லைக்கு வந்துவிட்டார். இதற்காக சென்னையில் இருந்து 5 மணிக்கு விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பாளையங்கோட்டையில் 10 மணிக்கு மேல்தான் ஆய்வுக்கூட்டம் என்றாலும்கூட, காலை முதலே ஒவ்வொரு பகுதியாக உதவி பொறியாளர், உதவி இயககுனர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் மாவட்ட அளவிலான மின்துறை அதிகாரிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது, ஐஏஎஸ் அதிகாரியான, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சேர்மன் ராஜேஷ் லக்கானியும் உடனிருந்தார். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்தடை இல்லாமல் மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என்று ராஜேஷ் லக்கானி அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.
சிறிது இடைவெளியில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வள்ளியூர் உதவி இயக்குனர் வளரசன் என்ற மின்துறை அதிகாரியிடம் கொஞ்சம் உயர்ந்த குரலில் ராஜேஷ் லக்கானி கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். ஒருகட்டத்தில் டென்ஷன் ஆகி, உடைந்த ஆங்கிலத்தில், முகக்கவசத்தை கழற்று மேன், எந்த கேள்வி கேட்டாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறாய் என்று உஷ்ணம் காட்ட, அந்த உதவி இயக்குனருக்கு வியர்த்து கொட்டியிருக்கிறது. சில நிமிடங்களில் அந்த உதவி இயக்குனர் மயக்கம் போட்டு கீழே விழ, அப்போது அங்கிருந்த மின்சார வாரியத்தைச் சேர்ந்த பெண் அலுவலர்கள் அவரை பார்த்து கத்தி கூச்சல் போட, வெடவெடத்து போயிருக்கிறார் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்.
பதற்றம் அதிகமாக, விருந்தினர் மாளிகைக்கு வெளியே காத்திருந்த மின்துறை அதிகாரிகள் பலர் ஓடிவந்து, மயக்கம் போட்டு விழுந்த அந்த உதவி இயக்குனரை அவசரமாக் தூக்கி காரில் போட்டுக் கொண்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். இருதய சிகிச்சைக்குப் பெயர் போன அந்த மருத்துவமனையில் உதவி இயக்குனருக்கு முதலுவி கொடுக்கப்பட்ட பிறகு, ஈ.சி.ஜி, எக்கோ உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஒருமணி நேர சிகிச்சைக்குப் பிறகு அந்த அதிகாரி மயக்க நிலையில் இருந்து மீண்டிருக்கிறார்.
பத்துநிடத்திற்கு ஒருமுறை உதவி இயக்குனரின் நிலை குறித்து வாட்ஸ் அப் மூலம் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்.ஸுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கலாட்டா ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை அதிகாலையிலேயே வரவேற்க வந்த அனைத்து மின்துறை அதிகாரிகளும் காலை சிற்றுண்டியை சாப்பிடவில்லை. அமைச்சர் சாப்பிடுவார். அந்த நேரத்தில் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளலாம் என்று காத்திருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியான பதில்தான் கிடைத்தது. சனிக்கிழமை தோறும் அமைச்சர் விரதம் மேற்கொண்டு வருகிறார். அதனால், அமைச்சர் இன்று எந்த உணவும் எடுத்துக் கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டது.
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உணவு எடுத்துக் கொள்ளாததால், அவருடனேயே இருந்த மின்துறை அதிகாரிகளும் உணவு எடுத்துக் கொள்ளாமல், நெல்லையில் இருந்து அமைச்சர் புறப்பட்டுச் செல்லும் வரை பட்டினியுடனேயே இருந்தோம்.
களக்காடு, வள்ளியூர், சேரன் மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மின்சாரத்துறை அதிகாரிகளை தனித்தனியாக அழைத்துப் பேசிய அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மிகுந்த பொறுமையோடு, மின் விநியோகத்தை அதிகரிக்கவும், புதிய மின்மாற்றிகள் பொருத்தவும், மின்தடையே இல்லை என்ற பேச்சு பொதுமக்களிடம் இருந்து வரும் வகையில், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள் என்று அறிவுரை கூறினார்.
நெல்லை ஆய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு கரூரில் இருந்து வந்த அரசு காரில் ஏறி கரூருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்து விட்டு திங்கள்கிழமை சென்னை திரும்பி சட்டப்பேரவைக் கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்விலும் கலந்துகொண்டார். மின்துறை அதிகாரி மயங்கி விழுந்தது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உள்ளிட்ட தகவல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா என தெரியவில்லை.
நெல்லையை பொறுத்தவரை ஒரு சாபம் உண்டு. அரசு அதிகாரியை யாரையாவது மிரட்டினால் தற்கொலை செய்து கொள்வார் என்ற வரலாறு இருப்பதால், ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் மிரட்டலால் உதவி இயக்குனரின் உயிருக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் எங்களுககு ஏற்பட்டது. கடவுள் கருணையோ, அமைச்சர் செந்தில்பாலாஜியின் சனிக்கிழமை விரதத்தின் புண்ணியமோ, திமுக அரசு மீது விழ இருந்த கொலைப் பழி தவிர்க்கப்பட்டுவிட்டது என்றார் ஒரே மூச்சில் அந்த மின்துறை அதிகாரி.
நெல்லைக்கு ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் போல…..