இருபது ஆண்டுகளுக்கு முன்பு இணையம் மிகவும் பிரபலமாகாத காலத்தில், எளிதாக எல்லோராலும் கையாளாக முடியாத காலத்தில் சென்னை ஆன் லைன் எனும் இணையத் தள செய்தி ஊடகம், தமிழகத்தில் சக்கைப் போடு போட்டது. அனுபவமிக்க ஊடகவியலாளர்கள், அரசியல் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் சூடு குறையாமல், நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதே சுடச்சுட கொடுத்தார்கள். எவ்வளவு வேகமாக வளர்ந்து வந்ததோ, அதே வேகத்தில் மூடு விழாவையும் கண்டது சென்னை ஆன் லைன் இணையத்தள ஊடக செய்தி நிறுவனம். ஒன்று மறைந்தால், மற்றொன்று பிறப்பெடுக்கும் என்பதைப் போல, அதே காலகட்டத்தில் ஒன் இந்தியா என்ற இணைய தள ஊடகம், தமிழகத்தில் மெல்ல, மெல்ல தலையைக் காட்ட தொடங்கியது.
பிரபலமான இந்திய மொழிகளில் உருவெடுத்த ஒன் இன்டியாவின் முதல் செய்தியாளராக அறிவழகன் என்பவர், சென்னையில் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு அந்த ஊடகம் மெல்ல, மெல்ல தமிழகம் முழுவதும் வியாபித்தது. அனுபவமிக்க, அரசியலில் தெளிவுப் பெற்ற ஊடகவியலாளர்கள் முன்னணி பொறுப்புகளிலும், மாவட்ட அளவிலும் பணி நியமனம் பெற்று செய்திகளை வழங்கத் தொடங்கினார். புலனாய்வு இதழ்களுக்கு சவால்விடும் வகையில் நாள்தோறும் அரசியல் கட்டுரைகளை சுடச்சுட வழங்கியதால், அரசியல்வாதிகளிடமும் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வெகு குறுகிய காலத்தில் ஒன் இந்தியாவின் வாசிப்பாளர்களாக மாற்றியது.
மாவட்டங்களைக் கடந்து இன்று சின்னச்சிறு ஊர்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் வெகு விரைவாக வாசிப்பாளர்களின் பார்வைக்கு முன் வைக்கப்படுகிறது என்றால், அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அறிவழகன் என்ற அனுபவமிக்க ஊடகவியலாளரின் கடுமையான உழைப்புதான் பிரதானமாக அமைந்தது. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் அவர் உருவாக்கிய செய்தியாளர்கள் குழுவும், அறிவழகன் வகுத்து தந்த பாதையில் தடம் பிறாழாமல் பயணித்து வருகிறது.
இப்படிபட்ட நேரத்தில், 20 ஆண்டுகால கடினமாக உழைப்பை துளியும் பொருட்படுத்தாமல், அறிவழகனுக்கு நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்ட குடைச்சல்கள், அவமரியாதைகள் போன்றவற்றால் இன்று ஒன் இந்தியாவில் அறிவழகன் இல்லை என்ற தகவலும், அவர் வெளியேறிவிட்டார் என்பதும் இல்லை இல்லை வெளியேற்றப்பட்டுவிட்டார் என்ற தகவலும் மாறி மாறி கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதனால், என்ன நடக்கிறது ஒன் இந்தியாவில் என்று விசாரணையில் குதித்தோம். உண்மையான, விசுவாசமிக்க ஊடகவியலார்களின் உழைப்பு எந்தளவுக்கு கிள்ளுக்கீரையாக நிர்வாக தரப்பில் நினைக்கப்படுகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது அறிவழகனுக்கு நேர்ந்த கொடுமை.
20 ஆண்டுகளுக்கு முன்பு சிறியளவில் துவக்கப்பட்ட ஒன் இந்தியாவிற்கு தமிழ் மொழி இணையத் தளத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் அறிவழகன். முதல் ஊடகவியலாளர் இவர்தான். ஒன் இந்தியா தமிழ் தளத்தை கட்டமைத்து எழுப்பிய இவர், செய்திப் பிரிவில் முழுக் கவனத்தை, உழைப்பை செலுத்துகிறார் அறிவழகன். ஒன் இந்தியா தமிழ் செய்திப்பிரிவுக்கு தேவையான ஊடகவியலாளர்களை தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து நியமிக்கிறார் அறிவழகன்.
அவரின் பொறுப்பான பணியால், வலுவான கட்டமைப்பாக மாறியிருக்கிறது ஒன் இந்தியா தமிழ் செய்தித்தளம். இதற்கு அறிவழகன் செலவிட்ட ஆண்டுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. 20 ஆண்டுகள்.
குடிசை தொழிலைப் போல இருந்த ஒன் இந்தியா தமிழ் செய்தி தளம், கோபுரமளவுக்கு தரமாக, அசைக்க முடியாத கட்டமைப்பாக இன்று மாறியிருக்கிறது. இந்த நேரத்தில், நிர்வாக தரப்பில் அறிவழகனுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது. அறிவழகனின் செல்வாக்கை குறைக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் இரண்டு பேர் நிர்வாக தரப்பில் நியமிக்கப்படுகின்றனர்.
ஒருவர் கத்துக்குட்டி. மற்றொருவர் சென்னையில் பிரபலமான, அனுபவமிக்க ஊடகவியலாளர். இந்த இரண்டு பேருமே அறிவழகனின் சொல் பேச்சை முழுமையாகவே கேட்பதில்லை. ஆனால், இருவருமே அவரின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்தான். இருப்பினும் நிர்வாகத்தின் ஆதரவு இருப்பதால், இருவரும் அறிவழகனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற பேச்சு, ஒன் இந்தியா ஊடகவியலாளர்களிடம் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பணியில் சேர்ந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாவே இருவரின் செல்வாக்கும் கொடிகட்டிப் பறப்பதால், தமிழகத்தில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒன் இந்தியாவின் மற்ற ஊடகவியலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அறிவழகன் சொல் பேச்சை மீறாமல் பணிபுரிந்து வரும் ஊடகவியலாளர்களுக்கு, செய்திகளை பதிவு செய்வதில் எந்த சலுகைகளும் காட்டப்படுவதில்லை.
ஆனால், இரண்டு மாத காலத்திற்கு முன்பாக, பணி நியமனம் வழங்கப்பட்ட இரண்டு பேருமே அறிவழகனின் அறிவுரைகளை உதாசீனப்படுத்துவதுடன், ஒன் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட செய்தி கட்டமைப்புக்கு உட்பட்டு செய்திகளையே தருவதில்லை என்பதும், தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒன் இந்தியாவின் ஊடகவியலாளர்களாக உள்ள மூத்தவர்கள், இளையவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகத் தரப்பில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட இருவரின் நடவடிக்கைகளால், செயல்பாடுகளால், அறிவழகனுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. நிர்வாக ரீதியாக சீண்டல்களும் நடத்தப்படுகிறது.
இதையெல்லாம் சமாளித்து தன் பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்த போது, கடந்த வாரத்தில் ஒருநாள் திடீரென்று அறிவழகனிடம், இனிமேல் பணிக்கு வரவேண்டாம் என நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு மேலாக நேரம், காலம் பார்க்காமல் உழைத்த அறிவழகனின் உழைப்பு, தியாகம் ஆகியவை ஒரு நிமிடத்தில் உதாசீனப்படுத்தப்படுகிறது.
ஒன் இந்தியா இன்றைக்கு பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. அதன் உரிமையாளர் அரசியல் செல்வாக்கு பெற்றவராகவும் திகழ்கிறார்.
இப்படிபட்ட நேரத்தில், அறிவழகனை மனம் நோகடித்து வெளியேற்றியுள்ளது ஒன் இந்தியா நிறுவனம் என்று குமறுகிறார்கள் அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.
தமிழ்நாடு செய்தியாளர்கள் களத்தை செம்மைப்படுத்துவதற்காக முனைப்பு காட்டி வரும் சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க உத்தரவிட்டபோது, எண்ணற்ற அறிவுரைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியது. ஆனால், அதில் ஒரு வரி கூட, உண்மையான, உழைப்புக்கு அஞ்சாத, நேர்மையான ஊடகவியலாளர் யாராவது பாதிக்கப்பட்டால், அதுவும் நிர்வாகத்தினரால் பாதிக்கப்பட்டால், அந்த ஊடகவியலாளர்களுக்கான நியாயத்தை தேடி தரும் வழியிலான ஒரு வார்த்தை, தீர்வு காணப்தற்கான வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று.
கொரோனோ பேரிடர் காலத்தில், காற்றில் கிழிந்து போன பட்டம் போல ஊடகவியலாளர்களின் வாழ்க்கை மாறியிருக்கும் இன்றைய சூழலில், அறிவழகனுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்திற்கு தீர்வு காண, எந்த அமைப்பு தயாராக இருக்கிறது?