Sat. May 4th, 2024

அதிமுகவினர் கூட்டணியில் இருந்து பாமக திடீரென விலகியுள்ளது இரண்டு கட்சித் தொண்டர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அதிமுக. வுடனான கூட்டணி முறிவுக்கான காரணமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்வைத்து உள்ள கருத்து அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதமாக மாறியிருக்கிறது..

மருத்துவர் ராமதாஸின் நேற்றைய பேச்சு அதிமுக முன்னணி தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது..

மருத்துவர் விமர்சனம் இதோ…

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை; நம்மால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன, அவர்களால் நமக்கு எந்த பலனும் இல்லை.

சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா?

சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை; ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என நேற்றைய காணொலிக் காட்சி கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்கியுள்ளார்..

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாமக இணையும் என அக்கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், ஏன் அன்புமணி ராமதாஸே அதற்கான முயற்சிகளில்தான் ஈடுபட்டு வந்த போது ராமதாஸ் திடீரென அதிமுக.வுடன் கூட்டணி என்று அறிவித்தார். அப்போது ஆளும்கட்சியாக இருந்த இபிஎஸ் தலைமையிலான ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருந்த போதும் தனது மகனை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்ற சுயநலத்தால் பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தார் ராமதாஸ்.. அப்போதே அவரின் ராஜதந்திர அரசியல் பல்வேறு தளங்களில் கேலிக்குள்ளானது..

அந்த தேர்தல் கற்றுக் கொடுத்த பாடத்தில் இருந்தும் திருந்தாத ராமதாஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணியிலேயே நீடித்தார்.. ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணவோட்டத்திற்கு எதிராக அதிமுக- பாஜக கூட்டணியிலேயே பாமக நீடித்தற்கு அரசியல் கணக்குகளை கடந்து ராமதாஸ் – இபிஎஸ் இடையே இருந்த தனிப்பட்ட லாப நோக்கம் தான் காரணம் என பாமக.வின் அடிமட்ட தொண்டர்களும் உணர்ந்தே இருந்தார்கள்.. இருப்பினும் தேர்தல் களத்தில் இரண்டு கட்சித் தொண்டர்களும் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள்.. ஆனால் பாஜக மீது இருந்த கோபத்தால் அதிமுக.வை பழி வாங்கியதை போலவே பாமக.வையும் மக்கள் புறக்கணித்தனர்.

மக்களின் மனநிலைக்கு மாறாக எடுத்த முடிவுதான் தேர்தல் தோல்விக்கு காரணமே ஒழிய அதிமுக.வுக்கு சரியான தலைமை இல்லாதது இல்லை என்பது உலகமே அறிந்து விஷயம்.. ராமதாஸும் இதை உணராதவர் இல்லை.. இன்றைய அரசியல் களத்தில் திமுக பலன் அடைந்தாலும் பரவாயில்லை; அதிமுக பயனடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே ராமதாஸ் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளார்..

இக்கட்டான நேரத்தில் துணை நிற்பவனே உண்மையான கூட்டாளி என்ற தத்துவம் அரசியலுக்கு பொருந்தாது என்பது ராமதாஸின் தற்போதைய அரசியல் நடவடிக்கை மூலம் இபிஎஸ் இப்போது புரிந்து கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்..

அரசியலை கடந்து ராமதாஸுடனான கூட்டணிக்கு அதிக விலை கொடுத்து விட்ட இபிஎஸ், ராமதாஸின் விமர்சனம் மூலம் ஏற்பட்ட மனவலியில் இருந்துவிடுபடுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்கிறார்கள் அவர்கள்…

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் என்றால் ராமதாஸ், தனது ஒரே மகன் அன்புமணியின் வெற்றியை மட்டுமே மனதில் வைத்து முடிவெடுப்பார்.. அந்தளவுக்கு அவரின் மகனின் வெற்றி ராமதாஸுக்கு முக்கியம்.. ஆனால் கீழ்மட்ட அளவில் பாமக நிர்வாகிகளுக்கு ஒரு பதவி கிடைக்கும் என்றால், அவர்களின் அரசியல் வெற்றியை பற்றி கவலைப்பட மாட்டார்.. அப்போது தான் பாமக. வின் சுயமரியாதை எல்லாம் ராமதாஸூக்கு நினைவுக்கு வரும்..

ராமதாஸின் உண்மைக் குணம், அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு புரியாத வரை ராமதாஸ் காட்டில் கனமழை தான் என்று மனம் வெதுப்பி பேசுகிறார்கள் பாமக. வில் இருந்து வெளியேறிய முன்னணி தலைவர்கள்…