Fri. Mar 29th, 2024

மூன்று நாள் விடுமுறைக்கு இன்று சட்டப்பேரவைக் கூடியது. கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, நீட் விவகாரம் மற்றும் வாணியம்பாடி சமூக ஆர்வலர் படுகொலை ஆகிய விவகாரத்தை முன்வைத்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வாணியம்பாடி சமூக ஆர்வலர் கொலை நிகழ்வில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பபட்டிருப்பதாகவும், சமூக ஆர்வலர் விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததற்காக வாணியம்பாடி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, வாணியம்பாடி கொலை சம்பவம் போன்ற சம்பவங்களை இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர், அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு காரணமாகதான் அனிதா தற்கொலை செய்து கொண்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும்,மாணவர் தனுஷின் தற்கொலைக்கு அதிமுக அரசுதான் காரணம் என்றும் இன்றைய சட்டப்பேரவையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனை நிறைவேற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, அவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து வந்திருந்தனர்.

வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு தொடர்பாக திமுக தலைவர்கள் எதிராகவே பேசி வந்தார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பேசி வந்தனர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் நினைத்து, தேர்வுக்கு தயாராகாமல் குழப்பமான மனநிலையில் இருந்துவிட்டனர் என்று கூறினார்.