12ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவின் முழு விவரம்….:
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வலிமையான சட்ட முன்வடிவை பேரவையில் முன்மொழிகிறேன்.
கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலை நிறுத்தவும், மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் நீட் விலக்கு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது; சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.
நீட் தேர்வு காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தகர்ந்துள்ளது.
நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
நுழைவுத்தேர்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திமுக அரசு; தொடக்கத்திலிருந்தே திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது – நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது தெரிவித்தார். .