Fri. May 17th, 2024

தந்தை பெரியாருக்கு 100 கோடி ரூபாயில் சிலை வைப்பதில் தவறில்லை; முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பளிச் பதில்…

தந்தை பெரியாருக்கு, திருச்சி சிறுகனூரில் 100 கோடி செலவில் 95 அடி உயரத்தில் சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தார். அவரின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொது நல அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணனும் பெரியாருக்கு சிலை வைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்றுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கலந்துகொண்ட பொன் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது
தந்தை பெரியாருக்கு சிலை வைப்பதில் எந்த தவறும் இல்லை. மறைந்த தலைவர்களின் நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும். இந்த அடிப்படையில் வ.உ.சி.க்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையையும் வரவேற்கத்தக்க ஒன்றுதான். மேலும், தொல்லியல் ஆய்வுகளையும் மேம்படுத்தவும், விரைவுப்படுத்தவும் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரியவை. தமிழினின் தொன்மையாக கண்டறிய மேலும் பல ஆய்வுகளை புதிதாக மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், குமரி கண்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான். தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும். சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரை மாநகரை தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.