Thu. Nov 21st, 2024

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று (07.02.2021)திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கினார்.அப்போது போரூர் சந்திப்பில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர் அ.தி.மு.க.வுக்காக ஆதரவு திரட்டினார். அப்போது முதல்வர் பேசியதாவது:

,நான் சொல்வதையே முதல்வர் செய்கிறார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதைத் தான் ஸ்டாலின் சொல்கிறார். கடைசி வரை திமுக சொல்லிக்கொண்டே தான் இருக்கப்போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது. விவசாயிகள் படும் சிரமங்கள் என்ன? என்பது எனக்கு தெரியும் என்பதால் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம்.

சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிய பின்னர் மக்களை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர்கள் அ.தி.மு.க.வினர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

“ஸ்டாலின் கூறியதால் பயிர்கடனை ரத்து செய்யவில்லை. கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன். வறட்சிக்காக நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பொன்னேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்” என்று முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.