Sat. Nov 23rd, 2024

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், தேர்தல் கூட்டணி, பிரசார வியூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

இதனையடுத்து, சட்டமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் தயாராக வேண்டும் என்று இருவரும் வட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்.

“அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில், கழக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகள் அனைவரும் கழகப் பணிகளை கடமை உணர்வோடு எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலையொட்டி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை பிரச்சாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் விரிவாக கொண்டு சேர்த்து “எனக்குப் பின்னாலும் இன்னம் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி அ.தி.மு.க.விற்கு வெற்றியை ஈட்டுவது குறித்து, ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் என்றுஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.