Sun. May 5th, 2024

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சயானிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை, இதுவரை நடத்தி வந்த வழக்கின் விசாரணையின் போக்கையையே தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. சட்டப்பேரவையிலேலே அதன் அதிர்வுகள் எதிரொலித்தன. சமானின் வாக்குமூலம் வெளியாவதற்கு முன்பே அதிமுக முன்னாள் தன்முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் இந்த பிரச்னையை எழுப்பி கோடநாடு கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க அரசியல் சதி நடப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். திமுக அரசு பொய் வழக்குப் போடுவதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு, தர்ணா போராட்டம் என அதகளப்படுத்தினர்.

இதன் பின்னர், நாள்தோறும் தொலைக்காட்சி விவாதங்களில் கோடநாடு கொலை வழக்குப் பற்றிய சிறப்பு செய்தி, விவாதம் இல்லாமல் ஒருநாளும் கடந்து போனது இல்லை.

ஊடகங்களில் கோடநாடு கொலை வழக்கை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுக்கு முக்கிய மூளையாக இருந்த எடப்பாடி பழனிசாமி ஊரைச் சேர்ந்தவரும், அப்போது காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் மீண்டும் பேசுப் பொருளாக மாறியிருக்கிறது. இப்படிபட்ட பின்னணியில் அவரது அண்ணன் தனபாலிடம் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேறகொண்ட அதிரடி விசாரணையும் தமிழக அரசியலை கொதி நிலையிலேயே தொடர்ந்து வைததிருக்க செய்துவிட்டது. மேலும், நிகழ்வு நாளன்று பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று உதகை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற பது, முழுமையான விசாரணை நடத்த கால அவகாசம் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, அதற்கு 4 வார கால அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணப்பாளர் தலைமையில் வழக்கில் தொடர்புடைய அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்த நேற்று தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முழு விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கை விரைந்து விசாரிக்க 5 தனிப்படையிலும் தலா 5 காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துணை கண்காணிப்பாளர்கள் சந்திரசேகர், சுரேஷ், காவல் ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒரு தனிப்படை விசாரணையில் பட்டையை கிளப்பி வர, இன்று அமைக்கப்பட்டுள்ள 4 தனிப்படைகளும் விரைவில் விசாரணையை துவக்கி, உண்மையான குற்றவாளிகள் நிம்மதியாக தூங்க முடியாத அளவுக்கு அதிரடி காட்டுவார்கள் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கிறார்.