Sun. May 19th, 2024

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு( IPCC ) அண்மையில் வெளியிட்டுள்ள Climate Change 2021: the Physical Science Basis என்கிற அறிக்கை குறித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டுளளனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட தூத்துக்குடி எம்.பி.யும், அக்கட்சியின் மகளிர் அணி மாநிலச் செயலாளருமான கனிமொழி பேசியதாவது :

உலகம் வெப்பமயமாதலின் விளைவுகள், வாழ்வாதாரத்தில் அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தன்னார்வ பொதுநல அமைப்புகள், வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இனி ஒன்றிய அரசும் மாநில அரசுகளும், முன்னெடுக்கும் எல்லாத் திட்டங்களும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு அமைய வேண்டும். காலத்தின் தேவை கருதி, இந்தக் கருத்தரங்கை முன்னெடுத்த பூவுலக அமைப்பிற்கு எனது நன்றி.

இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.

இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, உள்பட பலர் கலந்துகொண்டு கருத்துகளை எடுத்துரைத்தனர்.