Thu. May 9th, 2024

சட்டப்பேரவையில் நேற்று தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக ரூ. 317 கோடியில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினமே வரவேற்பும் பாராட்டும் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு இன்று வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஈழ அகதிகளுக்கு வீட்டு வசதி, குடிநீர் வசதி, மாத உதவித்தொகை, கல்வி உதவித் தொகை ஆகியவற்றுக்காக ரூ.317 கோடியில் 10 புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈழ அகதிகள் நலன் காக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது!

ஈழத்தமிழ் அகதிகளின் நீண்ட நாள் கோரிக்கை மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தேவை என்பதாகும். இது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு, கலைஞர் ஆட்சியில் கட்டண விலக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறந்த திட்டம். இது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!

ஈழத்தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வியில் சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதில் சட்ட சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், அதைக் களைந்து மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

இவ்வாறு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.