தச்சூர் -சித்தூர் உயர்மட்ட விரைவு சாலை மாற்று வழியில் செயல்படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 7ல் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பிஆர் பாண்டியன் அறிவித்துள்ளார்…
தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு தலைமை ஏற்றார்.
சிறப்பு விருந்தினராக பிஆர் பாண்டியன் பங்கேற்று விவசாயிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி விவசாயிகள் பிரச்சினை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்வதில் அனைத்து மாவட்டங்களிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வரக்கூடிய நெல்லை காரணங்காட்டி விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வது தடை செய்வது ஏற்கத்தக்கதல்ல. பலமுறை எடுத்துச் சொல்லியும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதலை தொடர்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது.இதனால் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே விளைவிக்கப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலைய வாயிலில் கொட்டி வைக்கப்பட்டு அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையில் நனைந்து சின்னாபின்னமாகிறது. இதனால் விவசாயிகள் மனமுடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 42 இடங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவித்து 6 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் கொள்முதல் நடைபெறவில்லை. அப்படி நடைபெறக்கூடிய இடங்களிலும் 100 மூட்டைக்கு மேல் கொள்முதல் செய்வது கிடையாது.இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும்.
கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு விவசாயிகளும், வணிகர்களும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்நிலையில் தற்போது மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அறிந்து விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.இதனை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
கூட்டுறவு வங்கிகள் கடன் விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் வருமான வரி செலுத்தும் அடையாள அட்டை (பான் கார்டு)கட்டாயம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது மறைமுகமாக விவசாயிகள் தலையில் வரியை விதிக்கும் நடவடிக்கையாக தெரிகிறது.இதனை தமிழக அரசு கைவிட வேண்டும்.
உச்சநீதிமன்றம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகளை மத்திய அரசு தன் வசப்படுத்தியது தவறானது என சுட்டிக்காட்டி,அத்தகைய உத்தரவை ரத்து செய்துள்ளது.இதனை பின்பற்றி தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளை தமிழக அரசு மீட்டெடுக்க முன்வர வேண்டும்.
சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அதானி நிறுவனத்தால் அமைக்கப்பட இருக்கிற துறைமுகத்திற்கு தச்சூர் முதல் சித்தூர் வரையிலான உயர்மட்ட அதிவிரைவு சாலை அமைக்கும் பணிக்கு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் 18 கிராமங்களில் முப்போகம் விளைவிக்கக்கூடிய விவசாய நஞ்சை விளைநிலங்களை கையகப்படுத்த முயற்சி எடுப்பதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.
மாற்று வழியில் அரசு புறம்போக்கு மற்றும் சாகுபடிக்கு வாய்ப்பில்லாத தரிசு நிலங்களை விவசாயிகள் அடையாளப்படுத்தி உள்ளனர்.அவ்வழியே பணியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக காட்டுப்பள்ளி துறைமுகத்தை அனுமதிக்க மாட்டேன் என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இன்றைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு உறுதியளித்ததை நினைவுபடுத்த விரும்புகிறோம்.அதனை பின்பற்றி இத்திட்டம் குறித்து மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி வலியுறுத்த வேண்டும்.
விவசாயிகள் நிலத்தை அபகரிக்க எடுக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7ம் தேதி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார்.
கூட்டத்தில் சென்னை மண்டல தலைவர் வி கே வி துரைசாமி, உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதாதர்மலிங்கம், சென்னை மாவட்ட செயலாளர் சைதை சிவா,திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் வெங்கடமூர்த்தி மாவட்ட செயலாளர் செந்தில்வேலன், பொருளாளர் கோட்டீஸ்வரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்,