பள்ளி, கல்லூரிகள் அடுத்த மாதம் திறக்கப்படுவதால் கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி இருக்கிறது.
இதுவரை 36.8 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 25.7 லட்சம் பேர் முதல் டோஸ் போட்டுள்ளார்கள். 11 லட்சம் பேர் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளார்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது 30 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளார்கள்.
மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவானது. சென்னை போன்ற பெருநகரங்களான கொல்கத்தாவில் 52.96 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். மும்பையில் 86.65 லட்சம் பேரும், பெங்களூரில் 96.16 லட்சம் பேரும், டெல்லியில் 1.22 கோடி பேரும் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.
மக்களிடம் ஆர்வம் இருக்கிறது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகத்தான் பலரால் போட்டுக்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
மற்ற பெருநகரங்களை விட பின்தங்கி இருப்பதால் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே 47 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது. மார்க்கெட் பகுதிகள், நிறுவன பகுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் 30 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டு இருப்பதால் 3-வது அலை பரவ அதிக வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டால் மட்டுமே ஓரளவு பாதுகாப்பான சூழ்நிலையை எதிர்பார்க்க முடியும் என்று வைராலஜிஸ்ட் நிபுணர்கள் கூறி உள்ளனர்.
வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்களை நடத்த மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
முதல் டோஸ் ‘கோவேக்சின்’ போட்டவர்களில் 4 லட்சம் பேர் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 2-வது டோஸ் போட முடியாமல் இருக்கிறார்கள்.
அப்பல்லோ மருத்துவமனையில் 5 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் விலைக்கு வாங்கி கட்டணம் வசூலித்து தடுப்பூசி போடுகிறார்கள்.
ஆனால் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வமில்லை. எனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களின் பொது சேவை நிதியின் கீழ் வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இப்போது அமைக்கப்பட்ட முகாம்கள் மக்கள் வெகுதூரம் சென்று தடுப்பூசி போடும் நிலையில் இருக்கிறது. எனவே மக்கள் எளிதில் அணுக கூடிய இடங்களில் முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
அதன்படி சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தலா ஒரு நிரந்தர தடுப்பூசி மையம் என்று 200 மையங்கள் திறக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் அடுத்த மாதம் திறக்கப்படுவதால் கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தினமும் ஒவ்வொரு மண்டலத்திலும் 3 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை தேர்வு செய்து அங்கு சென்று தடுப்பூசி போடவும் முடிவு செய்துள்ளார்கள்.
80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது.
இந்த திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே 463 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 37 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டார்கள். நேற்று மட்டும் 164 பேர் பதிவு செய்துள்ளார்கள். 80 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோருக்கும் தடுப்பூசி போடும் வரை இந்த திட்டம் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்
80 வயதை தாண்டியவர்கள் 1.65 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் இதுவரை 90 ஆயிரத்து 153 பேர் தடுப்பூசி போட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.