திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மருமகள் என்ற அந்தஸ்தில், கலைஞர் குடும்பத்தின் அங்கத்தினராக மாறிய திருமதி துர்கா ஸ்டாலினுக்கு, 24 மணிநேரமும் அரசியல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த கோபாலபுரம் இல்லம் மகிழ்ச்சியளித்ததோ இல்லையோ, கலைஞரின் இல்லத்தையொட்டி அமைந்திருக்கும் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் மணியோசை மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.
சிறுவயதில் இருந்தே முழுமுதற் கடவுளாகவும், காக்கும் தெய்வமுமான திருமால் மீது அலாதியான, ஆத்மார்த்தமான பக்தி கொண்ட திருமதி துர்கா ஸ்டாலின், புகுந்த வீடான கலைஞர் இல்லத்தின் உறவுகளில் வித்தியாசமானவராக காட்சி தந்தார். தனது மாமனார் அதிதீவிர பகுத்தறிவாளராக இருந்த போதும், மாமியார் தயாளு அம்மாளின் கருணை உள்ளத்தால் திருமதி துர்கா ஸ்டாலின், தன் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆட்கொண்டிருந்த பக்தியில் எந்தவிதமான இடர்பாறும் இன்றி ஆன்மிகப் பாதையில் போலித்தனம் இல்லாமல் பயணித்தார்.
கடவுள் பக்தியில் அவருக்கு எந்தளவுக்கு ஈடுபாடு உள்ளதோ, அதில் கடுகு அளவு கூட குறைந்துவிடாமல், தன் கணவரும், திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் உண்மையான தளபதியாக விளங்கிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்பதிலும் தணியாத தாகம் கொண்டரவாக அவர் வாழ்ந்தார்.
பக்தி பெரிதா, தன் கணவர் முதல்வர் நாற்காலியில் அமர்வது பெரிதா என்ற கேள்விக்கு இரண்டையுமே விட்டுகொடுத்துவிட முடியாத மனநிலைதான் அவருக்கு இருந்தது,இருந்துக் கொண்டிருக்கிறது என்று அவருக்கு மிக,மிக நெருக்கமான நட்பு வட்டாரங்கள் மனநெகிழ்சசியோடு சொல்லி வருகிறார்கள்.
அந்த வகையில், கலைஞர் உயிரோடு இருந்த போதும், அவரது மறைவுக்கு பிறகும் சரி. எப்போதும் போல ஆலயங்களை தேடிச் செல்லும் யாத்திரையை திருமதி துர்கா ஸ்டாலின் குறைத்துக் கொண்டதே இல்லை. இன்றைக்கு முதல்வராக ஆட்சி பரிபாலணம் செய்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, அந்தப் பதவியும் பொறுப்பும் காலம் தாழ்ந்துதான் கிடைத்திருக்கிறது என்றாலும் கூட, அந்த பதவியில் அமர்வதற்கு திமுக தொண்டர்களின் உழைப்பு, பொதுமக்களின் அனுதாபம், அதிமுக அரசின் மீதான வெறுப்பு உள்ளிட்ட காரணங்கள் எல்லாம் எப்படி முக்கியமானதோ, அதற்கு சற்றும் குறைத்து மதிப்பிடாத அளவுக்குதான் திருமதி துர்கா ஸ்டாலினின் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும், விரதங்களும், யாகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதல் அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட நேரத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்….. என்று உச்சரித்துவிட்டு திரண்டிருந்த கூட்டத்தை தலை நிமிர்ந்து பார்த்த போது, மு.க.ஸ்டாலின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளுக்குப் பின்னால், எத்தனை வேதனைகள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள் எல்லாம் மறைந்திருந்ததோ, அதில் நெல்மணியளவுக் கூட குறையாமல், திருமதி துர்கா ஸ்டாலின் உள்ளத்திலும், உடலிலும் அலையென எழுந்த உணர்வுகள், அவரையும் அறியாமல் கண்கலங்க வைத்தது, கண்ணீர் விட வைத்தது. அவரின் பத்தாண்டுகளுக்கு மேலான வேண்டுதல்களின், பக்தியின், விரதத்தின் பலன் அது என்பது, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, திமுக.வின் முன்னணி தலைவர்களுக்கு மட்டுமல்ல, மு.க.ஸ்டாலினுக்கும் உளப்பூர்வமாகவே தெரியும்.
இப்படி தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காகவே தியாகம் செய்த திருமதி துர்காவுக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தியாகத்தைக் கூட செய்யவில்லை என்று ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்கள், திருமதி துர்காவின் நலம் விரும்பிகள்.
ஆலய தரிசனம் என்பது திருமதி துர்கா ஸ்டாலினுக்கு ஆனந்தத்தை தரக் கூடிய அம்சமாகும். முதல்வர் அரியாசனத்தில் மு.க.ஸ்டாலின் அமர்ந்த பிறகு, தனிப்பட்ட பயணமாக திருப்பதி சென்று வந்தார் திருமதி துர்கா ஸ்டாலின். சராசரி செல்வந்தர் குடும்பத்து பக்தைக்கு கிடைக்கும் சிறப்பை விட சிறிய அளவிலான மரியாதைதான் திருமதி துர்கா ஸ்டாலினுக்கு கிடைத்தது.
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் திருமதிகளுக்கு, முதல் அமைச்சரின் மனைவி என்ற அந்தஸ்தில், திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு மரியாதையை வழங்கி கௌரவித்தது.
முதல் அமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி..க்களுக்கு திருப்பதி கோயில்களில் சிறப்பு மரியாதை செய்யப்படுவது நடைமுறை. வி.ஐ.பி.யுடன் செல்லும் உறவுகளுக்கும், குறிப்பாக அவர்களது திருமதியினருக்கும் அந்த சிறப்பு மரியாதை வழங்கப்படும். ஆனால், அந்த மரியாதை திருமதி துர்கா ஸ்டாலினுக்கு கிடைக்கவில்லை.
தன் அன்புக்குரியவர் முதல் அமைச்சராக இருந்த போதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் செல்லாததால், அந்த வி.ஐ.பி..க்கான சிறப்பு மரியாதை திருமதி துர்கா ஸ்டாலினுக்கு கிடைக்கவில்லை. பகுத்தறிவு கொள்கையில் ஊறிப்போன முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பதி கோயில் பயணம் என்பது சாத்தியப்படாத ஒன்று.. அதனால், எத்தனை முறை திருமதி துர்கா ஸ்டாலின், திருப்பதி போனாலும், முதல் அமைச்சரின் மனைவியாக அவரை கருதி இனிவரும் காலங்களிலாவது சிறப்பு மரியாதை வழங்குவது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் யோசிக்குமா? அதற்கும் பதில் இல்லை இப்போது.
வாழ்நாள் முழுவதும் முதல் அமைச்சர் அரியாசனத்தில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பதை பார்க்க, உருகி உருகி பிரார்த்தனை செய்த திருமதி துர்கா ஸ்டாலினுக்கு, அந்த பாக்கியம், மரியாதைக்குரிய சிறப்பு எப்போது கிடைக்கும்? விடை இல்லை. மற்ற வி.ஐ.பி.க்களின் மனைவிகளாவது திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் சிறப்பு மரியாதையை கௌரவமாக கருதுவார்களே தவிர, திருமதி துர்கா ஸ்டாலினுக்கு அப்படியொரு சிறப்பு மரியாதை கிடைத்தால், இதயம் முழுவதும் நிறைந்திருக்கும் சாட்சாத் அந்த பெருமாளே நேரில் தோன்றி தன்னை ஆட்கொண்டதாக பூரித்து போய்விடுவார் திருமதி துர்கா ஸ்டாலின் என்கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமான நட்பு வட்டாரங்கள்.
தன் வாழ்நாளில் தீர்வு காண முடியாத இப்படியோரு சோகத்துடனேயே இருந்தாலும் கூட, வாழ்நாள் முழுவதும் இறை பக்தியிலேயே கரைந்து கொண்டிருக்கும் திருமதி துர்கா ஸ்டாலின் திமுக, ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில், ஆண்டவனுக்கு உண்மையான சேவை செய்யும் வாய்ப்பாக ஆட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இந்தக் கட்டுரையின் கரு.
திருமதி துர்கா ஸ்டாலினுக்கு நிம்மதியளிக்கும் விதத்தில்தான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது என்றாலும் கூட, ஆலய விஷயங்களில் எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகமும் நடந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் திருமதி துர்கா ஸ்டாலின் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஆலயங்களுக்கு சிற்பபுசேர்க்கும் செயல்பாடுகளை எல்லாம் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கும் திருமதி துர்கா ஸ்டாலின், கோயில் தொடர்பான நடவடிக்கைகளில் 100 சதவிகிதம் நேர்மை இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலோசனைகளை அழுத்தமாக வைத்து வருகிறாராம்.
தனது இல்லத்தரசின் ஆலோசனைகளை அப்படியே ஏற்று செயல்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், தெய்வத்தின் குரல் என்று சொல்வார்களே, அதுபோல, முதல் அமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் சுதீஷ் ஐஏஎஸ், ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வு மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்களில் வேலைவாய்ப்பு கேட்டு ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் ஆராய்ந்து தகுதி அடிப்படையில் ஆயிரக்கணக்கானோரை தேர்வு செய்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் ஷெட்டி ஐஏஎஸ். அவர்களுக்கு எந்த துறையில் பணி நியமனம் வழங்கலாம் என்று முதல்வரிடம் ஆலோசனைக் கேட்டிருக்கிறார் ஷில்பா பிரபாகர் சுதிஷ் ஐஏஎஸ். அப்போது ஒருநிமிடம் கூட யோசிக்காமல், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அவர்களை பணியாளர்களாக நியமித்துவிடுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எந்தவிதமான சிபாரிசுக்கும் இடமின்றி, துறை அமைச்சரின் தலையீடு இன்றியும் ஒரு பைசா செலவில்லாமல் கோயில் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்குதான் இன்றைய தினம் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நூற்றுக்கும் மேற்பட்ட. குடும்பங்களில் ஒளியேற்றி வைத்துள்ளார் திருமதி துர்கா ஸ்டாலின்.
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் இறைவன் என்பதை போல, இன்றைக்கு பணி நியமனம் பெற்றுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரின் அரசாணையிலும் திருமதி துர்கா ஸ்டாலினின் உருவம் வாட்டர் மார்க் போல மறைந்து ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பு
பத்திரிகை தர்மத்திற்குட்பட்டு திருமணமானவர்களின் பெயர்களுக்கு முன்னால் திருமதி என்ற அடைமொழியை வழக்கமாக சேர்ப்பதில்லை. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் குடும்ப வாழ்க்கை ஒளிமயமாக மாற அடித்தளமாக இருந்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே, செய்தியிலும் சிறப்பு மரியாதை வழங்க வேண்டும் என்பதற்காக திருமதி என்ற அடைமொழியோடு குறிப்பிட்டிருக்கிறோம்.