முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் இரண்டு முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். அந்த இரண்டு நிகழ்வுகளும் தமிழர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரக் கூடிய நிகழ்வுகளாகும். ஆனால், அந்த இரண்டு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை முழுமையாக பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் செய்தித்துறை கோட்டை விட்டுவிட்டதாக, திமுக தலைமையிலான தமிழக அரசின் மீதான அக்கறை கொண்டுள்ள, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகத் திறனை பரப்பிக் கொண்டிருக்கும் அவரது நலம் விரும்பிகள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
நேற்று காலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் புதிய மற்றும் விரிவாக்க கிடங்கு மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, அமேசான் நிறுவனத்தின் அதிகாரி ஸ்மிர்தி சர்மா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேபோல், கோவையில் நடைபெற்ற நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
தலைமைச் செயலகம் மற்றும் கோவை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வு குறித்து, முதல்வர் மற்றும் கோவையில் அமைச்சர்கள் பங்கேற்றதை மட்டுமே நான்கு, ஐந்து வரிகளில் படக்காட்சி விளக்கம் போல குறிப்பு எழுதி வெளியிட்டுவிட்டு, அதோடு தங்கள் பணியை முடித்துக் கொண்டது தமிழ்நாடு செய்தித்துறை.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் துவக்கி வைத்த நிகழ்வை தொலைக்காட்சிகள் செய்தியாக வெளியிட்டனவே தவிர, அமேசான் நிறுவத்தின் கிடங்கு மையங்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு என்னவெல்லாம் பயன்கள் கிடைக்கப்போகிறது என்பதை விரிவாக வெளியிடவில்லை. அதைவிட கொடுமையாக, செய்தித்துறையும், தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்பட காட்சி குறிப்பை மட்டுமே வெளியிட்டுவிட்டு, முதல்வர் துவக்கி வைத்த நிகழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றிய செய்தியை மக்களுக்கு விரிவாக விளக்கும் பணியில் இருந்து தவறிவிட்டது.
அமேசான் உள்ளிட்ட இணைய தள விற்பனை நிறுவனங்கள் மீது தமிழ்நாட்டில் உள்ள வணிர்களும், இந்திய அளவிலான வியாபாரிகளும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் அமேசான் நிறுவனம் புதிய கிடங்குகளை அமைப்பது தொடர்பாகவும், விரிவாக்கம் செய்வது தொடர்பாகும் பல்வேறு சந்தேகங்கள் வணிகர்கள் தரப்பில் எழுப்பப்படுகிறது. மேலும், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிராக டெல்லி வியாபார மகாசங்கம், இந்தியப் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றமும் பன்னாட்டு இணைய தள வணிக நிறுவனங்களுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதெல்லாம், நாடு முழுவதும் வணிகர்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படிபட்ட பின்னணியோடு, அமேசான் நிறுவனம் தமிழகத்தில் ஆழமாக கால் ஊன்றுகிறதோ என்ற சந்தேகம், நேற்றைய நிகழ்வின் மூலம் தமிழக வணிகர்களிடம் எழுந்துள்ளது. இதனை போக்கும் விதமாக, அமேசான் நிறுவன நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளை மக்களிடம் முழுமையாக கொண்டு செல்ல செய்தித்துறை தவறிவிட்டது என்பதுதான், திமுக அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ள தொழில் முனைவோர்களின் வருத்தமாக இருக்கிறது.
அமேசான் நிறுவனத்தின் கிடங்கு மையம் துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள், முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்றில் கூட இடம் பெறவில்லை. ஆங்கில நாளிதழ்களில் ஒன்றிரண்டில் மட்டுமே சுருக்கமாக செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும், அமேசான் நிறுவத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அதில், பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும், அமேசான் போன்ற நிறுவனங்கள் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தில் முதலீடு செய்வதை தமிழக அரசு வரவேற்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே சிறு,குறு தொழில் நிறுவனங்களை அதிகமாக கொண்ட மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாகவும், திறன் வாய்ந்த பணியாளர்களை கொண்ட மாநிலமாகவும், இதுபோன்ற சிறப்பு அம்சங்களால் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் அபார வளர்ச்சிப் பெறும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும், அமேசானின் கட்டமைப்புகள் மூலம் தமிழக தயாரிப்புகளின் விற்பனைக்கும், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும் மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பேச்சு முரசொலி நாளிதழ் உள்பட எந்தவொரு தமிழ்நாளிதழிலும் இடம் பெறவில்லை. முதல்வரின் உரை குறித்து அமேசான் நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிடும் அளவுக்கு அக்கறை காட்டியுள்ள போது, தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை, நான்கு வரி புகைப்பட விளக்கத்தோடு, இந்த நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
முதல் அமைச்சர் அலுவலகம் தொடங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலகம் வரை, செய்தித்துறையில் குறைந்தது 50 அலுவலர்களாவது பணிபுரிவார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரையை, முழுமையாக தமிழில் தயாரித்து, நாளிதழ்களுக்கு வழங்கும் அளவுக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதை விட, ஒரு அதிகாரி கூட அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பது எவ்வளவு கவலையளிக்கக் கூடியது என்கிறார்கள் தொழில் முனைவோர்கள்.
மற்றொரு நிகழ்வு, இந்து சமய அறநிலையத்துறை தொடர்பானது. தமிழில் அர்ச்சனை முறையை முனைப்பாக அமல்படுத்ப்பட்டு வரும் நேரத்தில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு உதவும் 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். 12 நூல்கள் பற்றிய எந்தவொரு விரிவான விளக்கப் குறிப்பும் செய்தித்துறை வெளியிடவில்லை. தமிழில் அர்ச்சனை என்ற தமிழக அரசின் புரட்சிக்கரமான திட்டம், நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இன்றைய நிலையில், 12 இறைவன் போற்றி பாடல் நூல் வெளியீட்டிற்கு செய்தித்துறை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் என்பதுதான் பக்தர்களின் கேள்வியாக உள்ளது.
ஆகம விதிகளை காரணம் காட்டி தமிழில் அர்ச்சனைக்கு எதிராக வலுவான பிரசாரத்தை ஒரு தரப்பினர் வெறித்தனமாக செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழில் அர்ச்சனை திட்டத்தை முனைப்போடு முன்னெடுக்கும் தமிழக அரசுக்கு ஆதரவாக பக்தர்களை திரட்டுவதற்கு இதுபோன்ற நிகழ்வுகளை மாபெரும் பிரசாரமாக கொண்டு செல்வது செய்தித்துறைக்குதான் அதிமாக பொறுப்பு உண்டு என்பதும் பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.
12 நூல்களின் பெயர்களைக் கூட செய்தித்துறை முழுமையான தகவல்களோடு வெளியிடவில்லை. தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கு செய்தி அறிக்கைகள் தரப்பட்டாலும் கூட, நேரம் மற்றும் இடவசதி ஆகியவற்றின் அடிப்படையில்தான் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகும். இன்றைக்கு சமூக ஊடகங்கள் அதிகரித்துவிட்டன. செல்போன் வைத்திருப்போர் அத்தனை பேரும் வாட்ஸ் அப் குழு வைத்திருக்கிறார்கள்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், தனது மாவட்டச் சுற்றுப்பயணத்தின் போது என்ன மாதிரியான உணவு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய தனிப்பட்ட சுற்றறிக்கையையே வைரலாக்கிய பெருமை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்கு உண்டு. இப்படிபட்ட நேரத்தில், தமிழ்நாடு செய்தித்துறையின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை வெறும் நான்கு வரி புகைப்பட விளக்கத்தோடு முடித்துக் கொள்வது, திமுக அரசுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையாது என்பதுதான் மூத்த ஊடகவியலாளர்களின் ஆதங்கமாக உள்ளது.
டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களில் செய்தித்துறை இன்னும் விழிப்புடன், மிகுந்த உத்வேகத்துடன் செயல்படும் வகையில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் வி.சாமிநாதன் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.