Sun. Nov 24th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்நாள் கனவு, சென்னை நகரை சிங்கப்பூர் நாட்டிற்கு மேலாக சிங்கார சென்னையாக்க வேண்டும் என்பதுதான். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் கனவு, அடையாறு கூவம் ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறும் வேண்டும் என்பதுதான்.இரண்டு கனவுகளையும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் தலைவர்கள் நினைத்தாலும்கூட, கோடி கோடியாய் நிதிகளை ஒதுக்கினாலும் கூட நிறைவேற்ற முடியாது. அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆளுமைத் திறமை கொண்ட அரசு அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பும் அதிகம் வேண்டும்.

அப்போதுதான் வளமான தமிழகத்தை உருவாக்க கனவு காணும் தலைவர்களின் கனவுத் திட்டங்கள் சாத்தியமாகும். அப்படிபட்ட சூழல், இன்றைய சென்னை நகரில் நிலவுகிறதா ? என்பது கேள்விக்குறிதான். ஆனால், எண்ணித் துணிக கருமம் என்ற உறுதியோடு களம் இறங்கினால் எதுவும் சாத்தியமே என்பதற்கு பல்வேறு உதாரணங்களை காட்ட முடியும் என்றாலும், கண் முன்பே மாற்றங்களை வெகு வேகமாக கண்டு கொண்டிருக்கும் இடத்தை எடுத்துக் கொள்ளலாம்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி. திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் தொகுதியாக இருந்திருக்கிறது முதல் அமைச்சர் தொகுதியாக இருந்த காலத்தில் அந்த தொகுதி பெற்ற வளாச்சியை விட, கடநத 3 மாதங்களில் அந்த தொகுதியில் அடைந்திருக்கும் மாற்றம் அபரிதமானது, அலாதியானது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின், அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஏறத்தாழ 60 ஆண்டு கால வரலாற்றில் அந்த தொகுதி வியக்கத்தக்க மாற்றங்களை கண்டு வருகிறது.

மே 2 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளுக்குப் பிறகு நன்றி தெரிவிப்பதற்காக, சேப்பாக்கம் தொகுதியில் வீதி வீதியாக சென்று வந்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அரியணை ஏறிய காலமான மே 7 ஆம் தேதிக்குள் தொகுதி முழுவதும் முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கோட்டையில் அமர்ந்து, புதிய புதிய திட்டங்களில் கையெழுத்துப் போட, போட, சேப்பாக்கம் தொகுதி, தலைகீழான மாற்றத்தை காணும் வகையில் ஆவேசமாக பணியாற்றிக் கொண்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அவரின் பல்வேறு நடவடிக்கைகளை ஸ்டண்ட் (டிராமா, நாடகம்) என்றும், திரைப்படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார் என்றும் கிண்டல் செய்தார்கள் எதிர்க்கட்சியினர். அப்போதுதான், அவர்களது வாயையே ஒரு அடியாக அடைக்கும் வகையில் ஆச்சரியமூட்டும் ஒரு காரியத்தை செய்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.

குடிசைகள் நிறைந்த பகுதிக்குள் செல்வதற்கு சட்டப்பேரவை உறுப்பினாகள கால் வைப்பதற்கே அஞ்சி ஓடும் காலத்தில், அந்த பகுதிக்குள் உள்ள பயன்பாடற்ற ஒரு கழிப்பறைக்குள் எவ்வித முகச்சுளிப்பும் இன்றி சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின். அவரின் அந்த மனிதாபிமான செயல்தான், அவருக்கு எதிரான எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் வாய்ப்பூட்டு போட்டது.

திரைப்படஙகளில் கதாநாயகன் நடந்து போகும்போது, நடைபாதை எப்படி மினனல் வேகத்தில் வண்ணமயமாகுமோ, அதுபோல, நிஜத்தில், உதயநிதி ஸ்டாலின் சென்ற வந்த பாதையெல்லாம், தெருவெல்லாம் புத்தம் புது அடையாளத்தைப் பெற்றன. 10 க்கு 10 அடி குடிசை வீட்டிற்குள் எல்லாம் நுழைந்து, அங்கு வாழும் மக்களை, வெறும் வாக்காளர்களாக கருதாமல், அவர்கள்து வாழ்க்கையையும் அங்கீகரித்து அரவணைத்து அன்புக் காடடிய உதயநிதி ஸ்டாலினின் செயல் நடிப்பாக இருந்தால் கூட பாராட்டுதலுக்குரியது, போற்றதலுக்குரியது என்றுதான் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்தே வாழ்த்துகள் குவிகின்றன.

கொரோனோ தொற்று உச்சத்தில் இருந்த காலததில், தடுப்பூசி முகாம்களை அதிகமாக நடத்தி, மக்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தினார். கூடுதலாக நூற்றுக்கணக்கான படுக்கைகளை அமைத்து தற்காலிகமாக சிறப்பு மருத்துவமுகாம்களை உருவாக்கினார். மயானங்களை செம்மைப்படுத்தினார்.

கொரோனோ அச்சுறுத்தல் விலகியவுடன், கடந்த பல நாட்களாக சேப்பாக்கம் தொகுதியில் பிரபல தனியார் நிறுவனங்களை அழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தி நூற்றுக்கணக்கானோர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அடுத்த பாய்ச்சலாக, கல்வி பயில நிதியின்றி அவதிப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். இப்படி ஒவ்வொரு விடியலிலும் சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாகதான் விடிந்துக் கொண்டிருக்கிறது.

சேப்பாக்கம் தொகுதி மின்னல் வேகத்தில் மாறிக் கொண்டிருப்பதை ஏக்கமாக பார்க்கிறார்கள் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை உள்ளடக்கிய ஆளும்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர். தங்கள் தொகுதிகளிலும் இதுபோன்ற மாற்றத்தை உருவாக்க முடியுமா? என்ற கவலை வாட்டி வதைப்பதாக திமுக எம்.எல்.ஏ. பலர் மனம் வெதும்புகிறார்கள்.

முதல்வர் புதல்வர் என்ற அந்தஸ்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., இருப்பதால், அவர் கூப்பிட்ட குரலுக்கு அனைத்து துறை அமைச்சர்களும் ஓடுகிறார்கள். மக்களின் குறைகள் நிமிட நேரததில் நிவர்த்தியாகிறது. எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று புலம்புபவர்களே ஏராளம்.

ஆனால், அவர்களுக்கு ஒரு உண்மை மட்டும் உரைக்கவில்லை. முதல்வரின் புதல்வர் என்ற அடையாளத்தோடு தொடர்புபடுத்தி உதயநிதி ஸ்டாலின் உழைப்பை கேவலப்படுத்தப் பார்க்கிறார்கள் என்கிறார்கள் சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள்.

முதல்வரின் புதல்வர் என்ற அடையாளத்தை கடந்து உண்மையான அக்கறையோடு தொகுதிக்குள் வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை 24 மணிநேரமும் இயஙக வைத்துக் கொண்டிருக்கிறது.

எம்.எல்.ஏ. என்ற பட்டத்தை, அடையாளத்தை தந்த மக்களுக்கு உண்மையானவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தொகுதிக்குள் சுற்றி வந்தால், மாற்றங்கள் தன்னால் நடக்கும். உழைப்பும், முயற்சியும் மட்டுமே உயர்வைத் தரும்.

மக்களின் மகிழ்ச்சியை விட பொதுவாழ்வில் உயர்வானது எதுவும் இல்லை என்ற மனப்பாங்கு எல்லோருக்கும் வந்துவிட்டால் மாற்றம் எளிது என்கிறார்கள் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வோடு தொகுதிக்குள் வலம் வரும் உடன்பிறப்புகள்….

எண்ணித் துணிக கருமம்….