Sun. Nov 24th, 2024

முந்தைய அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை சூடு பறந்தது. ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வரை, மலை முழுங்கி மகாதேவன்கள், குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்றது, அம்பலததிற்கு வந்து சந்தி சிரித்தது.

அதிமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அவமானத்தை தேடித் தந்த குட்கா விற்பனை, சட்டத்திற்குப் புறம்பாக திமுக ஆட்சியிலும் தொடர்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் களத்தில் இறங்கி, குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுத்து நிறுத்த துணிச்சலாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மேலும், தன் துறையின் கீழ் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளையும் முடுக்கிவிட்டு, மாநிலமெங்கும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என முடுக்கிவிட்டார்.

இதேநேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினும், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் தமிழகத்தில் எந்த மூலையிலும் விற்பனை செய்யாத அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  காவல்துறை உயரதிகாரிகளுக்கு கண்டிபான உத்தரவுகளை பிறப்பித்தார்.

இப்படி திமுக அரசு போதைப் பொருட்கள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அந்தமானில் போதைப் பொருள் விற்பனையிலும், கடத்தலிலும் ஈடுபட்டதாக திமுக பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினர் உதயகுமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், அவர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல்+பதுக்கல் வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்

மேலும், திமுக கொடி கட்டிய சொகுசு காரையும் அந்தமான் தீவு காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. மத்திய அரசு அதிகாரிகளும், மேற்கு வங்க மாநில அரசு காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்தமானில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போதைப் பொருள் தடுப்பு சோதனையில் பிடிபடும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் திமுக.வைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அங்குள்ள கடின உழைப்பாலும்,நேர்மையாலும் உயர்ந்து நிற்கும் திமுக முன்னோடிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள கார்

அந்தமான் தீவு திமுக பொருளார் ரவிச்சந்திரனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தது தொடர்பான செய்திகள், அங்குள்ள தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களிலும் கொட்டை எழுத்துகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தரப்பில் வெளியிடும் பத்திரிகையிலும் குற்றச் செயல்களின் பின்னணி முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளதை கண்டு, அந்தமானில் உள்ள திமுக.வினர்கள் அவமானத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரவிச்சந்திரனை கைது செய்தபோது, அவருடன் அந்தமான் திமுக தலைவர் ஏ.எல்.குழந்தையும் உடனிருந்ததாகவும், ஒருநாள் இரவு முழுவதும் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், விடியலில் ஏ.எல்.குழந்தையையும் மட்டும் விடுவித்துவிட்டதாக கூறுகிறார்கள் அந்தமான் சமூக நல ஆர்வலர்கள்.

சமூக விரோதிகளை வளர்க்கும், அரவணைக்கும் நிர்வாகி

அந்தமானின் தற்போதைய திமுக.வின் முகமாக இருக்கும் ஏ.எல்.குழந்தையும் சட்டவிரோத செயல்களிலதான் ஈடுபட்டு வருவதாகவும் இரண்டு வாரத்திற்கு முன்பாக அவரது மைத்துனர் ராஜா என்பரை கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக கூறி கையும், களவுமாக அந்தமான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்கான உரிமை பெற்றுள்ளது. அந்த உரிமமும், படகின் உரிமையாளரும் சாட்சாத் ஏ.எல்.குழந்தைதான்.  இந்த ராஜா, அந்தமான் இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார் என்பதுதான் கொடுமை…

கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் (ஏ.எல்.குழந்தை மைத்தனர்.)

இப்படி அந்தமானில் தற்போது தலைமைப் பொறுப்பில் உள்ள ஏ.எல் குழந்தை, ரவிச்சந்திரன் ஆகியோரும் அவர்களைச் சார்ந்தவர்களும் சட்டவிரோத தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் என்பதால், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து நேர்மையான திமுக நிர்வாகிகள் விலகியிருக்கிறார்கள்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வழக்கில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் ஆகியும் அவரை, திமுக தலைமை கட்சியை விட்டு இன்னும் நீங்கவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் அந்தமான் திமுக நிர்வாகி ஒருவர்.

அந்தமானில் திமுக.வுக்கு அவமானத்தை தேடி தருபவர்களுக்கு அடைக்கலம் தருபவர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிக,மிக நெருக்கமாக உள்ள ஒன்றிரண்டு முன்னணி நிர்வாகிகள் மீது அங்குள்ள திமுக நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

வரும் அக்டோபர் மாதத்தில் அந்தமானில் நகர்மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக.வுக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் இருந்து வரும் இந்த நேரத்தில், சமூக விரோதிகளான ரவிச்சந்திரன், ஏ.எல்.குழந்தை உள்ளிட்டோரை களையெடுத்து, நேர்மையான நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்டால், கண்டிப்பாக நகர்மன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றிப் பெறும் என்று ஆதங்கத்தோடு கூறுகிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அதீத விசுவாசத்தோடு இருக்கும் திமுக நிர்வாகிகள்.

அந்தமானில் திமுக.வை துவக்கி, தனது கடும் உழைப்பாலும் நேர்மையாலும் இருவண்ண கொடியை உயர பறக்க வைத்தவர் முன்னாள் அவைத்தலைவர் பெரியவர் மருதுவாணன். ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகளை உருவாக்கி, அந்தமானில் அசைக்க முடியாத சக்தியாக திமுக.வை கட்டியெழுப்பிய அந்த பெரியவர், வயது முதிர்வின் காரணமாகவும் உடல் நலக்குறைவால் வேகமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளதைப் பயன்படுத்தி, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, திமுக.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஏ.எல்.குழந்தையும், ரவிச்சந்திரனும், அவரையே கட்சிப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்தமான் திமுக.வை தங்களுடைய சட்டவிரோத தொழிலுக்கு கேடயமாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள் என்று மனம் வெதும்புகிறார்கள் மருதுவாணனின் சிஷ்ய பிள்ளைகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இடது பக்கம் கண்ணாடி அணிந்திருப்பவர் மருதுவாணன்…

மருதுவாணனைப் போலவே, அந்தமானில் திமுக ஆலமரம் போல தழைக்க உயிரைக் கொடுத்து வேலைப்பார்ததவர் கிருஷ்ணன் என்ற தளகர்த்தர். அவர் உயிரோடு இருந்த காலத்தில், ராஜா மருதவாணன்.. சின்னதம்பி, ராஜேந்திரன், செந்தில்குமார், தேசிங்க ராஜா, ஜாகீர் உசேன், வெங்கடேஷ். முருகன், பெட்ரோல ராஜேந்திரன் என்ற வரிசையில் எண்ணற்ற சிப்பாய்களை உருவாக்கினார்.

மலர் தோட்டத்தில் கள்ளிச் செடிகளும் வளரும் என்பதைப் போல, நேர்மையான திமுக நிர்வாகிகளிடையே ஏ.எல்.குழந்தை, ரவிச்சந்திரன் போன்றோரும் தலையெடுத்தனர். இந்த களையை அவ்வப்போது தலையில் தட்டி அடக்கி ஆண்ட கிருஷ்ணன் மரணமடைந்துவிட, பெரியவர் மருதுவாணனும் உடல்நலிவுற்று முடங்கிவிட, அந்தமான் திமுக.வை அப்படியே அபகரித்துக் கொண்டனர் ஏ.எல்.குழந்தையும், ரவிச்சந்திரனும் என்கிறார்கள் விசுவாசமிக்க திமுக நிர்வாகிகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இடது பக்கம் இருப்பவர் கிருஷ்ணன்…(மறைந்துவிட்டார்)

அந்தமானில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு  திமுக பொருளாளரும், மாநில இளைஞரணி அமைப்பாளருமான ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா-?  என்று சந்தேகத்தை எழுப்பும் அந்தமான் திமுக நிர்வாகிகள், அந்தமானில் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மாபாதகங்களைச் செய்யும் திமுக நிர்வாகிகளை களையெடுக்கவில்லை என்றால், ஒட்டுமொத்தமாக திமுக அழிந்து போகும் என்று வேதனைக்குரலில் பேசுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.