மதுரை ஆதீனத்தின் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதால், அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில், மதுரை ஆதின சொத்துகளுக்கு உரிமை கோரி நித்யானந்தா அறிக்கை வெளியிட்டுள்ளதால், மதுரை ஆதினத்தின் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. மதுரை ஆதினத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் உள்ளார்.
மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஆதீனத்தில் ஆவணங்கள், நகைகள் இருக்கும் ரகசிய அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இப்படிபட்ட நெருக்கடியான நிலையில் நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீனம் ஏப்ரல் 27, 2012 அன்று தன்னை 293வது ஆதீனமாக அறிவித்து முடிசூட்டியதால் எல்லாப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளேன் என்று நித்யானந்தா வெளியிட்டுள்ளள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், மதுரை ஆதினத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.