Sun. Nov 24th, 2024

தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 33 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜனை விடுவிப்பது தொடர்பாக 4 மாதங்களுக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2019, ஏப்ரல் 25-ம் தேதி உத்தரவிட்டது. ராஜனின் மனு தொடர்பாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி முடிவெடுத்தது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கால தாமதமாக செயல்படுத்தியதை எதிர்த்து ராஜன் சார்பில் வழக்கறிஞர் கே.பாரிவேந்தன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 20-ந் தேதி விசாரித்தது.

சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜனை விடுவிப்பது தொடர்பாக 4 மாதங்களுக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2019, ஏப்ரல் 25-ம் தேதி உத்தரவிட்டும். ராஜனின் மனு தொடர்பாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி முடிவெடுத்துள்ளது. தாமதமாக முடிவெடுத்ததற்கான காரணத்தை தமிழக உள்துறை செயலர் விளக்கி 2 வாரங்களுக்குள் மின்னஞ்சல் வாயிலாக, தனது பெயரில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக உள்துறை செயலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி, ராஜனின் மனு தொடர்பாக தாமதமாக முடிவு எடுத்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

மேலும், ஆகஸ்டு 2-ந் தேதி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட விளக்கத்தை வாசித்து காண்பித்தார். முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் ராஜனின் மனு தொடர்பாக கருத்து கேட்க திருவண்ணாமலை விசாரணை நீதிமன்றத்திற்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோர்ட்டுகளின் கருத்தை கேட்டு பெறுவதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இலங்கை அகதி கைதியை விடுவிக்கும் விவகாரத்தில் தாமதமாக முடிவு எடுத்த தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம். மனுதாரர் ராஜனை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவித்தனர்.