Sat. May 18th, 2024

கொரோனோ ஊரடங்கு முழுமையாக விலக்கி கொள்ளப்படாததால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளை முன்னிட்டு அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஊரக வளர்த்சித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனோ தொற்று பரவலின் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தங்கள் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுக்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனோ பாதிப்பை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்வது சரியல்ல. உரிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்பாக, கோவையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த, மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசனும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது நினைவுக்கூரத்தக்கது. இந்நிலையில், கிராம சபை கூட்டம் ரத்து என்ற தமிழக அரசின் முடிவுக்கு கமல்ஹாசனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.