Sun. Nov 24th, 2024

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. வரும் 13 ஆம் தேதி (நாளை) வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றம் கூடிய முதல்நாளிலேயே (ஜூலை 19) பெகாஸஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு என பல்வேறு விவகாரங்களில் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விவாதம் நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால், மக்களவை, மாநிலங்களவையில் எழுந்த அமளியின் காரணமாக, நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது.

மத்திய பாஜக அரசின் சார்பில் எதிர்க்கட்சிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய போதும், நாடாளுமன்றத்தில் அமைதியான சூழல் திரும்பவில்லை. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

இடைப்பட்ட நாளில், எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத போது மத்திய பாஜக அரசு, விவாதம் இன்றி 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதத்திற்கு அனுமதி தராமல் நடந்து கொண்ட மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து புதுடெல்லியில் கண்டன பேரணியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஜ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு படுகொலை செய்துவிட்டதாக முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றர்.

முன்னதாக, கண்டன பேரணி தொடர்பாக, மாநிலங்களவை காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.