Sun. Nov 24th, 2024

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கோவை வீடு உள்பட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியில் அவர் பொறுப்பு வகித்த நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல, கோவையில் உள்ள அவரது இல்லத்திற்கும் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கு முனைப்பான சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அவரது வீட்டிற்கு முன்பாக குவிந்து, லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருடன் அதிமுக.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேலும், அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு புகாரிலும் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்துவருகிறது. அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட பலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.

முக்கியமாக, கோவை வடவள்ளியில் அதிமுக இளைஞரணி நிர்வாகியும், எஸ்.பி.வேலுமணியின் பினாமியுமான சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் – தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது

சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடந்துவரும் நிலையில், சி.வி சண்முகம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், பாலகங்கா, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் வருகை தந்துள்ள நிலையில், அதிமுக.வினர் பலரும் அங்கு குவிந்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சதாசிவம் வீட்டில், சென்னையில் 13 இடங்கள், கோயம்புத்தூரில் 35 இடங்கள் என மொத்தம் 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை…..