Sun. Nov 24th, 2024


அதிமுக.வில் பொதுச் செயலாளர் பதவியைப் பிடிக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே மல்யுத்தம் கணக்காக கடும் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில், 3 வது நபராக வி.கே.சசிகலாவும் அந்த பதவியைக் குறி வைத்து ஆடியோ, டிவி பேட்டி எனும் ஆயுதங்களை தூக்கிக்கொண்டு பொதுச் செயலாளர் யுத்தத்திற்கு தயாராகி வருகிறார்.இப்படி மூன்று பேருக்கு இடையே ஒற்றை தலைமையை நோக்கி கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த மூன்று பேருமே பாஜக.வின் கைப்பாவைகளாக இருப்பதால் அப்பாவித் தொண்டர்கள், ஆளும்கட்சியான திமுக.வுக்கு எதிராக அரசியல் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிபட்ட இக்கட்டான நிலையில், அதிமுக சிக்கிச் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக, அதிமுக.வில் சிங்கில் பவர் சென்டராக உருவெடுக்காத முன்பாகவே, தனக்கென தீவிரமான ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொள்ள, எடப்பாடி பழனிசாமி துணிந்துவிட்டார். அதற்காக அவர், மாவட்டச் செயலாளர்களையே தூக்கியெறிந்துவிட்டு தனக்கு ஆதரவான பிரமுகர்களை மாவட்டச் செயலாளர் பதவியில் அமர வைக்கும் அரசியல் யுக்தியை கையாண்டு வருகிறார். அதற்காக அவர் கையில் எடுத்து இருக்கும் மாவட்டம் திருப்பத்தூர் என்கிறார்கள் அவரது எதிரணியில் உள்ள அதிமுக நிர்வாகிகள்.


அவர்களில் ஒருவரிடம் பேசினோம். திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கே.சி.வீரமணியை தூக்கியெறிந்துவிட்டு, அவரது பதவிக்கு வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ.செந்தில்குமாரை மாவட்டச் செயலாளர் பதவியில் அமர்த்த, எடப்பாடி பழனிசாமி செய்த திரைமறைவு அரசியலை போட்டு உடைத்தார்.
அண்மையில் வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், மரியாதை நிமித்தமாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது கட்சி விசுவாசத்தை எல்லாம் சரமாரியாக பாராட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணியின் செயல்பாடுகள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவியில் அவரை வைத்துக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் செய்தால், அதிமுக.வுக்கு வீழ்ச்சிதான் இருக்குமே தவிர, வளர்ச்சி இருக்காது. அதனால், அவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, உன்னை அந்த பதவியில் அமர்த்தலாம் என முடிவு செய்து இருக்கிறேன். நீ என்ன சொல்கிறார்? உனக்கு சம்மதமா? என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


அதைக் கேட்டு அதிர்ச்சியான வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், அண்ணே, அவரது சிபாரிசால்தான் ஒன்றியச் செயலாளராக ஆனேன். அவரது சிபாரிசால்தான் எம்.எல்.ஏ. சீட்டும் கிடைத்தது. வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்டதால், அந்த தொகுதியில் அதிமுக தோற்றுவிடும் என்று எல்லோரும் சொன்னார்கள். அவர்கனின் எதிர்பார்ப்பை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு, அதிமுக எம்.எல்.ஏ.வாக தேர்வாகிவிட்டேன். என்னுடைய வெற்றிக்காக கே.சி.வீரமணி கடும் பாடுபட்டார். அவரின் உண்மையான விசுவாசியாக நான் இருப்பதால்தான், எனக்கு அரசியலில் இத்தனை ஏற்றம் கிடைத்திருக்கிறது. அதனால், அரசியலில் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது என்பது பெற்ற தாய்க்கு செய்யும் துரோகம். அதிமுக.வில் இப்போது நான் வகித்து வரும் இந்த எம்.எல்.ஏ. பதவியே எனக்கு பெரிய அங்கீகாரம். வாணியம்பாடி அதிமுக.வில் மட்டுமல்ல, திருப்பத்தூர்- வேலூர் மாவட்ட அதிமுக.விலும் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் எனக்கு நல்ல மரியாதை கொடுத்து வருகிறார்கள். அதனால், ஒருபோதும் நான் கே.சி.வீரமணிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று பொட்டில் அறைந்த மாதிரி கூறிவிட்டு விருட்டென்று வாணியம்பாடிக்கு கிளம்பிவிட்டார் அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்.

அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்துபோன எடப்பாடி பழனிசாமி, அரசியலில் உயர்ந்த பதவிகள் கிடைப்பதே குதிரைக்கொம்பு. தன்னை தேடி வரும் மாவட்டச் செயலாளர் பதவியை வேண்டாம் என்று எட்டி உதைத்துவிட்டு, விசுவாசம், நன்றிக்கடன் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாரே, இந்த ஆள்(செந்தில்குமார் எம்.எல்.ஏ) எல்லாம் எப்படி வாழ்க்கையில் முன்னேறப் போகிறார் என்று திட்டியதைக் கேட்ட அவரது விசுவாசிகள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்களாம். எல்லோருமே எடப்பாடி பழனிசாமியை போல நன்றிக் கெட்டவர்களாக, உண்ட வீட்டுக்கே துரோகம் செய்பவர்களா இருப்பார்களா என்று இபிஎஸ்.ஸை பற்றி சாடை மாடையாக பேசி சிரித்து இருக்கிறார்கள்.
அதேசமயத்தில், திருப்பத்தூர் மாவட்ட அரசியலில் இருந்து தன்னை காலி செய்ய எடப்பாடி பழனிசாமி செய்து வரும் சதித்திட்டத்தை கேள்விப்பட்டு கொந்தளித்து கிடக்கிறாராம் கே.சி.வீரமிணி. தன்னைப் போல யார் யாரையெல்லாம் பலி கொடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் கே.சி.வீரமணி, வெகு விரைவாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான யுத்தத்தை தொடங்குவார் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி, ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில், பலி கொடுப்பதற்கு மாவட்டச் செயலாளர்களை கூட கட்சியில் இருந்து நீக்க தயங்க மாட்டார்கள் என்பதால்தான், அதிமுக.வில் நீடித்தால் தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு சாவுமணி அடித்துவிடுவார்கள் என்பதால்தான், ராஜேந்திர பாலாஜி போல அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர், பாஜக பக்கம் சாயும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்று வருத்தத்தோடு பேசுகிறார்கள் எம்.ஜி.ஆர்.காலத்து அதிமுக நிர்வாகிகள்…