Thu. Mar 28th, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உளவுத்துறை மோப்பம் பிடித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாக சமர்ப்பித்த போது, மெல்லிய புன்சிரிப்பை மட்டுமே பதிலாக தந்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்த உள்ளாட்சித்துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகளை ஆதியும் அந்தமுமாக தெரிந்து வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது கோயம்புத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆசேமாக பேசியதையெல்லாம் மறந்துவிடவில்லை. குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி மீதும், அவரது பினாமியான சந்திரசேகர் மீதும் அடங்காத கோபத்தில்தான் இருக்கிறார் முதல்வர் என்கிறார்கள், தமிழக காவல்துறையில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர்.

கடந்த இரண்டு நாட்களாக எஸ்.பி.வேலுமணியை சுற்றியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலும் முக்கிய விவாதமாக மாறியுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை குறித்து மனம் திறந்து பேசினார் நல்லரசுக்கு அறிமுகமான எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தாலும், அந்த லிஸ்டிலேயே முதல் நபராக இருப்பவர் எஸ்.பி.வேலுமணிதான். அவர் அமைச்சராக இருந்த காலத்தில், அவரது துறையில் பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு தேடும் அளவுக்கு எல்லாம் முறைகேட்டில் அவர் ஈடுபடவில்லை. கிட்டதட்ட ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்றால், அதில் 90 சதவிகிதம் ஆவணங்களாகவே இருக்கின்றன. அந்த ஆவணங்களே போதும் எஸ்.பி.வேலுமணி மீதும், அவரது முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் வழக்குகள் தொடர்வதற்கும் தண்டனை பெற்று தருவதற்கும் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார், முதல்வர்.


அதனால்தான், மலை முழுங்கி மகாதேவன்களான எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரை ஏவி விடாமல், அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது முதல்முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பாய்ந்தனர். அந்த நடவடிக்கையைப் பார்த்து ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் ஆடிப்போய்விட்டனர். திமுக அரசின் ஆகஸ்ட் மாத வேட்டை துவங்கிவிட்டது என்று பயந்து போய்தான் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.,எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோர் டெல்லிக்கு ஓடினர். டெல்லியில் அவர்கள் தஞ்சமடைவதைப் பார்த்த பிறகுதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் உற்சாகமானார். அதன் வெளிப்பாடுதான், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக சாட்டையை சுழற்றுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு சிக்னல் கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சி ஏற்ற நாள் முதலாகவே, தன்னை நோக்கி எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவார்கள் என்றே காத்திருந்தவர்தான், எஸ்.பி.வேலுமணி.

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆவணங்களை திரட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகமாக சிரமப்படவே இல்லை. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கடந்த 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை எல்லாம் ஆய்வு செய்தனர். அதேநேரத்தில், எதிர்க்கட்சியாக இருந்த போது எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக கொடுத்த புகார் மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகார் பட்டியல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ரகசிய விசாரணை மேற்கொண்டதில், எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், அவர்களது பினாமியான சந்திரசேகர் பங்குதாரராக இருக்கும் கேசிபி நிறுவனங்கள், எஸ்.டெக் மிஷினரி உள்ளிட்ட நிறுவனங்களின் முழு விவரங்களையும் சேகரித்துவிட்டனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துறையில் அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் கவனித்தவர் சந்திரசேகர்தான். அவர் மட்டுமே 12 பி.ஏ.க்கள் (உதவியாளர்கள்) வைத்திருந்தார். அவர்களில் வினோத், பார்த்திபன் போன்றோர் சந்திரசேகர் பெயரைச் சொல்லியும், வேலுமணியின் பெயரைச் சொல்லியும் பல கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டுள்ளார்கள்.

சென்னை மாநகராட்சியை சந்திரசேகர் கவனித்துக் கொள்ள எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் பி.அன்பரசன், கோவை மாநகராட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்து, முறைகேடாக ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களுக்கு உறுதுணையாகவும் பினாமியாகவும் இருக்கும் 50க்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுகொண்டுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில்தான் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளிப்படையாக நடத்திய சோதனையை கடந்து, மீடியா வெளிச்சத்திற்கு வராமலேயே பல இடங்களில் சோதனைகள் நடந்துள்ளன. அவற்றில் முக்கியமானது பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் தோட்ட அதிபர் வீட்லும் மேற்கொள்ளப்பட்ட சோதனையாகும்.

எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பினாமிகள் வீடுகளில், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டால் வழக்குகிற்கு உதவுக்கூடிய எந்த ஆவணங்களும் கிடைக்காது என்பது தெரிந்தேதான் 55 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள சட்டமன்ற விடுதியில் தங்கியிருந்த எஸ்.பி.வேலுமணி, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் வியர்ந்து போய் கொண்டிருந்த நேரத்தில், கோவையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தபோது அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எதிராக அதிமுக.வினர் கொடுத்த தொல்லைகளை நாடே வேடிக்கைப் பார்த்தது. எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டு முன்பு கூடி ரகளையில் ஈடுபட்ட அதிமுக.வினரை ஐந்து நிமிடத்தில் போலீசார் விரட்டியடித்திருக்க முடியும்.

ஆனால், எஸ்.பி.வேலுமணி கூட்டத்தின் அராஜகத்தை பார்த்து நாடு சிரிக்கட்டும் என்றுதான் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும், திமுக அரசுக்கும் எதிராக அதிமுக.வினர் கோஷங்கள் போட்டபோதும், அமைதியாக வேடிக்கை பார்த்தனர் கோவை போலீசார்.
அதேநேரத்தில், எஸ்.பி.வேலுமணியின் ஊழல் சாம்ராஜ்யத்திற்கு துணைப் போன கேசிபி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சந்திர பிரகாஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார், வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து கையில் வைத்திருந்த ஆவணங்களை காட்டி கேள்வி கேட்டபோது அதிர்ச்சியாகிவிட்டார். எஸ்.பி.வேலுமணி கூட்டத்தினரிடம் காணப்படும் கிரிமினல் புத்தி அவருக்கு இல்லை போல. நெஞ்ச வலிப்பதாக கூறி தனியார் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார்.

சென்னை, திண்டுக்கல் போன்ற இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையை விட, கோவையில் நடைபெற்று வந்த சோதனை விவரங்களைதான் பிரத்யேகமாக விசாரித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு கூலிக்கு அழைத்து வரப்பட்ட அதிமுக.வினர், வன்முறையில் ஈடுபட தொடங்கிய நேரத்தில்தான் முதல்வர் கவலைப்பட்டுள்ளார். சோதனையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் வந்துவிடக் கூடாது. சோதனையை முடித்து அவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என கவலைப்பட்ட முதல்வர், அதுதொடர்பாக விசாரிப்பதற்காகவே, லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி கந்தசாமியை அவரசமாக வரவழைத்துள்ளார்.

கோவையில் அதிமுக.வினர் எவ்வளவு அராஜகங்களில் வேண்டுமானால் ஈடுபடட்டும். ஆனால், அங்குள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. மிகவும் கவனமாக இருங்கள் என்று கூறி தைரியப்படுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கைது நடவடிக்கை தொடர்பாக பேச்சு வந்தபோது, சட்டப்படி என்ன செய்வீர்களோ அதை செய்யுங்கள். சட்டப்பூர்வமான உங்கள் நடவடிக்கைகளில் நான் ஒருபோதும் தலையிட மாட்டேன் என்றே முதல்வர் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் அதிரடி சோதனையில் எஸ்.பி.வேலுமணி கலகலத்துப் போயிருக்கிறார். நிச்சயம் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயம், எஸ்.பி.வேலுமணியை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் முதல்வரிடம், உளவுத்துறை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிகிறது.

முதல்வர் அளித்துள்ள சுதந்திரத்தையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்குகளை முடங்கியுள்ளதுடன், அவரது உறவினர்களும் புகாரில் சிக்கியுள்ளவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்கவுள்ளனர். அடுத்து, அவர்களுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்துவார்கள். அதன் பிறகு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும். எஸ்.பி.வேலுமணியையும், அவரது சகோதரர் அன்பரன், அவர்களது பினாமி சந்திரசேகர் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைக்க ஆக்ஷன் பிளான் பி திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக.வுக்கு எதிராக பேசிய சந்திரசேகர், சட்டமன்றத் தேர்தல் முடிந்து அதிமுக வெற்றி விழாவை கொண்டாடும் போது, பத்து தொகுதிகளிலும் திமுக.வை வெட்டி பிரியாணி வைப்போம் என பேசியுள்ளார். அந்த பேச்சுக்கு எதிராக அப்போதே திமுக.வினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதனால், எஸ்.பி.வேலுமணி அன் கோவை கைது செய்வது பெரிய விஷயமில்லை. நாளைய தினம் பட்ஜெட் தாக்கல் இருக்கிறது. நாளை மறுநாள் வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளின் போதும் சட்டப்பேரவையில் அதிமுக எப்படி ரியாக்ட் செய்யப் போகிறது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக சட்டப்பேரவையில் இருந்த அதிமுக வெளிநடப்பு செய்யுமா? என்பதையெல்லாம் பார்த்த பிறகுதான், லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த பாய்ச்சலுக்கு சிக்னல் கொடுப்பார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுவரை எஸ்.பி.வேலுமணியையும், அவருக்கு ஆதரவான கூட்டத்தையும் ஆட விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்தமாக அதிமுக.வின் ஆட்டம் எல்லை மீறிப் போனால், வரும் நாட்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு துயரம் மிகுந்த நாட்களாக மாறிவிடும் என்பது மட்டும் உறுதி என்று ஒரே மூச்சில் கூறிவிட்டு அமைதியானார் உயர் அதிகாரியான எஸ்.பி.

எஸ்.பி.வேலுமணி எப்போது கைது செய்யப்படுவார் என்று மீடியா எதிர்பார்ப்பதைவிட கோவை மாவட்ட அதிமுக முன்னணி தலைவர்கள்தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், பெயரளவுக்குதான் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களே தவிர, அவரவர் உள்ளங்களில் சீக்கிரம் எஸ்.பி.வேலுமணியை ஜெயிலில் பிடித்து போடுங்கள் சார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மானசீகமாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் கோவை மாவட்ட உளவுத்துறை போலீசார் ஒருவர் கிண்டலாக….