Sun. Nov 24th, 2024

முந்தைய அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி நிர்வாகம்  மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பணத்தாசையால் தமிழகத்தை சூறையாடிது மட்டுமல்லாமல் பொது நூலகத்துறையையும் சீரழித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இதன் பின்னணியை அறிந்து கொள்வோம்.

2011 – 16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம்  மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி பொறுப்பு வகித்தார். அப்போது, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி, முறையாக ஒவ்வொரு துறைக்கும் பிரித்து வழங்கப்பட்டு, ஒவ்வொரு மக்கள் நலப்பணியும், திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டன. அப்போது முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் தண்டனைக்கு பயந்து அமைச்சரும், அரசுத்துறை அதிகாரிகளும் பெரிய அளவிலான கோல்மால்களில் ஈடுபடாமல், ஒழுங்காக செயல்பட்டனர்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை அந்தப் பதவியில் நீடித்த கே.பி.முனுசாமி, கொஞ்சமாக வாலாட்டிய போது, அதை ஒட்ட நறுக்கி, அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியெறிந்தார் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா. அதன் பிறகு அந்த துறையின் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார் எஸ்.பி.வேலுமணி. புது மாப்பிள்ளையான அவர் 2016 ஆம் ஆண்டு வரை அடக்கியே வாசித்தார். மீண்டும் 2016 ல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகும், செல்வி ஜெயலலிதா உயிரிழக்கும் வரை அமைதிப்படை சத்யராஜுவாகவே இருந்த எஸ்.பி.வேலுமணி, முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்த பிறகு ஆட்டத்தை ஆரம்பித்தார்.

நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு மாநில அரசின் நிதியுதவிகளையும் சகட்டுமேனிக்கு வாரி இரைத்ததுடன், மத்திய அரசின் நிதியுதவிகளையும், பெயரளவுக்கு திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டு, கொள்ளையடித்துள்ளார். இப்படி மத்திய, மாநில அரசுகளின் நிதிகளோடு உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி ஆதாரங்களிலும் தில்லுமுல்லு செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அதிமுக ஆட்சியின் போதே, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையிடம் புகாராக கொடுத்துள்ளன.

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார்களை விரைவாக விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சிறை வாழ்க்கை பிரவேசம் இன்றைக்கா, நாளைக்கா என்ற நிலையில்தான் உள்ளது.

கடல் போன்ற நிதி ஆதாரங்களை கொள்ளையடித்தது மட்டுமின்றி குழாய் தண்ணீர் போல, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் திரட்டிய வருவாயைக் கூட, உரிய வழிகளில் செலவிடாமல், அதையும் கூட சுருட்டிக் கொண்டதால், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி மூலம் இயங்கி வரும் நூலகத்துறை முழுமையாக முடங்கிப் போனதுதான் துயரம்.

கடந்த 7 ஆண்டு அதிமுக ஆட்சியில் நூலகத்துறைக்கு ஐந்து பைசா அளவுக்குக்கூட நூலகத்துறைக்கு நிதியுதவி செய்யப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் சொத்து வரி உள்ளிட்டவற்றில் இருந்து 10 சதவீதம் வரியை நூலகத்துறைக்கு வழங்க வேண்டும்.

இந்த வகையில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நூலகத்துறைக்கு 60 கோடி ரூபாயுக்கு மேலாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை நிலுவையில் வைத்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக, பொது நூலகத்துறைக்கு உரிய நிதியை ஒதுக்கிடு செய்யுங்கள் என்று எஸ்.பி.வேலுமணியிடம் அரசு அதிகாரிகள் பலமுறை நேரில் சந்தித்து கெஞ்சி உள்ளனர். ஆனால் ஒருமுறை கூட மனம் இரங்காத எஸ்.பி.வேலுமணி, ஐந்து பைசாவைக் கூட பொது நூலகத்துறைக்கு ஒதுக்கீடு செய்ய, தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவில்லை.

பொது நூலகத்துறை மீதான எஸ்.பி.வேலுமணியின் கோபத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது, சென்னை கோட்டூர்புரத்தில் முந்தைய திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்தான் என்கிறாகள் நூலகத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.

நூலகத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, அண்ணா நூலகத்திற்கும் செலவிடப்படும் என்ற எண்ணத்தில்தான், உள்ளாட்சி அமைப்புகளிடம் நிலுவையில் இருந்த நிதியை ஒதுக்கீடு செய்யாமல் தடுத்திருக்கிறார் எஸ்.பி.வேலுமணி.

கடந்த 5 ஆண்டுகளில் எஸ்.பி.வேலுமணியின் பாராமுகத்தால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு நூலகத்துறையே சீரழித்துவிட்டது. மேலும், 2019 ஆண்டு மார்ச் மாதம் தாக்கத் துவங்கிய கொரோனோ தொற்று பேரிடர், இந்த நிமிடம் வரை கட்டுக்குள் வராததால், நூலகங்கள் ஓராண்டிற்கு மேல் மூடப்பட்டன. இதனால், வாசகர்கள், ஐஏஎஸ் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளுக்கு தயாராகி வந்த மாணவர்கள் மிகவும் நொந்துப் போய்விட்டார்கள். இப்படிபட்ட நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கொரோனோ தொற்று அச்சுறுத்தல் நீங்கியவுடன் நூலகங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஐஏஎஸ் உள்ளிட்ட தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் பயிற்சி எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நூலகங்களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நூலகத்துறையை புத்துருவாக்கம் செய்வதற்கு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தனித்த கவனம் செலுத்தி வருவதாகவும், தேசிய அளவிலான அரசுப் பதவிகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைக்க, கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களையும் பயிற்சிக் களமாக மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியளிக்கும் தகவல்கள் வருகின்றன.

வாசிப்பின் மகத்துவத்தை முழுமையாக உணர்த்தவராக மட்டுமல்லாமல், இளம்தலைமுறையினரின் திறன்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்களையும் தனது சொற்பொழிவுகள் மூலம் தொடர்ந்து செய்து வந்த தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் காலத்தில்தான் பொது நூலகத்துறை, ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்களைப் போல மேம்படுத்தப்பட முடியும் என்ற நம்பிக்கையோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் காத்திருக்கிறார்கள் நூலகத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள், வாசகர்கள், பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர்கள்.

தற்போது அவர்களுடையே ஒரு ஏக்கம், நூலகங்கள் திறக்கப்பட்ட போதும் கூட, நாள்தோறும் வெளியாகும் நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்டவற்றை நூலகங்கள் வாங்கிக் கொள்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதுடன், நூலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கூட முறையாக கிடைப்பதில்லை என்றும் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் கிடைக்கிறது என்றும் நொந்து கொள்கிறார்கள்.

அறிவுப்பசிக்கு தீனி போடுவதற்கும், நூலகங்களை ஆலயம் போல காத்து நிற்கும் நூலகர்களுக்கு உரிய மாத ஊதியத்தை, ஒவ்வொரு மாதம் முதல் வாரத்திற்குள்ளாகவும் கிடைக்க, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

அதைவிட முக்கியமாக அவர்கள் முன் வைக்கும் கோரிக்கை, கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் அலட்சியம் காட்டப்பட்டதைப்போல, திமுக ஆட்சியிலும் அதே நிலை நீடிக்க விடமாட்டோம் என்பதை உறுதி செய்ய, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கல்வி வரியை, நிலுவை வைக்காமல் உரிய காலத்தில் பொது நூலகத்துறைக்கு ஒதுக்கீடு செய்ய, முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகிறார்கள், நூலகத்துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள்.