Mon. May 20th, 2024

ஆழ்ந்த நட்பையும், அபூர்வமான ஆற்றலையும் விலைபேசி விற்கும் குணம் படைத்த கவிப்பேரரசு….

இவரைப் போல ஒரு  மனிதரைப் பார்த்தில்லை என வெதும்பும்  திமுக முன்னணி நிர்வாகி..….

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்

1983 ஆம் ஆண்டு. அதிமுக ஆட்சி. அப்போது திமுக எதிர்க்கட்சி. திமுக.வில் இருந்து முன்னணி தலைவர்கள் அப்போது ஆளும்கட்சியான அதிமுக.வில் வரிசையாக ஐக்கியமாகிக் கொண்டிருந்தனர். திமுக.வில் இருந்து விலகி வந்த முன்னணி தலைவர்களை வாஞ்சையோடு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வரவேற்றுக் கொண்டிருந்தாலும், அவர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது, பேராசிரியர் க.அன்பழகனாரைதான். திமுக.வின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர், அதிமுக.வில் சேரப்போகிறார் என்ற வதந்தியும் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.

அந்த வதந்தியை பல்வேறு சந்தர்ப்பங்களில் மறுத்துக் கொண்டிருந்தார் பேராசிரியர் பெருந்தகை. அப்போது அவரது மணிவிழா நாள் வந்தது. சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழக தலைமை அலுவலக வளாகத்தில் திமுக சார்பில் பேராசிரியரின் 60 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், அப்போதைய தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் திருக்கரங்களால் பேராசிரியருக்கு பிறந்தநாள் பரிசாக வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

விழா பேரூரையாற்றிய பேராசிரியர், தன்னைப் பற்றி பரப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளிக்கு வைக்கும் விதமாக தன் உயிர் இருக்கும் வரை, கலைஞரின் தோழனாக, திமுக.வின் தொண்டராகவே இருப்பேன் என நா தழு,தழுக்க கூறினார்.

நிறைவுரையாற்றி கலைஞர், பேராசிரியருடனான நெருக்கம், அவரின் பெருமை ஆகியவற்றையெல்லாம் மிகவும் உருக்கத்துடன் கூறிவிட்டு, திமுக கொடியின் இரு வண்ணமாக உள்ள கருப்பு நான் என்றும் சிகப்பு வண்ணம் பேராசிரியர் என்றும், எங்களுக்கு இடையே உள்ள நட்பை, எப்போர்ப்பட்ட சக்தியாலும் பிரிக்க முடியாது என்று  பேச, பேச ஒட்டுமொத்த கூட்டமும் உருகியது.

அன்றைய கூட்டத்தில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மாட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாரை மணியன் அமர்ந்திருந்தார்.

இப்படி, கருப்பு, சிகப்பு என்று கலைஞர் மு.கருணாநிதியாலேயே நெஞ்சுருகி புகழ்ந்த பேராசிரியரையே, கலைஞருக்கு எதிராக சீற்றம் காண வைத்தவர் கவிஞர் வைரமுத்து என்று நம்மிடம் மனம் நொந்து பேசினார் திமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.

கலைஞரிடம் பேராசிரியர் சீற்றம் காட்டினாரா? இதென்ன புதுக்குண்டாக இருக்கிறதே என்று அதிர்ச்சியாகி அந்த முன்னணி நிர்வாகியை அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து பேசினோம்.

பத்தாண்டுகளுக்கு மேலாக தனது மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருந்த துயரத்தை கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும் அளவிற்கு மலரும் நினைவுகளில் மூழ்கினார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்த போது, கோபாலபுரம் இல்லத்தில் அப்போதைய முதல்வர் கலைஞரோடு பேராசிரியர் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக இருவரும் தனிமையில் பேசும்போது யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்.ஆனால், ஆட்சிக்காலமாக இருந்ததால், அவ்வப்போது கலைஞர் கூப்பிடுவார் என்பதால் அவரது அறைக்கு வெளியே கீழ்தளத்தில் காத்திருந்தேன். பேராசிரியரின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது.

திமுக ஆட்சியில் எந்த பிரதிபலனையும் எதிர்பாராதவன் நான். எனக்கு எதிராகவே அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்றவாறு பேராசிரியர் சத்தமாக பேசியவாறு சிவந்த முகத்துடன் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

பேராசிரியரின் சீற்றத்திற்கு காரணம் என்ன என்று அப்போது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. சிறிதுநேரத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வேகம் வேகமாக வந்து கலைஞரை சந்தித்துப் பேசினார். அந்த பேச்சின் போது, கவிஞர் வைரமுத்துதானே. நான் பேசி தீர்த்து வைக்கிறேன் என்று ஆற்காட்டார் கலைஞரிடம் கூறிய வார்த்தை மட்டுமே எனக்கு கேட்டது. ஆனால் விவகாரம் என்னவென்றே புரியவில்லை.

நாள்தோறும் கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் வந்து சந்தித்துவிட்டு செல்லும் பேராசிரியர், சில நாட்களாக தொடர்ச்சியாக கோபாலபுரத்திற்கே வரவில்லை. அதன் பிறகு விவகாரம் மெல்ல மெல்ல கோபாலபுரம் இல்லத்திலேயே கசிய தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சிறு குன்று ஒன்று குவாரியாக மாற்றுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பேராசிரியர் பரிந்துரை மூலம் ஒரு ஒப்பந்ததாரர், அந்த குவாரிக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு ஒப்பந்தம் (கான்ட்ராக்ட்) கிடைத்திருக்கிறது. அதே குவாரிக்கு, கவிஞர் வைரமுத்து பரிந்துரையின் பேரில் மற்றொரு ஒப்பந்ததாரர் விண்ணப்பிக்க, அவருக்கும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

கலைஞர் மூலம் அந்த ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. மறுபுறம் பேராசிரியர் பரிந்துரை. இரண்டு ஆளுமைகள் பரிந்துரை செய்துள்ளதால், மதுரையில் உள்ள அரசு அதிகாரிகள், சிறு குன்றை இரண்டாக பங்கிட்டு இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளனர். கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த ஒப்பந்ததாரர், தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வெடி வைத்து தகர்க்க தொடங்கியபோது, விலை உயர்ந்த, மிகுந்த தரமான கிரானைட் கற்கள் கிடைத்துள்ளன.

பேராசிரியர் பரிந்துரைத்த ஒப்பந்ததாரருக்கு கிடைத்த பகுதியில் தரமற்ற கிரானைட் கற்கள் கிடைத்துள்ளன. இதனால், ஏமாற்றமடைந்த அந்த ஒப்பந்ததாரர், கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக பேராசிரியரிடம் புலம்பியுள்ளார். எந்த சிபாரிசுக்காகவும் கலைஞரிடம் பேசி பழக்கமில்லாத பேராசிரியர், இந்த விவகாரத்தை மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு, கலைஞரிடம் பஞ்சாயத்து வைத்துள்ளார்.

பேராசிரியர் வருத்தப்பட்டு கலைஞரிடம் பேசிய தகவல் கவிஞர் வைரமுத்துவுக்கு தெரிவிக்கப்பட்டும், அவர் தான் பரிந்துரை செய்த ஒப்பந்ததாரரை அழைத்து, பேராசிரியருக்கு விட்டு கொடுக்குமாறு சொல்லாமல், பிடிவாதம் காட்டியிருக்கிறார்.

இந்த பஞ்சாயத்தை ஆற்காட்டார் பேசியும் தீர்வு எட்டப்படவில்லை. அப்போது மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்பாளருமாக இருந்த மு.க.அழகிரியிடமும் சென்றது.தலைவர், பேராசிரியருக்கு இடையேயான பஞ்சாயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று மு.க.அழகிரியும் ஒதுங்கிக் கொண்டார். பேராசிரியர் தன்னை வந்து சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் என்பதையறிந்து கலைஞரும் சோகமாகிவிட்டார்.

கலைஞரின் மனதை அறிந்து செயல்படும் சண்முகநாதன், பேராசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து இடையேயான பஞ்சாயத்தை சுமூகமாக முடித்து வைத்தார்.

கவிஞர் வைரமுத்து மீது கலைஞர் வைத்திருந்த மதிப்பு, மரியாதை, நட்பு எல்லாமே அவரின் கவிதைக்கும், அபூர்வமான மொழிப்புலமைக்கும்தான். ஆனால், பேராசிரியர் மீதான நட்பு, பந்தம் என்பது, உயிரைப் போன்றது. ஈரூடலாக இருந்தாலும் ஓரூயிராக இருந்த தலைவர்கள் இருவருக்கு இடையே மனந்தாங்கல் ஏற்பட தான் காரணமாக இருக்கக் கூடாது என்ற பெருந்தன்மையாக நினைத்து, அன்றைக்கு வைரமுத்து விட்டுக் கொடுத்திருந்தால், பேராசிரியரின் மன வேதனையை குறைத்திருக்க முடியும்.

ஆனால், பணமே பிரதானம் என்ற நோக்கமுடைய வைரமுத்து, பேராசிரியரிடம் நடந்து கொண்டதைப் போல, திமுக முன்னணி பிரமுகர்களிடம் நடந்து கொண்டு ஏகத்துக்கும் விரோதத்தை சம்பாதித்துள்ளார். அப்படிபட்டவர், இன்றைக்கு கலைஞர் திருவுருப்படம் திறப்பு விழாவையொட்டி கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின் உண்மை முகம் தெரியாதவர்களுக்கு அந்த கவிதை உருக்கமாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எல்லாம், கலைஞருக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தவர் வைரமுத்து என்பதை அறிந்து வைத்திருப்பதால், அந்த கவிதை மீதோ, வைரமுத்து மீதோ எந்த மரியாதையும் இல்லை என்று நொந்து கொண்டார்.

நமக்கு வியர்த்துக் கொட்டியது. அந்த முன்னணி தலைவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிதுநேர மௌனத்திற்குப் பிறகு மீண்டும் பேசினார்.

திமுக.வில் சிறை சென்றவர்கள், தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள் என திமுக.வையும், கலைஞரையும் உயிர்மூச்சாக கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு எல்லாம் திமுக.வால் ஒரு புண்ணியமும் கிடைத்திருக்காது. ஆனால், கவிஞர் வைரமுத்து, தலைவர் கலைஞரோடு அறிமுகமான நாளில் இருந்தே, அவர் மீது கலைஞர் வைத்திருந்த ஆழமான நட்பை பயன்படுத்தி ஆதாயம் பெறும் குறுகிய புத்தியுடனேயே பழகிவந்தவர்.

தனது மகனுக்கு தகுதியில்லாத போதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று தந்தார். அரசியலுக்கு அப்பாற்றபட்ட பல்வேறு தொழில் அதிபர்களை கலைஞரிடம் அறிமுகப்படுத்தி அரசின் சலுகைகளைப் பெற்று தந்து பயனடைந்தார். இப்படி, நூற்றுக்கணக்கான காரியங்களைக் சாதித்துக் கொண்ட கவிஞர் வைரமுத்து,  தேனி மாவட்ட திமுக அரசியலிலும் தலையிட்டு, அப்போதைய மாவட்டச் செயலாளர் மூக்கையா தேவருக்கு எதிராக கலைஞரிடம் போட்டுக் கொடுத்து, அவரது அரசியல் எதிர்காலத்தையே குழிதோண்டி புதைக்கும் அளவுக்கு முயற்சியெடுத்தவர்.

திமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடும் அளவுக்கு கவிஞர் வைரமுத்து துணிந்துவிட்டதை அறிந்து, அப்போது கலைஞருடன் இருந்த முன்னணி தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு எதிராக கோபம் கொண்டு, கலைஞரிடம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இப்படி கலைஞரின் நட்பை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைவதையே குறிக்கோளாக கொண்டிருந்தவர் கவிஞர் வைரமுத்து. அவரைப் போலவே, கவிஞர் அப்துல் ரகுமான், இன்குலாப், வாலி, மேத்தா, விவேக் என எண்ணற்ற கவிஞர்கள் கலைஞரோடு நெருங்கிப் பழகியிருந்தாலும், அவரின் அபரிதமான அன்பை பெற்றிருந்தாலும் கூட, ஒருவர் கூட கலைஞரின் நட்பை வைத்து காசு பார்க்க துணிந்தது இல்லை.

கோடிகளில் பொருளாதார நிலை உயர்ந்த போதும் கூட கவிஞர் வைரமுத்துவுக்கு, உயர்ந்த சிந்தனை வரவே இல்லை. கலைஞரின் நட்பைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுமனையை குறைந்த விலைக்குப் பெற்றவர். முந்தைய திமுக ஆட்சியில் அரசு விளம்பரங்களை தனது மைத்துனரின் நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுத்தவர். அதற்குப் பிறகு அதிமுக ஆட்சியிலும் கவிஞரின் மைத்துனரின் நிறுவனம், கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அரசு விளம்பரங்களைப் பெற்று பயனடைந்துள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்துள்ள இன்றைய நிலையிலும்கூட,  அரசு விளம்பரத்தை தனது மைத்துனரின் நிறுவனத்திற்குப் பெற்றுத் தந்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியை வைத்து கவிஞர் வைரமுத்து பயனடைந்தளவுக்குகூட,  திமுக.வுக்காக வாழ்நாள் முழுவதும் சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் திமுக முன்னணி நிர்வாகிகள் அனுபவித்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகளை கேட்டு கலைஞரின் ஆத்மா மகிழ்ச்சியடைகிறதோ இல்லையோ, கலைஞர் மீது உண்மையான பக்தியும், திமுக மீது நேசமும் வைத்திருக்கிற சாதாரண தொண்டர் ஒருவர், கலைஞர் நினைவிடத்தில் நின்று சிந்துகிற ஒரு சொட்டு கண்ணீர் துளிகள், கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகளை விட புனிதமானது. விலை மதிப்பில்லாதது..

ஓய்வறியா உழைப்பாளியான கலைஞருக்கு சாதாரண தொண்டர்களின் அப்பழுக்கற்ற கண்ணீர் துளிகள் தான் ஆழ்ந்த நிம்மதியை தரும்….

இப்படி கூறிவிட்டு கண்கள் கலங்க விடை கொடுத்தார் திமுக முன்னணி நிர்வாகி. கனத்த மனதோடு விடைபெற்றேன்…