Mon. May 20th, 2024

மூத்த அமைச்சர்களின் விருப்பத்திற்கு மாறாக முதல்வர் தேர்வு செய்த புகைப்படம்…

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆளுயர திருவுருப்படம் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

நூற்றாண்டு விழா கொண்டாடும் தமிழக சட்டப்பேரவையின் மாண்பிற்கு மகுடம் போல தலைவர் படம் அழகுற அமைந்திருப்பதாக நெகிழ்ச்சியோடு பேசி பேசி உருகுகிறார்கள் சட்டப்பேரவையில் பங்கேற்றுள்ள முதல்முறை திமுக உறுப்பினர்கள்.

சட்டப்பேரவையில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களின் திருவுருவப்படங்களில் இல்லாத தனிச்சிறப்பு, உயிருக்கு ஒப்பான தங்கள் தலைவரின் திருவுருவப்படத்தில் சிறப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினே காரணம் என்று நெகிழ்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள். அவர்களில் நல்லரசுக்கு அறிமுகமான திமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேசினோம்.

விழாவின்போதும் அதற்கு முன்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காணப்பட்ட உணர்ச்சி மிகுந்த எழுச்சியை விரிவாக விவரித்தனர்.

சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கரங்களால் திறந்து வைக்கப்பட்ட கலைஞரின் முழு திருவுருவப் படத்தை தேர்வு செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். கலைஞரின் ஆளுமையை பறைசாற்றும் வகையிலான புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்த புகைப்படத்தைப் பார்த்து, திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முதல்முறை பார்த்த போது மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை. வேறு புகைப்படத்தை திறக்கலாம் என்று தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கலைஞரின் திருவுருப்படத்தை நிறுவுவதற்கு தற்போதுள்ள புகைப்படமே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கூறி, மூத்த அமைச்சர்களின் சம்மதத்தை பெற்றுள்ளார். விழா நாளான ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று திருவுருவப்படம் திறந்து வைப்பதற்கு முன்பாக 3 முறை, அந்தப் படத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவரை டெல்லியில் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய நாள் முதலாக, திருவுருப்படம் வரையும் கலைஞர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகட்டும், சட்டப்பேரவையில் விழா ஏற்பாடுகளுக்கான அறிவுரைகளை வழங்குவதாகட்டும் தனிக்கவனம் செலுத்தி வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

சட்டப்பேரவையில் நிறுவப்பட்டுள்ள மற்ற தலைவர்களின் புகைப்படங்களைப் பார்த்தால், மதிப்பிற்குரிய அந்த தலைவர்கள், தனியாக நிற்பதைப் போலதான் காட்சியளிக்கும். ஆனால், கலைஞர் திருவுருப்படத்தில், அவரின் பின்னால் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அலமாரி, திருவள்ளுவர் சிலை, யானை மீது கை வைத்திருப்பதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கலைஞரின் வாழ்க்கையோடு ஒன்றிப் போன மிக, மிக முக்கியமான மூன்று சிறப்பு அம்சங்களையும் சேர்க்க ஆலோசனை கூறியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.

நூல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். தொல்காப்பியத்திற்கு உரை எழுதியதில் இருந்தே கலைஞரின் இலக்கியப் புலமையை, எழுத்தாற்றலை தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, உலகளவில் இலக்கியத்திற்கும் பரிட்சயமான ஒன்றுதான்.

திருவள்ளுவர் சிலை.. கலைஞரைப் போல திருவள்ளுவரை நேசித்தவரும், பூஜித்தவரும், போற்றியவரும் அவர் வாழ்ந்த காலத்தில் ஒருவரும் அவருக்கு ஈடாகமாட்டார்கள். அவரின் மறைவுக்குப் பிறகும் திருவள்ளுவருக்கு சிறப்பு செய்வதில் கலைஞரை வெற்றி கொள்ள இனிவரும் தலைவர்களால்கூட முடியாது.  

யானை மீது கலைஞர் கை வைத்திருப்பது போன்ற கற்பனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில் உதயமானது எப்படி என்பதுதான் எங்களுக்கு எல்லாம் புரியாத புதிராக இருந்தது. அதே மனநிலையில் இருந்த இரண்டாம் நிலை தலைவர்களும் ஆச்சரியத்தோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துள்ளார்கள்.

அரசியல் வாழ்க்கையில் மட்டுமல்ல, எழுத்துலகில், திரையுலகில், இலக்கிய உலகில் என கலைஞர் எந்தெந்த துறைகளில் எல்லாம் பரிமளித்தாரோ, அத்தனை துறைகளிலும் ஆளுமைகளாக, கடும் போட்டியை உருவாக்கியவர்களாக, துரோகத்துடனும் வன்மத்துடனும் நடந்து கொண்டார்களா… இப்படி எத்தனை எத்தனையோ மாறுபட்ட குணங்களை கொண்டவர்களை எல்லாம் அடக்கி, வெற்றித் திருமகனாக உயர்ந்து நின்றாரே கலைஞர்.., அதை குறிப்பால் உணர்த்துவதற்குதான் யானையின் மீது கலைஞர் கை வைத்திருப்பதைப் போல, திருவுருவப்படம் வரையப்பட்டிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில் யானை நிரந்தர இடம் பிடித்துவிட்டது என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

சட்டப்பேரவையில் யானை வரும் பின்னே…மணியோசை வரும் முன்னே.. என எதிர்க்கட்சி தரப்பில் விஷமத்துடன் விமர்சனம் முன்வைக்கப்பட்டபோது, ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் உதிர்த்த வார்த்தைகளை இந்த இடத்தில் பொருத்தி பார்த்தால், திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் வலிமையும், வீரமும், திடமும், திமிரும் வெளிப்படும்.

திமுக,  அடக்க முடியாத யானை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று கூறியதை, சட்டப்பேரவையின் ஆயுள் முழுவதும் காட்சியளிக்கும் விதமாக கலைஞர் திருவுருவப்படத்தோடு யானை இணைந்தே இருக்கிறது. இந்தக் காட்சியை பார்ப்போருக்கு எல்லாம், முதல்வர் மு.க.ஸ்டாலின் சுயமரியாதையோடு சொன்ன திமுக, அடக்க முடியாத யானை என்ற சொற்டோரும் நினைவில் நிற்கும்.

கலைஞரின் திருவுருப்படத்தின் நுனி முதல் அடி வரை ஒவ்வொரு அம்சமும் வரலாற்றை பொதித்து வைத்திருக்கும் சிறப்புக்குரியது…கலைஞர், தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான பொன் மொழிகளை கூறியிருந்த போதும், அவரது திருவுருவப்படத்தில் காலம் பொன் போன்றதுகடமை கண் போன்றது.. என்ற வாசகங்களுக்குதான் இடம் கிடைத்திருக்கிறது.

நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும் என்று இன ஒற்றுமைக்காக கலைஞர் சொன்னதுப் போன்ற ஆயிரக்கணக்கான சொற்றொடர்கள் வரலாற்றில் இருக்கும் போது, காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என்ற சொற்றோடரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்ததற்கும் பின்னணி காரணம் இருக்கிறது.

பொது வாழ்க்கை என்பது எல்லோருக்கும் வாய்க்கக் கூடிய ஒன்றல்ல. பள்ளி மாணவராக இருக்கும் போதே பொது வாழ்க்கைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கலைஞர், ஒவ்வொரு நிமிடத்தையும் தமிழ் சமுதாயத்தின் விடியலுக்காகவே பயன்படுத்திக் கொண்டவர். பொழுதுபோக்குவது என்பது அவரது அகராதியிலேயே இல்லை. உழைப்பு..உழைப்பு..ஓயாத உழைப்பே என்று வாழ்ந்தவர், தன்னுடைய அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா கற்றுத் தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் தன் இறுதிமூச்சு வரை உறுதியாக இருந்தவர்.

அந்த மூன்று கடமைகளில் முத்தாய்ப்பாக இருக்கும் கடமையை, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களும், வருங்கால இளம்தலைமுறையினரும் நெஞ்சில் வேதமாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்போதும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகதான் அந்த பொன்மொழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார்..

கலைஞரின் மகனாக, தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் நெகிழ்ந்து உணர்ச்சி மிகுந்த உரையாற்றிய போது, தொலைக்காட்சி வாயிலாக கலைஞரின் திருவுருவப் பட திறப்பு விழாவை கண்ட ஒவ்வொரு திமுக தொண்டர்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திண்டாடி போனார்கள்.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன்தந்தை

என்னோற்றான் கொல் எனும் சொல்….

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்….

எனும் இரண்டு குறள்களின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது, சட்டப்பேரவையில் முதல்வராக நின்று மு.க.ஸ்டாலின் செய்த வரலாற்று சிறப்பு மிக்க சொற்பொழிவு….

வருங்காலத்தில் இதுபோன்ற அதிசயம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதே திமுக.வுக்கு மிகப்பெரிய பெருமை. என்று கண்கள் பனிக்க கூறி முடித்தனர் இளம் திமுக எம்.எல்.ஏ.க்கள்….