Sat. Nov 23rd, 2024

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அந்தோணி பிளிங்கனை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, புதிய அதிபர் ஜோ பைடனின் தலைமையிலான அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட டாக்டர் ஜெய்சங்கர், இருநாடுகளிடையே நட்புறவை மேலும் வலுப்படுத்த இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன், அமெரிக்காவும் இந்தியாவுடன் இணைந்து பாதுகாப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம், சுகாதாரம், உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த அதிபர் ஜோ பைடன் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், இருநாடுகளும் இணைந்து உலகை எதிர்கொண்டுள்ள முக்கிய விவகாரங்களில் செயல் ஆற்றுவோம் என்றும் குறிப்பாக, கொரோனோ தொற்றில் இருந்து முழுமையாக விடுபட தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படுவோம் என்று இருதரப்பு கலந்துரையாடலின் போது பிளிங்கன் உறுதிபட தெரிவித்துள்ளார்.