Sat. Nov 23rd, 2024

அதிமுக தலைமைக் கழகமான ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் இன்று முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், வளர்மதி மற்றும் சென்னை மற்றும் புறநகர்  மாவட்டச் செயலாளர் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் வி.என்.ரவி, ஆதி ராஜாராம், கே.பி.கந்தன், அசோக், ராஜேஷ்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. அதேபோல, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்தும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பி.தங்கமணி ஆகியோர் ஆவேசமாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து திமுக நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைக்கு ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் ஒரே குரலில் கண்டனம் தெரிவித்துள்ளதுதான் ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

மேலும், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பி.எஸ்.ஸிடம் காணப்பட்ட மாற்றங்களைக் கண்டு மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த ஓ.பி.எஸ்., இன்றைக்கு தன்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக, இ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதிமுக.வினருக்கு எதிராக திமுக ஆட்சியில் போடப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம் என்று ஓ.பி.எஸ். பேசியதும், அதிமுக.வை ஒற்றுமையாக வழிநடத்த அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றெல்லாம் முழங்கியுள்ளார் ஓ.பி.எஸ்.

வி.கே.சசிகலா தீவிர அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், அதிமுக.வை வலிமைப்படுத்த மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகள் தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். குரல் கொடுத்தது, உள்ளப்படியே இ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் மனங்களை குளிர வைத்துள்ளது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9  மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப் பெற கடுமையாக களப் பணியாற்றுவது, சசிகலாவுக்கு அதிமுக தொண்டர்களிடம் பெரியளவில் ஆதரவு இல்லை. அதனால், சசிகலாவின் ஆடியோ மிரட்டல்களுக்கு எல்லாம் யாரும் பயப்பட வேண்டாம் என்றெல்லாம் இ.பி.எஸ்.ஸும் ஓங்கி குரல் கொடுத்துள்ளார்.

சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மனம் மாறியவராக ஓ.பி.எஸ். காட்டிக் கொண்டதைப் போலவே மற்றொரு முக்கிய நிகழ்வும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், அபாயக் கட்டத்திலேயே தொடர்ந்து இருப்பது குறித்தும் முன்னாள் அமைச்சர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினாலும் பழையபடி கட்சி நடவடிக்கைகளில் இ.மதுசூதனன் கலந்து கொள்ள முடியாது என்பதால், அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய அவைத்தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் ஆலோசித்துள்ளனர்.

அதிமுக.வின் புதிய அவைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நியமிப்பது தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. அவைத்தலைவர் பதவியில் ஜெயக்குமாரை நியமனம் செய்வதை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்றவும் ஒ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் தீர்மானித்துள்ளனர்.

ஏற்கெனவே இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக காலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நண்பகலில் திடீரென்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இடையில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்காத போதும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கைகளை பார்த்து, தாங்கள் யாரும் பயப்பட போவதில்லை என்பதை ஆளும்கட்சியான திமுக.வுக்கு உணர்த்தவே, அவசர, அவசரமாக இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தார்கள் என்றும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆக மொத்தத்தில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக.வினருக்கு மகிழ்ச்சியான இரண்டு செய்திகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று, சசிகலா ஆதரவு நிலையில் இருந்து ஓ.பி.எஸ். மாறியிருக்கிறார் என்பதும், அவைத்தலைவராக ஜெயக்குமார் நியமிக்கப்படவுள்ளார் என்பதும்தான்…

இன்றைக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தியதைப் போல, வரும் காலத்திலும் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் ஒற்றுமையாக இருப்பார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர்..

காத்திருப்போம்…

அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.