சேலத்தை நல்லரசு விட்டாலும், அந்த மாவட்டத்தில் நடைபெறும் அலப்பறைகள் நல்லரசுக்கு நாள்தோறும் தீனிப் போட்டுக் கொண்டே இருக்கும் போல…
இந்தப் படத்தில் வெள்ளையும் சொல்லையுமாக இருப்பவரை பார்த்துக் கொள்ளுங்கள். பால் வடியும் முகத்தோடு மைக்கை பிடித்துக் கொண்டு அரசு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அடக்கம் ஒடுக்கமாக ஆலோசனைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார், மாமனிதர் ஒருவர்… சென்னையில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற அரசு நிறுவனம் ஒன்றின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்த மாமனிதர், அதற்கு முந்தைய நாள் சேலத்தில் திருமுகம் காட்டியபோது, மண்ணின் மைந்தர்கள், குறிப்பாக தாய்க்குலங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள் என்றால் நம்ப முடிகிறதா. நல்லரசுக்கு கிடைத்த தகவல்களை முதலில் நம்ப மறுத்தாலும் கூட, அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புகள், அந்த மாமனிதரின் அலங்கோல காட்சிகளை கண்முன் நிறுத்துவதாகவே அமைந்தது.
புதன்கிழமை இரவு (21 ஆம் தேதி) செல்வாக்குமிக்கவர்கள் வாழும் பகுதியான சேலம் ஸ்டேட் பாங்க் காலனியில் இரவு நேரத்தில், அதாவது 8 மணியளவில் ஆண்களும், பெண்களும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.. ஐந்து ரோடில் இருந்து ரயில் நிலையம் அமைந்துள்ள ஜங்ஷன் பகுதிக்குச் செல்லும் சாலையில்தான் ஸ்டேட் பாங்க் காலனி உள்ளது. அதனால், சாலையின் ஓரமாக மக்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது, காரில் இருந்து இறங்கிய இந்த மாமனிதர், வேட்டி அவிழ்ந்து விழுவதை கூட உணராத முடியாத அளவிற்கு போதையில் இருந்துள்ளார். அவருடன் இருந்தவர்கள் தாங்கிப் பிடித்த போதும் கூட அவரால் நேராக நிற்கவோ, நடக்கவோ முடியாத அளவிற்கு உச்சகட்ட போதையில் இருந்துள்ளார் அந்த மாமனிதர். அலங்கோல நிலையில் காட்சியளித்த அந்த மாமனிதரைப் பார்த்து, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாகரிகமான குடும்பத் தலைவிகள், புடவை முந்தானையால் தங்கள் முகங்களை மூடிக் கொண்டு அவசர, அவசரமாக நடைப்பயிற்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டுள்ளார்கள்.
இப்படி ஒற்றை மனிதராக போதையில் அலங்கோலமாக காட்சியளித்த அந்த மாமனிதர் யார் என்றால், அவர்தான் குறிஞ்சி சிவக்குமார். சாதாரண மனிதராக இவர் இருந்தால், நல்லரசுவில் செய்தியாகும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்க மாட்டார். இவர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவர்.
சேலத்தில் குறிஞ்சி சிவக்குமாருக்கு என்ன வேலை? விசாரணையில் குதித்தோம்.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வியாழக்கிழமை (22 ஆம் தேதி) சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்காக வருகை தந்தார். அவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க முதல்நாள் இரவே (புதன் கிழமை, 21 ஆம் தேதி) சேலம் வந்தவர், ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள அவரது நெருங்கிய நண்பர் சண்முகத்தை சந்தித்திருக்கிறார். இவர் அதிமுக கான்ட்ராக்டர். அதுமட்டுமல்ல, முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய உறவினரும் கூட.
திமுக அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமாருக்கு, அதிமுக கான்ட்ராக்டரான சண்முகம், மதுபானங்களுடன் அசைவ விருந்து வழங்குகிறார். வயிறு முட்ட குடித்துவிட்டு, அசைவ உணவுகளை வாரி முழங்கிவிட்டு, போதை உச்சந்தலைக்கு ஏற, குடியிருப்புவாசிகள் நடமாடும் பொது சாலையில் அலம்பலில் ஈடுபட்டுள்ளார். அலங்கோலமாக குறிஞ்சி சிவக்குமார் நடந்து கொண்டது முழுவதும் ஸ்டேட் பாங்க் காலனியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா (கண்காணிப்பு கேமிராவில்) பதிவாகியுள்ளது. அந்த பதிவுகளை குடியிருப்பு வாசிகளில் சிலர் பதிவு செய்தும் வைத்துள்ளனர்.
போதையிலேயே சென்னைக்கு இரவில் புறப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமார், 22 ஆம் தேதி காலை 11 மணியளவில் (வியாழக்கிழமை) தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கூட்டரங்கில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட துணை மேலாளர்கள், டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆலோசனைகளை வாரி வழங்கியுள்ளார்.
மதிப்புமிக்க அரசு நிறுவனத்தின் தலைவராக உள்ள ஒருவர், பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரிகம் கொஞ்சம் கூட இல்லாமல், அநாகரிகமாக நடந்து கொண்டு சேலம் மக்களை இரவு நேரத்தில் அலறடித்துள்ளார்.
இப்படிபட்ட ஒருவருக்கு எப்படி கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி கிடைத்தது? குறிஞ்சி சிவக்குமாரின் சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள திமுக முன்னணி நிர்வாகிகளிடம் விசாரித்தோம்…
ஆதியும் அந்தமுமாக சிவககுமாரின் வரலாற்றை வாசித்தார்கள். ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு சமுதாயத்தை சேராத சிவக்குமார், ஈரோடு நகரின் ஒருபகுதியில் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கேபிள் டிவி தொழிலை தொடங்குகிறார். அப்போதே திமுக.வில் நிறைய பிரமுகர்கள் அறிமுகமாகிறார்கள். பிடித்தால் புளியங்கொம்பாக பிடிக்க வேண்டும் என்ற விந்தையை அறிந்து வைத்திருக்கும் சிவக்குமார், அப்போதைய திமுக அமைச்சர் என்.கே.கே. பி. ராஜாவிடம் அடைக்கலமாகிறார். குறுகிய காலத்தில் அவரின் அன்பைப் பெற்று, அவரின் வலது கரங்களில் ஒன்றாக வளர்கிறார். அந்த செல்வாக்கில் தனது கேபிள் டிவி தொழிலை விரிவுப்படுத்துகிறார். அதன் மூலம் சொத்து பத்து சேர, என்.கே.கே.பி. ராஜாவின் ஆசீர்வாதத்துடன் அண்ணா அறிவாலயத்தின் தொடர்பும், திமுக இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒரு சிலரின் அன்பிற்கும் பாத்திரமாகிறார் குறிஞ்சி சிவக்குமார்.
என்.கே.கே.பி.ராஜாவின் அடாவடிகளால் வெறுப்படையும் திமுக தலைமை, முதலில் அமைச்சர் பதவியை பறிக்கிறது. பிறகு திமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீங்குகிறது. அடிக்கிற காற்றில் அம்மியே பறக்கிற போது, சிறு துரும்பான சிவக்குமார் எம்மாத்திரம். பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக எதிர்க்கட்சியாகும் போது மெல்ல, மெல்ல கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகும் சிவக்குமார், அப்போது ஈரோட்டில் கேபிள் டிவி தொழிலில் கொடி கட்டி பறக்கும் அதிமுக பிரமுகர் ரமேஷ், அவரது மனைவியும் அப்போதைய அதிமுக கவுன்சிலருமான கவிதாவுடன் நெருக்கமாகிறார். அவர்களின் ஆதரவால், அப்போதைய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் நெருக்கம் கிடைக்கிறது. அவரிடம் கேபிள் டிவி நிறுவனமும் வந்து சேரும் போது, அதிமுக ஆதரவுடன் தனது கேபிள் டிவி தொழிலை விஸ்தாரமாக்குகிறார் குறிஞ்சி சிவக்குமார்.
கடந்த பத்தாண்டுகளும் அதிமுக.வின் ஆதரவோடு கேபிள் டிவி தொழிலை விஸ்தாரமாக்கி, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிடுகிறார் குறிஞ்சி சிவக்குமார். அப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுக தலைமை அறிவித்த எந்தவொரு போராட்டங்களிலும் தலையை காட்டாமல் கேபிள் தொழிலே பிரதானம் என அடக்கி வாசிக்கிறார்.
இப்படி கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கேபிள் டிவி தொழிலை காப்பாற்றிக் கொள்வதற்காக, அதிமுக கரை வேட்டி கட்டாத கட்சிக்காரராக மாறிவிட்ட குறிஞ்சி சிவக்குமாருக்கு, திமுக ஆட்சி அமைந்தவுடன் அதிர்ஷ்ட தேவதை, அவரின் வீட்டுக் கதவை அல்ல, கூரையை பியத்துக் கொண்டு, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவியை அன்பளிப்பாக போடுகிறது.
5 ஆயிரத்திற்கும் குறைவாக கேபிள் டிவி இணைப்பை வைத்துக் கொண்டு ஈரோட்டிற்குள் மட்டுமே தொழில் நடத்திக் கொண்டு வந்த குறிஞ்சி சிவக்குமார் கையில்தான், இன்றைக்ககு தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான கேபிள் டிவி இணைப்புகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும், பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை கண்காணிக்கும் பொறுப்பும் கிடைக்கிறது.
ஒருநாள் இரவில் கோடீஸ்வரன் ஆகிவிட்டால் தலை, கால் புரியாமல் குதிப்பார்களே, அது மாதிரி, கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி கிடைத்தவுடன், அதிகார போதையும், மதுபோதையும் ஒன்றாக கலக்க, தன் நிலை மறந்து, திமுக.வுக்கு மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்திருக்கிறார் குறிஞ்சி சிவக்குமார் என்கிறார்கள் சேலம் திமுக முன்னணி நிர்வாகிகள் மனம் நொந்து போய்…
சேலம் மாவட்ட திமுக.வுக்கு வந்த சோதனை….
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ. தங்கராஜ்