அமமுக.வில் இருந்து விலகி திமுக மற்றும் அதிமுக.வில் சேருபவர்கள் தன்னைப் பொறுத்தவரை எக்ஸ்டரா லக்கேஜ் என்று சந்தோஷமாக கூறிக் கொண்டிருக்கிறாராம் டிடிவி தினகரன். சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதும், வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்று போட்டிருந்த கணக்கு பொய்த்துப் போன பிறகும்கூட தெம்பாகவே இருக்கிறார் டிடிவி தினகரன் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
நாள்தோறும் அமமுக.வில் இருந்து பலர் வெளியேறி திமுக மற்றும் அதிமுக.வில் இணைந்து வரும் இன்றைய காலகட்டத்திலும், எப்படி டிடிவி தினகரனால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று அவருக்கு மிக, மிக நெருக்கமான அமமுக முன்னணி நிர்வாகிகளிடம் கொக்கி போட்டோம். பிரபல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதை போலவே உற்சாகமாகவே பேசினர் டிடிவி.தினகரனின் விசுவாசிகள்.
நம்பிக்கை துரோகியான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கூட்டத்தை அதிமுக.வில் இருந்து நீக்குவதாக 2017 ஆம் ஆண்டு இறுதியில் அறிவித்த நாள் முதலாக இன்று வரை, அரசியலில் வீசி வரும் புயற்காற்றால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தள்ளாட்டம் கண்டிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் கூட டிடிவி தினகரன் நிலை குலைந்துப் போகவில்லை.
அமமுக எனும் தனிக்கட்சியைக் கண்டபோது, அதிமுக.வில் இருந்து பிரிந்து வந்த முன்னணி நிர்வாகிகளை முழுமையாக நம்பிதான், 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுக.வில் இருந்து விலகி திமுக.வில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளிடம், கீழ்மட்ட அளவிலான நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லும் பொறுப்பை ஒப்படைத்தார்.
அந்த தேர்தலில் அமமுக குறைந்தது 5,6 தொகுதிகளிலாவது வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையில்தான் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவழித்தார். அதிமுக.வில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தானே, நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை ஒப்படைத்தார் டிடிவி.தினகரன். தேர்தல் செலவுக்கும், வாக்காளர்களுக்கும் கொடுத்த பணத்தை முறையாக கட்சி நிர்வாகிகளுக்கு பிரித்து தராமல் 50 சதவிகிதத்திற்கு மேல், மண்டல பொறுப்பாளர்களே ஆட்டையை போட்டு விட்டார்கள். அந்த தேர்தலில் கீழ்மட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கும், வாக்காளர்களுக்கும் பணம் முறையாக போய் சேர்ந்திருந்தால், அமமுக.வுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தோல்வி அடைந்ததற்கு அப்போது ஆளும்கட்சியாக இருந்த அதிமுக மட்டுமே காரணம் அல்ல என்பதும், யாரை நம்பியெல்லாம் பொறுப்பை ஒப்படைத்தாரோ, அந்த முன்னணி நிர்வாகிகளே டிடிவி தினகரனின் முதுகில் குத்திய துரோகிகள் என்பதை அவர் புரிந்து கொள்வதற்கே ஓராண்டு காலம் தேவைப்பட்டது.
டிடிவி தினகரன் கொடுத்த தேர்தல் நிதியை சுயநலத்தோடு பதுங்கிக் கொண்ட மண்டல பொறுப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பற்றி புகார் தெரிவிக்க துணிச்சலாக வந்த மாவட்ட நிர்வாகிகளைக் கூட, பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி தன்னிடம் நெருங்காமல் தடுத்து விட்டார்கள் என்பதையே காலதாமதமாகதான் உணர்ந்து கொண்டார் டிடிவி தினகரன்.
பழனியப்பன், சோளிங்கர் பார்த்திபன் உள்ளிட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பவில்லை என்பதும், இப்போதும் அமமுக.விலேயே நீடித்து கொண்டிருக்கும் கோவை மாவட்டத்தில் மண்டல பொறுப்பாளராக உள்ள உடுமலை சண்முகவேலு உள்ளிட்ட சிலர் மீதும் கூட இதேபோன்ற குற்றச்சாட்டுகள் இப்போதும் கூறப்பட்டு வருகின்றன. எதிரிகளாவது நேராக நின்று போராடுகிறார்கள். ஆனால், துரோகிகள் தன் பக்கத்திலேயே இருந்து கொண்டு குழிபறித்ததைதான் டிடிவி. தினகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலின் போது கற்பிக்கப்பட்ட பாடத்தினால், சட்டமன்றத் தேர்தலில் பெரிதாக பணம் செலவழிக்கவில்லை என்பதும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் தீவிர பிரசாரத்தாலும்தான் அமமுக.வுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பதை டிடிவி தினகரனும், அவரது தலைமையை இன்றைககும் ஏற்றுக் கொண்டிருக்கும் நாங்களும் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் போன்றவற்றால் ஏற்பட்ட தொடர் தோல்விகள் ஒருபுறம் விரக்தியை தந்தாலும், அதில் இருந்து குறுகிய காலத்தில் சுதாரித்துக் கொண்ட டிடிவி தினகரன், வட சென்னை மாவட்ட நிர்வாகி சந்தான கிருஷ்ணன், பொன்னேரி பொன் ராஜா போன்ற விசுவாசமிக்க நிர்வாகிகள் கட்சி மாறியதைதான் அவரால் எளிதாக ஜீரணித்து கொள்ள முடியவில்லையே தவிர, பழனியப்பன், சேலம் எஸ்.ஜி வெங்கடாசலம் போன்றவர்கள் கட்சியில் இருந்து விலகிக் சென்றதால், ரெம்ப சந்தோஷமாகவே இருக்கிறார் டிடிவி தினகரன்.
சேலம் எஸ்.ஜி.வெங்கடாசலத்தை நம்பி அவரது மனைவி கூட வெளியூர் செல்ல மாட்டார். பஸ் ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடும் சுயநலக்காரர் எஸ்.ஜி.வெங்கடாசலம். அவர் திமுக.வுக்கு தாவியதால், சேலம் நகரில் உள்ள அமமுக நிர்வாகிகள் உற்சாகத்திலேயே இருக்கிறார்கள்.
அதேபோல, கொங்கு மண்டலத்தை பாழடித்தவர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் என்ற கோபமும் டிடிவி.தினகரனுக்கு உண்டு. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து விலகி அமமுக.வில் சேர வந்த நிர்வாகிகளை எல்லாம் பல மணிநேரம் தனது வீட்டில் காக்க வைத்து சந்தித்ததுடன், உரிய காலத்தில் அவர்களை டிடிவி தினகரனிடம் அறிமுகப்படுத்தாமல் இழுத்தடித்தது போன்ற அநாகரிக செயல்களால்தான், சட்டமன்றத் தேர்தலில் அமமுக.வுக்கு பெரியளவிலான பின்னடைவு ஏற்பட்டது என்பதை, அண்மைகாலமாக பல மாவட்ட தொண்டர்களிடம் கலந்துரையாடும் போதுதான் டிடிவி தினகரன், கவனத்திற்கே வந்துள்ளது.
தன்னை நம்பியும், அமமுக மீதும் அசைக்க முடியாத விசுவாசத்துடன் இருக்கும் தொண்டர் பட்டாளத்தை டிடிவி தினகரன் நன்றாக அடையாளம் கண்டிருக்கிறார். இதுவரை அமமுக.வில் இருந்து விலகியவர்கள் எக்ஸ்டரா லக்கேஜ் என்பதை புரிந்து சந்தோஷமாக இருக்கும் டிடிவி தினகரன், குப்பைகள் எல்லாம் பறந்த பிறகுதான், அமமுக.வின் உண்மையான பலம் வெளியுலகத்திற்கு தெரிய வரும் என்று கூறிக் கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன்.
இதுவரை டிடிவி தினகரனின் அரசியலை மட்டுமே எதிர்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கொங்கு அரசியல்வாதிகள், இனி வரும் காலங்களில் சின்னம்மா சசிகலாவின் ஆட்டத்தில் சிக்கி, சிதிலமாக போகப் போகிறார்கள்.
அதிமுக எனும் ஆலமரத்தை இரட்டையர்களான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரால் மட்டுமே தாங்கி பிடிக்க முடியாது. செல்வி ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழியான சின்னம்மா வி.கே.சசிகலாவின் ஆளுமை மிக்க தலைமை வேண்டும். அப்போதுதான், ஆளும்கட்சியான திமுக.வை எதிர்த்து வலுவான எதிர்க்கட்சியாக போராட முடியும் என்று இப்போது அதிமுக தொண்டர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
விரைவில் வி.கே.சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மாநிலத்தை அவர் ஒரு சுற்று சுற்றி வந்தால், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக, அப்படியே சின்னம்மாவின் தலைமைக்கு தடம் மாறி வந்துவிடும். அப்போது, டிடிவி தினகரன் அஸ்திவாரமாக போட்டு வைத்துள்ள அமமுக எனும் அடித்தளத்தின் மீது பிரம்மாண்டமான அதிமுக எனும் அலங்கார கட்டடம் அமரப்போகிறது. அந்த தினம் வெகு விரைவில் வரப்போகிறது. அன்றைக்கு தெரியும் அமமுக தொண்டர்களின் தியாகம் என்று டிடிவி தினகரன் முகமலர்ச்சியோடு சொல்லும் நம்பிக்கை வார்த்தைகளே எங்களுக்கு சத்திய வாக்குகள் என்கிறார்கள் உற்சாகத்துடன் டிடிவி தினகரனின் விசுவாசிகள்…..
