Mon. Nov 25th, 2024

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்து திடீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக – காங்கிரஸுக்கு மாற்றாக 3 வது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் இளம் தலைவர்களான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

பாரதிய ஜனதாவுக்கு வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கடும் நெருக்கடியை கொடுக்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் சரத் பவார், புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரதமருடனான பேச்சுவார்த்தையில் மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம், 3 வது அணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் கற்பனையானவை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

முன்னதாக, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல், சீனாவின் அத்துமீறல், ஆப்கானிஸ்தான் உள்நாட்டு குழப்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதிகாரப்பூர்வமற்ற வகையில் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி ஆகியோரிடம் கலந்து ஆலோசித்தார்.
இந்த பின்னணியில், பிரதமருடான சந்திப்பு அமைந்திருக்கலாம் என்றும் வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கவுள்ளதால் அதுதொடர்பாகவும் சரத் பவாருடன் பிரதமர் ஆலோசித்திருக்கலாம் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.