Mon. Nov 25th, 2024

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பும் என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பெட்ரோல், டீசல், சமையர் எரிவாயு ஆகியவற்றின் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் விலைவாசி உயர்வு குறித்து மத்திய பாஜக அரசு எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் விரோத அரசாகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

100 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான, வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பாக மத்திய பாஜக அரசு தொடர்ந்து மவுனம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது.

நாடு முழுவதும் கொரோனோ தொற்று பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி உதவிகள் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதையும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது காங்கிரஸ் கேள்வி எழுப்பும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.