Thu. Nov 28th, 2024

என்.கே.கே.பி.ராஜா…

ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். திமுக பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து, அமைச்சரின் புதல்வராக அடையாளம் காட்டப்பட்டு தேர்தல் அரசியலில் குதித்து, எம்.எல்.ஏ., வாகி, அமைச்சராகி அழகுப் பார்த்த திமுக தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர் என்.கே.கே.பி.ராஜா. 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது அரசியல் பயணம் துவங்கிய போது ஈரோடு மாவட்டம் அல்லோகலப்பட்டது. அடாவடி, அராஜகம், ஆள் கடத்தல், நிலம் அபகரிப்பு என குற்ற வழக்குகளை ஒன்றைக் கூட விடாமல், அத்தனையிலும் தன் பெயர் இடம் பெறும் வகையில் அதிரடி காட்டியவர் என்.கே.கே.பி.ராஜா.

ரவுடித்தனத்தை கைவிட மறுத்த அவரை திமுக தலைமை கட்டம் கட்டியது. கடந்த பத்தாண்டுகளில் அராஜக செயல்களை ஒவ்வொன்றாக குறைத்துக் கொண்டு அடங்கி ஒடுங்கி இருந்த போதும் என்.கே.கே.பி.ராஜாவின் அராஜகத்தை ஈரோடு மக்கள், இன்றைக்கும் கூட மறந்துவிடவில்லை.

அப்படி ஒற்றை மனிதராக திகழ்ந்த ராஜாவின் அராஜகத்தைப் பார்த்து, ஈரக் குலையெல்லாம் நடுங்கிப் போயிருக்கும் ஈரோடு மாவட்ட மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை காட்டியிருக்கிறது திமுக தலைமை.

100 ராஜாவுக்கு சமமானவர் தோப்பு வெங்கடாசலம். அப்படிபட்டவரை திமுக.வில் சேர்த்துக் கொண்டுள்ளது, அக்கட்சியின் தலைமை. வேலியில் போகிற ஓணானை தேடிப் பிடித்து வேட்டிக்குள் சொருகி கொள்கிற தைரியத்திற்காகவே, திமுக தலைமையை வெகுவாக பாராட்டிய தீர வேண்டியிருக்கிறது.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா இருக்கிற வரை, தனது விஷக் கொடுக்குகளை எல்லாம் அடக்கி வைத்திருந்த தோப்பு வெங்கடாசலம், கடந்த நான்காண்டுகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்து வந்த தொல்லைகள் வெறும் வார்த்தைகளில் அடக்கி விட முடியாது. ஒத்த எம்.எல்.ஏ.வும் அதிமுக ஆட்சிக்கு முக்கியம் என்பதால், தோப்பு வெங்கடாசலத்தின் அத்தனை சட்டவிரோதப் போக்குகளையும் சகித்துக் கொண்டிருந்ததாக தோப்பு வெங்கடாசலத்தின் நிழல்களே சொல்கின்றன.

பேரூராட்சி அந்தஸ்துக் கொண்ட பெருந்துறையை கடந்து ஈரோடு மாவட்டத்தில் ஒற்றை செங்கல்லை கூட நகர்த்தி வைக்க முடியாத அளவுக்கு செல்வாக்கு இல்லாத தோப்பு வெங்கடாசலத்தின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை, புரோக்கர் வேலையை விட கேவலமானது. பெருந்துறைக்குட்பட்ட அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகளின் தயவைப் பெற்று, பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே தரகர் வேலைப் பார்த்து வயிற்றை கழுவி வந்தவர்.

வி.கே.சசிகலா குடும்பத்தின் உறவுகளில் ஒருவரான ராவணனுக்கு அறிமுகமாகி, பெருந்துறையில் வேறொரு பெயரில் இயங்கிக் கொண்டிருந்த ஆலையை தனது ஆலை என்று பொய் சொல்லி, மணல் கடத்தலில் ஈடுபட்டு, அதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொண்டும், அதிமுக.வில் பதவிகள் பெற்றும், அரசியல் ஏணியில் கால் பதித்தார். ஈரோடு வரும் போதெல்லாம் ராவணனுக்கு செய்த பணிவிடைகளால் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெறுகிறார். அதே சின்னம்மா குடும்பத்தின் ஆசிர்வாதத்தால் அப்போதை அதிமுக ஆட்சியில் அமைச்சராகிறார்.

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்கிற கதையாக, ஈரோடு அதிமுக.வில் தோப்பு வெங்கடாசலம் புகுந்த அதே நேரத்தில், மனிதாபிமானம் கொண்டவரும், கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரருமான மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரைப் போலவே குணநலன் படைத்த முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான சு.முத்துசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறார் தோப்பு வெங்கடாசலம். பத்தாண்டுகளுக்கு முன்பே எஸ்.முத்துசாமிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, போயஸ் கார்டனுக்கு மொட்டை பெட்டிஷன்களை தட்டி விடுகிறார் தோப்பு வெங்கடாசலம்.

ஏற்கெனவே ராவணுக்கு செய்து வந்த பணிவிடைகளை கேள்விப்பட்டு தோப்பு வெங்கடாசலத்தை காத தூரம் ஒதுக்கி வைத்த சு.முத்துசாமி, சாக்கடையில் சந்தனத்தை தேடுவது முட்டாள்தனம் என அதிமுக.வில் இருந்து கலங்கிய மனதோடு விலகுகிறார்.
அதே காலகட்டத்தில் என்.கே.கே.பி.ராஜாவின் அடாவடியில் ஈரோடு மாவட்ட திமுக.வுக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க கண்ணியவான் ஒருத்தர் தேவைப்பட, மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் திருக்கரங்கள், சு.முத்துசாமியை அரவணைத்து, உரிய அங்கீகாரம் வழங்குகிறது. தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயரைக் மூலதனமாக கொண்டு, ஈரோடு மாவட்ட திமுக.வுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார் சு. முத்துசாமி.

கட்சி பேதம் பார்க்காமல் எஸ்.முத்துசாமி என்ற நல்ல மனிதருக்காக, இளைஞர்கள் கூட்டம் முதல் அனுபவஸ்தர்கள் வரை பல்லாயிரக்கணக்கானோர் சு.முத்துசாமியின் தலைமையில் அணிவகுத்து ஈரோடு மாவட்டத்தில், ஆளும்கட்சியான அதிமுக.வுக்கு சவால் விடும் வகையில் எழுச்சி மிகுந்த போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

இதேநேரத்தில், பெருந்துறை தொகுதிக்குட்பட்ட எந்தவொரு இடத்திற்கும் கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோரின் கால்கள் படக் கூடாது என்று ரவுடித்தனத்தோடு மல்லுக்கு நின்றவர் தோப்பு வெங்கடாசலம்.
ஊர், உலகத்திற்குத்தான் அவர் பெயர் தோப்பு வெங்கடாசலம். பெருந்துறையில் போய் கேட்டால், கவுண்டர் பெட்டிஷன் வெங்கடாசலம் என்றுதான் காறி துப்புவார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியை வைத்துக் கொண்டு, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொழில் அதிபர்கள், நில உரிமையாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரிடையே சண்டையை மூட்டி, இரு தரப்பையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்து கட்டப் பஞ்சாயத்து பேசி கட்டிங் பார்ப்பதையே முழு நேர தொழிலாக கொண்டிருப்பவர் தோப்பு வெங்கடாசலம்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலத்தில் தோப்பு வெங்கடாசலம் அடித்த கொள்ளை குறித்து, விரிவான புகார்கள் இன்றைக்கும் சிபிசிஐடி அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இவரது குடும்பத்து பெயரில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு தனியார் பயணிகள் பேருந்துகள், ஈரோடுக்கும் திருப்பூருக்கும் இடையே இன்றைக்கும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.


இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட பெருந்துறை சட்டமன்றத் தேர்தலில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் வாங்கிய மொத்த வாக்குகள் 9,895. இத்தனைக்கும் இவர்தான் சிட்டிங் எம்.எல்.ஏ. செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவரின் உருட்டல், மிரட்டல்களால் மனம் நொந்து போன எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பை தோப்பு வெங்கடாசலத்திற்கு வழங்கவில்லை. இதனால், மானஸ்தன் தோப்பு வெங்கடாசலம், சுயேட்சையாக களமிறங்கினார். நான்காவது இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.லோகநாதன், தோப்பை விட அதிக வாக்குகள் (10,294) பெற்று 3 வது இடத்தைப் பிடித்தார்.
இரண்டு முறை எம்.எல்.ஏ., வாகவும், ஐந்தாண்டுகள் அமைச்சராகவும், அதுவும் ஆளும்கட்சி தோரணையில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலம், டெபாசிட்டை பறிகொடுத்தார்.

இப்படி ஐந்து பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத தோப்பு வெங்கடாசலத்தை திமுக.வுக்கு இழுக்க படாதபாடு பட்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய போது, திமுக.வில் மாநில அளவிலான பதவியைக் கேட்டாராம் தோப்பு வெங்கடாசலம். அதைக் கேட்டு திமுக தலைமை அதிர்ச்சியாகிவிட்டதாம். நல்ல வேளை தோப்புவின் கோரிக்கையை ஏற்று மாநில அளவிலான பதவி கொடுக்க திமுக முன்வந்திருந்தால், அண்ணா அறிவாலயத்தைக் கூட போலி பட்டா தயாரித்து விற்க துணிந்திருப்பார் தோப்பு வெங்கடாசலம்.

மாநில பதவி கிடைக்காது என்று சொன்னவுடன் மாவட்ட அளவிலான பதவியைக் கேட்டு நச்சரித்திருக்கிறார் அவர். மாலை சூடி, மஞ்சள் தெளிப்பதற்கு ஒரு ஆடு வேண்டுமே என்ற கணக்கில், தோப்புவின் ஆசையை நிறைவேற்றி வைப்பதாக திமுக தலைமையின் கருத்தை அறியாமலேயே வாக்குறுதி கொடுத்து அண்ணா அறிவாலயத்திற்கு தோப்பு வெங்கடாசலத்தை அனுப்பி வைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஈரோடு மாவட்ட அரசியலின் பிதா மகன், தற்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அருகில் கூட உட்கார்வதற்கு துளியும் தகுதியற்றவர் தோப்பு வெங்கடாசலம்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி…

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டதை என்ன சொல்ல.. வாயைத் திறந்தாலே பொய்யும் புரட்டும் பேசுகிற ஒரு மனிதருக்கு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொற்பொழிவு ஆற்றிய அண்ணா அறிவாலயத்தில் பத்து நிமிடம் முழங்க நேரம் ஒதுக்கப்படுகிறது என்றால், ஈரோடுக்கு கெட்ட நேரமா அல்லது அண்ணா அறிவாலயத்திற்கு கெட்ட நேரமா.. என்னத்தைச் சொல்ல….

திமுக உறுப்பினராகி ஈரோடு திரும்பி அங்குள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் திருவுருச்சிலைக்கு தோப்பு வெங்கடாசலம் மாலையணிவிக்கும் கொடுமை நிகழ்ந்தால், அந்த முப்பெரும் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை மரணத்தின் வலியை உணருவார்கள்.

தோப்புவின் கருப்பு பக்கங்கள் தொடரும்….

திமுக.வில் சேருவதற்கு முன்பாக நேற்றே தனது வாகனங்களுக்கு பெருந்துறையில் திமுக தலைவர்களின் போட்டோவை ஒட்டியும், கருப்பு சிவப்பு வண்ணமும் பூசி வசூல் வேட்டையை தொடங்கி விட்டார் திமுக.வின் புதிய போர்ப்படைத்தளபதி தோப்பு வெங்கடாசலம்…..