திருப்பத்தூர் மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த காங்கிரஸ்காரர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் நல்லரசுவை தொடர்பு கொண்டார். சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட கிராமத்தில் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெறுவதற்காக, முறையாக கிராம நிர்வாக அலுவலரை அணுகி விண்ணப்பித்ததாகவும், 6 மாதம் கடந்த பிறகும் தங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என்றும் வருத்தப்பட்டார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ்காரர், பட்டா வழங்குவதற்கு வட்டாட்சியரும், கிராம நிர்வாக அலுவலரும் லஞ்சம் கேட்டதாகவும், சட்டத்திற்குப் புறம்பாக லஞ்சம் தருவதற்கு தனக்கு மனமில்லை என்றாலும் கூட அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு, இரண்டு அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த பிறகும் கூட, உரிய காலத்தில் பட்டா வழங்காமல் இழுத்தடித்தாகவும், அதிகாரிகளின் கருணையற்ற குணத்தைக் கண்டு மனம் நொந்து போய், தனக்கு அறிமுகமான அரசு அதிகாரியிடம் முறையிட்டதாகவும், அவரின் ஆலோசனையின் பேரில் புகார் ஒன்றை தயார் செய்து, தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளரான இறையன்பு ஐஏஎஸ் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாகவும் கூறிய அவர், அந்த புகார் கடிதத்தின் மேல் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் விவரித்தார்.
அவரின் உணர்ச்சிகரமான வார்த்தைகளைக் கேட்டு வியந்து போனோம். தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்பதை நம்புவதற்கே சில நிமிடங்கள் ஆனது.
தனது பார்வைக்கு வந்த புகாரை பரிவுடன் பரிசீலித்த தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், சட்டத்திற்குட்பட்டு உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பயனாளிக்கு விரைவாக தீர்வு கிடைக்கவும், அரசு சேவையாற்றுவதற்கு லஞ்சம் பெற்றிருப்பது உண்மை என விசாரணையில் தெரிய வந்தால், துறை ரீதியான உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.அதுதொடர்பான அறிக்கையை தலைமைச் செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
தலைமைச் செயலாளரின் பரிந்துரையை தாங்கி வந்த விண்ணப்பம் உடனடியாக தேவக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் பார்வைக்கு செல்கிறது. ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்திற்கு செல்லும் வழியிலேயே , தலைமைச் செயலாளர் அலுவலகத்திற்கு புகார் மனுவை அனுப்பி வைத்த அந்த காங்கிரஸ்காரரின் கைபேசியில் தொடர்பு கொண்டு, விசாரணை நடத்தி முழுமையான தகவலைத் திரட்டுகிறார். அடுத்த சில நிமிடங்களில் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாகிறது.
வார விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று, காங்கிரஸ்காரருக்கு சொந்தமான நிலம் குறித்த தகவல்களையும், வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி, பின்னர், முழுமையான தகவல்களை கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கிறார். அந்த தகவல், மாவட்ட ஆட்சியர் மூலம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அலுவலகத்திற்கு உடனடியக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
65 வயதை கடந்துவிட்ட அந்த காங்கிரஸ்காரர் வியப்பு நீங்காமலேயே இன்று காலையில் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, இவ்வளவு துரிதமாகவெல்லாம் செயல்படும் என்று கனவுக் கூட கண்டதில்லை. இப்படியெல்லாம் நடக்கிறது என்று தனக்கு அறிமுகமானவர்கள் சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டேன். எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டிருப்பதால், எனது அரசியல் வாழ்க்கையில், தலைமைச் செயலாளர் முதல் மாவடட அதிகாரிகள் வரை இவ்வளவு அக்கறையாக ஒரு புகார் விண்ணப்பத்தின் மீது கவனம் செலுத்தி துரிதமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை என்று நா தழுக்க, தழுக்க பேசினார்.
ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு உரையாற்றிய எத்தனையோ வீடியோ காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அந்த வீடியோக்களில் வலியுறுத்தும் வார்த்தைகளுக்கு ஏற்ப, தன்னுடைய அரசுப் பணியையும் நேர்மையாக அமைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், தனது தலைமையின் கீழ் உள்ள அரசுத்துறை அதிகாரிகள், தவறு செய்கிறார்கள், அரசுப் பணியில் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பது தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், விரட்டி விரட்டி வேலை வாங்கும் வலிமைப் படைத்தவராகவும் இருக்கிறார் என்பதை எனது அனுபவத்தின் மூலமாகவே பார்த்துவிட்டேன். சொல்லிலும், செயலிலும் உள்ளார்ந்த உணர்வுடனே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது என்று நெகிழ்ச்சியுடனே தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்டார், அந்த காந்தியவாதி.
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மேற்பார்வையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற துறையும், அதன் சிறப்பு அதிகாரியுமான ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ்.ஸின் மின்னல் வேக செயல்பாடுகளும், நடவடிக்கைகளும், கிராமங்களில் பரவலாக நல்ல பெயரை எடுத்து வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து அலுவலங்களையும் தெறிக்க விடுகிறார் என்பதும், கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக அலட்சியம் காட்டி வந்த மாவட்ட, வட்டார அளவிலான அரசு அலுவலகங்கள் அனைத்தும் தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்து பறந்து வரும் உத்தரவுகளால் விறுவிறுப்பாக இயங்கி வருவதை கண் கூடாக பார்த்து வருகிறோம் என்று அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், நல்லரசின் நலம் விரும்பிகள் மூலம் மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அரியணை ஏறியவுடன் கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள் துரிதமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று கறார் காட்டி வரும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸின் உத்தரவுகள் ஒவ்வொன்றும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் வரலாறாக மாறும் அளவிற்குதான் உள்ளன.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் ஆட்சியாக இருந்தால் மகிழ்ச்சியே…
வாழ்த்துகள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் சார்….