Sun. Nov 24th, 2024

திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கூட இன்னும் ஆகவில்லை.. இருந்தாலும் நேர்மையான, தூய்மையான ஆட்சியை தர மிகவும் மெனக்கெடுகிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின் என்று கிராமப்புற க்களில் வாழும் படிப்பறிவு இல்லாத அதே சமயம் பட்டறிவு உள்ள மக்கள் பாராட்டி கொண்டு இருக்கிறார்கள் கொரோனா எனும் உயிர்க்கொல்லி தொற்றால் கடந்த 15 மாதங்களாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் அடுத்த வேலை உணவின்றி தவித்து வரும் இந்த நேரத்திலும், உயிரை துச்சமாக மதித்து உழைக்க தயாராக இருந்தும் வேலை கிடைக்காமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட திமுக ஆட்சியும் முதல்வர் மு. க. ஸ்டாலினும் தாங்கள் எதிர்கொண்டுள்ள துயரம் மிகுந்த வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று தருவார்கள் என்று ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்து வருகின்றனர்..

அதற்கு முக்கிய காரணம், முந்தைய திமுக ஆட்சிக் காலங்களை விட தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் அரசின் அறிவிப்புகள் விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கிய அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தோடு திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. தங்களின் இன்றைய பட்டினிக்கு திமுக ஆட்சி யில் பசியாற கஞ்சி தான் கிடைக்கிறது என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பாயசத்துடன் பசியாறும் அறுசுவை உணவே கிடைக்கும் வகையில் பொற்காலத்தை உருவாக்கி தரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தான் வரப்போறாரு..விடியலைதான் தரப்போறாரு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் காத்து இருக்கிறார்கள்..

ஆனால் அப்படியொரு ஆட்சியாக திமுக ஆட்சி இருக்குமா என்ற சந்தேகம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் திமுக நிர்வாகிகளிடமே எழுந்து இருப்பது தான் இன்றைய வேதனை..
அதற்கு முக்கிய காரணம், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 60 நாட்களை மட்டுமே கலந்திருக்கும் இன்றைய நிலையிலேயே பல அமைச்சர்களின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால், அமைச்சர்களின் மனைவிமார்கள், மகன்கள், மச்சான்கள் உள்ளிட்ட உறவுகளின் ஆட்சி அதிகாரம், உருட்டல், மிரட்டல்கள் தலைகாட்ட தொடங்கிவிட்டதை கண்டு ஆற்றாமையில் இருக்கிறார்கள்..

இப்படி உள்ளூர் முதல் மாவட்ட அரசியல் வரை திமுக. வில் கொதிநிலைக்கு வந்து விட்ட நிலையில் திமுக தலைமையின் செயல்பாடுகளை பார்த்து நொந்து போய் கொண்டிருக்கும் திமுக நிர்வாகிகளின் நிலைமை சென்னை முதல் குமரி வரை ஒரே மாதிரியாக தான் இருக்கிறது என்பதுதான் பெரும் துயரம்..

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து இருக்கிறது.. சமூக நீதிக்காகவும் ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயத்நிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டும் உழைத்துக் கொண்டும் இருக்கும் திமுகவால் , முதலில் பொதுமக்கள் பயனடையட்டும். அதன் பிறகு கட்சிகாரர்களான தங்களுக்கு பலன் கிடைக்கட்டும் என்று பொறுமை காத்து வரும் பாரம்பரிய திமுக. வினரின் கனவுகளில் பாறாங்கல்லை தூக்கி போட்டுக் கொண்டு இருக்கிறது திமுக தலைமை என்று வேதனையோடு தெரிவிக்கிறார்கள் முன்னணி நிர்வாகிகள்..

அவர்களின் வேதனைக்குரலுக்கு என்ன காரணம்? கடந்து போன அதிமுக ஆட்சியில் கடைசி நிமிடம் வரை ஆட்சியின் அதிகாரத்தை ரத்த கட்டேரிகள் போல எந்தவொரு ஈவு இரக்கமும் இன்றி ருசித்த ஈரோடு சிந்து ரவிச்சந்திரன் போன்ற அதிமுக நிர்வாகிகளை இவ்வளவு விரைவாக திமுக. வில் சேர்க்க வேண்டிய அவசியம் வந்தது ஏன்? என்கிறார்கள் ஆவேசம் அடங்காத குரலில் ஈரோடு திமுக நிர்வாகிகள்..

கடந்த மே 7 ஆம் தேதி வரை முன்னாள் அதிமுக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வைப்பவராகவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊழலில் திளைக்க ஒப்பந்ததார்களையும் புரோக்கர்களையும் கூட்டி போய் கொண்டிருந்த சிந்து ரவிச்சந்திரன் ஆட்சி மாறியவுடன் எட்டப்பனாக மாறி திமுக. வுக்கு தாவி விட்டார்..

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சிந்து ரவிச்சந்திரன் மட்டுமே கொளுத்தாரே தவிர அவரால் ஈரோட்டில் உள்ள அதிமுககாரன் ஒருவர் கூட வயிறார உணவு சாப்பிட்டதில்லை.. எச்ச கையால் காக்காயை கூட விரட்டாத,எந்தவிதமான பொதுநலன் சார்ந்த சிந்தனையும் இல்லாத, சுட்டுப் போட்டால் கூட எடுபிடி வேலையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத சிந்து ரவிச்சந்திரனை அதிமுக அமைச்சர்களின் பினாமி என்ற குற்ற வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால் திமுக. ஆட்சியை ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடி இருக்கும்.. ஆனால் குற்றவாளி கூண்டில் நிற்கும் அழகை பார்க்க ஆசைப்பட்டு கொண்டிருந்த தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்-முதல்வர் மு. க. ஸ்டாலின் திருக்கரத்தால் தன் உயிரை விட திமுக தொண்டர்கள் உயர்வாக மதிக்கும் இரு வண்ண கதராடையை அணிவித்து வரவேற்கும் கொடூர காட்சியை எல்லாம் பார்க்க வேண்டி வந்து விட்டதே என்று நொந்து போயிருக்கிறார்கள் கலைஞரின் உடன்பிறப்புகள்…மேலும் அதிமுக அமைச்சர்களின் பினாமியாக இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்து பதுக்கி வைத்திருப்பவர்களை சிறையில் தள்ளி அந்த பணத்தை பிடுங்கி அரசு கயானாவில் சேர்த்திருந்தால் தமிழகத்திற்கே விடியல் கிடைத்திருக்குமே என்பதும் திமுக நிர்வாகிகளின் ஆதங்கம்…
பத்தாண்டு காலம் கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள பணத்திற்கு திமுக உறுப்பினர் என்பதுதான் பாதுகாப்பு கவசமாக என்று ஆவேசம் காட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்…

கடந்த சில நாட்களாக தோப்பு வெங்கடாசலம் திமுக. வில் சேரப் போகிறார் என்று திகில் கிளப்பி கொண்டு இருக்கிறார்கள்..ஒத்த பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத ஆளு தோப்பு..அவரு பிறந்ததே மனிதகுலத்திற்கு சாபக்கேடு என்கிற போது எம். எல். ஏ. வும் ஆகி அமைச்சரும் ஆகிவிட்ட கொடுமையை என்ன சொல்ல… அவரை நொந்து கொள்வதை விட அவரது திறமையை பார்த்து அதிமுக. வில் அந்த கட்சியில் பதவியை வாங்கி கொடுத்தாரே ‘தியாக தலைவியாம்’ சின்னம்மா வின் சிஷ்ய கோடிகளை எதில் அடித்தாலும் பாவம் வராது.

15 ஆண்டுகளுக்கு முன்பு கால் டவுசர் போட்டுக் கொண்டு வி. கே. சசிகலா உறவான ராவணனுக்கு டீ காபி வாங்கி கொடுத்து எடுபிடி வேலை பார்த்த வெங்கடாசலத்தை தோப்பாக்கி எம். எல். ஏ. வாக்கி அமைச்சராக்கிய பாவத்திற்கு பெங்களூர் சிறையில் மட்டுமல்ல திகார் சிறையிலும் அடைபட்டு சித்ரவதையை அனுபவிக்க வேண்டும் என்பது ஈரோடு திமுகவினரின் சாபம்..

சிந்து ரவிச்சந்திரன் + தோப்பு வெங்கடாசலத்தின் பெயர்களை உச்சரிக்க கூட அவமானப் படுகிறார்கள் ஈரோடு திமுக தொண்டர்கள்..

ஆனால் திமுக தலைமை அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு துள்ளி குதிக்கிறது.. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று திமுக பிதாமகன், அரசியல் ஆசான், பேரறிஞர் அண்ணா சொல்லிவிட்டு போனது இதற்காக தானா..

நிறைவாக ஒரே வேண்டுகோள்.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான்.. முந்தைய திமுக ஆட்சியின் ஆற்காடு வீராசாமி என்று பெயர் எடுக்காமல் திமுக. வுக்கு ஆள் பிடிப்பதைவிட்டுவிட்டு உங்கள் துறையான மின்சாரத் துறையை கவனியுங்கள்.. கடனில் மூழ்கி கிடக்கும் மின்சார துறையை மீட்டெடுக்கும் வழியை பாருங்கள்..
அதைத் விடுத்து நீங்கள் செய்யும் வேலை எல்லாமே தேவையில்லாத ஆணியை பிடுங்கற கதைதான்..