Sun. Nov 24th, 2024

உலகம் முழுவதும் கொரோனோ 3 வது அலை தொடர்பான எச்சரிக்கைகள் நாள்தோறும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்காலமே நிம்மதியில்லாமல் பயத்துடனேயே கடக்க வேண்டியதுதானோ என்ற பதைபதைப்பிலேயே மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக 3 வது அலை இந்தியாவை கடுமையாக தாக்கும் என்றும், அதிலும் குழந்தைகள்தான் அதிகமாக பலியாவார்கள் என்ற தகவலும் மனிதக்குலத்திற்கே மாபெரும் அச்சுறுத்தலாக இருந்துக் கொண்டிருக்கிறது.

இப்படி ஆபத்தான கட்டத்தில் தமிழகம் இருந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய 2 வது அலை மிரட்டலை கடக்கவே, மாநிலம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் உயிர்ப்பயத்திலேயே நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியை சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கமும் பட்டுவர்த்தனமாக நேற்று போட்டு உடைத்துள்ளது.

செங்கல்பட்டு அருகே நிறுவப்பட்டுள்ள எச்.எல்.எல். பயோடெக் (HLL BioTech) நிறுவனம் மூலம், கரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும்.

நாடு முழுவதும் தேவைப்படும் தடுப்பூசியை வழங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் மத்திய அரசு, செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தில் உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், எச்.எல்.எல். அந்நிறுவனத்தை தமிழக அரசியடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் மூலம் உற்பத்தியை தொடங்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக காத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாடு முழுவதும் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு எதோச்சதிகாரமாக செயல்படுவது பொதுமக்கள் நலனுக்கு எதிரானது. தற்பொழுது நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.

இவ்வாறு சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த 2012 ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் தடுப்பூசி நிறுவனம் 100 சதவீதம் மத்திய அரசின் மானியத்துடன் நிறுவப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் இருந்து ஒரு சொட்டு தடுப்பூசி மருந்து கூட தயாரிக்க முடியவில்லை. அதுதொடர்பாக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் குரல் கொடுக்கவில்லை. 2017 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய பாஜக அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை..வாதாடவும் இல்லை.

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முன்னுரிமை கொடுத்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரே நேரடியாக செங்கல்பட்டிற்குச் சென்று, எச்.எல்.எல். பயோ டெக் நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், தடுப்பூசி மருந்து தயாரிப்பது தொடர்பான பணிகளையும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லிக்கே நேரில் சென்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் வலியுறுத்தி வந்தனர். அந்த நிறுவனத்தை குத்தகை அடிப்படையில் தமிழக அரசு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூட கோரிக்கை வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பாரத் பயோ டெக் நிறுவன அதிகாரிகளை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி தொடங்குவதற்கான பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனையை மேற்கொண்டார்.

இவ்வளவு ஆர்வமாக தமிழக அரசு செயல்பட்ட போதும், செங்கல்பட்டு நிறுவனத்தில் தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு இன்னும் தரவில்லை. இந்த விவகாரத்தை தமிழக அரசு கையில் எடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. தமிழ்நாட்டில் உள்ள சாதாரண ஒரு நிறுவனத்தை செயல்பட வைப்பதற்கே மத்திய அரசிடம் போராடி தமிழக அரசால் அனுமதி பெற முடியவில்லையே என்ற ஆதங்கம், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் அதிகமாக உள்ளது.

மத்திய அரசிடம் போராடி மாநிலத்தின் உரிமைகளை பெற முடியாத அளவுக்கு இன்றைய திமுக அரசு பலவீனமாக இருக்கிறதா ? என்ற கேள்வியை முன் வைக்கும் மாநில நலனில் அக்கறையுள்ள அரசியல் சார்ப்பற்ற தலைவர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை இயங்க வைப்பதற்கே இவ்வளவு போராட்டம் தேவைப்படுகிறது என்றால், இன்னும் நீட் தேர்வு ரத்து, காவிரி நதி நீர் பங்கீடு, தென்பெண்ணை ஆறு தடுப்பணை விவகாரம், மேகதாது அணை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எந்தளவுக்கு முன்னெடுப்புகளை எடுத்து தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கவலையோடு கூறுகிறார்கள்.

மக்களவை, மாநிலங்களவை சேர்த்து திமுக வசம் 31 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம். பி. க்களையும் சேர்த்தால் 46 எம்.பி.க்கள் வருவார்கள்..அவர்கள் அத்தனை பேரும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து, செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதற்காக மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தி, பிரதமர் மோடிக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கலாம்.

தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான அனுமதியை தரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திமுக எம்.பி. க்கள் அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து இருந்தால், நாடு முழுவதும் தமிழக மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயம் தீயாக பரவியிருக்கும்.

அரசியல் ரீதியாகவும் திமுக வெற்றிப் பெற, இந்த போராட்டத்தையும் ஆயுதமாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், முந்தைய அதிமுக அரசு செய்ததைப் போல, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது, மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வழங்குவது போன்ற வழக்கமான சம்பிரதாயங்களில் மட்டும் ஈடுபட்டு, அந்த விவகாரம் வெற்றியடையவில்லை என்றால் ஆறப் போட்டுவிட்டு அடுத்தடுத்த விவகாரத்தில் கவனத்தை செலுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடைப்பிடிக்க துவங்கினால், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முதல் அமைச்சர் பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல, உலக முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் நம்பிக்கையையும் வெகு விரைவாக இழந்து விடக் கூடிய ஆபத்து உள்ளது என்கிறார்கள் தமிழக உரிமைகள் மீட்டெடுக்க வேண்டும் என்று பலகாலமாக போராடி வரும் தமிழ் தேசியவாதிகள்…

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு…….

இதற்கு மேல் கச்சத்தீவை மீட்போம் என்ற முழக்கமும் இருக்கிறது….