Sun. Nov 24th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு றை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். தூத்துக்குடியை உள்ளடக்கிய தென் மாவட்ட அரசியலில் பழுத்த அனுபவம் கொண்டவர் அவர். அவரின் அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏற்றமும், இறக்கமும், சர்ச்சைகளும், சாதனைகளும் மிகவும் விமர்சனமாகிக் கொண்டே இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு அவரது அரசியல் வாழ்க்கையை அலசி ஆராய்வதை தவிர்த்துவிட்டு, ஆட்சி நிர்வாகத்தில் அவருக்குள்ள தகுதியும், திறமையையும் குறித்து நல்லரசுக்கு கிடைத்து வரும் தகவல்களை முன் வைக்கவே இந்த செய்தித்தொகுப்பு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் நீரில் அமைச்சரின் பாதமும், அவரது காலணியும் நனைந்து விடக் கூடாது என்பதற்காக, கோயில் திருவிழாக்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளை பக்தர்கள், பக்தி பரவசத்துடன் சுமந்து செல்வதைப் போல, பழவேற்காட்டில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, அங்குள்ள மக்கள் சுமந்து வந்த அற்புதக் காட்சியை, தமிழகத்தைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்களும் பார்த்து, கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

இப்படிபட்ட அமைச்சர்கள் மத்தியில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வரும் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அவரது தொகுதிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வீடு, வீடாக ஏறிச் சென்று ஆய்வு நடத்துகிற காட்சிகளையும் ஊடக காட்சிகள் மூலம் உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. குடிசைவாசிகளின் துயரங்களை நேரில் பார்த்து அறிந்து கொள்வதற்காக துர்நாற்றம் அதிகமாக வீசும் கழிவறைகளுக்கும் துணிந்து சென்று ஆய்வு செய்கிறார்.

அவரது முகத்திலோ, உடல்மொழியிலோ துளியளவுக்கும் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. முதல்வரின் புதல்வர் என்ற அங்கீகாரம் இருக்கும் போது கூட, மக்கள் சேவையில் உதயநிதி ஸ்டாலின் காட்டி வரும் ஆர்வமும், அக்கறையும், நாற்றம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆய்வு செய்யும் போது எந்தவிதமான முகம் சுளித்தலும் இல்லாமல் இருப்பதைக் கண்டு, எதிர்க்கட்சியினர் கூட மனம் திறந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இரண்டு விதமான மக்கள் சேவகர்கள் உள்ள திமுக.வில்தான், பண்ணையார்தனத்துடனே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது, அதிகளவு கோபத்தில் இருக்கிறார்கள் மீனவர் சமுதாய மக்கள். ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட மீனவர் சமுதாய மக்களிடயே உள்ள ஏற்றத்தாழ்வுகள், மீன்பிடித் தொழிலில் உள்ள நெருக்கடிகள், மீன்பிடித் தொழிலில் ஒவ்வொரு மணிநேரமும் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என அவர்களுடைய வாழ்வாதாரப் பிரச்னைகள், தமிழகத்தில் எஞ்சியுள்ள மக்கள் தொகைக்கு முற்றிலுமாக மாறுபட்டவை. வேறுபாடானவை.

மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள், உயிருடன் கரைக்கு திரும்பி வருவதே கடவுளின் ஆசிர்வாதமாக மாறிவிட்ட இன்றைய நிலையில், அவர்களின் பிரச்னைகளை காதுகொடுத்து கேட்டு, அதனை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு மிகுந்த பொறுமையும், அசாத்தியமான திறமையும் தேவைப்படுகிறது.

அதுவும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள்ளேயே வரக்கூடாது என்று உயிர்ப்பயத்தை நித்தம் நித்தம் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகளைப் போல, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் தூக்கிக் கொண்டு, இந்திய கடல் எல்லைக்குள்ளாகவே உலாவிக் கொண்டிருக்கும் போது, மீன் வளத்துறை அமைச்சரை 24 மணிநேரமும் மீனவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், இலகுவாக இருக்க வேண்டும் என்பதுதான் சென்னை முதல் குமரி வரை உள்ள மீனவர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இயல்பாகவே மீனவ சமுதாயத்தின் மீது பரிவு காட்டும் குணம் கொண்டவராக இல்லை என்பதுடன், அவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் குணமும் கொண்டவர் என்கிறார்கள் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள். கடந்த 10 ஆண்டு காலத்தில் ஆட்சியில் இல்லாத போது, மீனவர் சமுதாயத்தை அரவணைத்து செல்லாமல், பல்வேறு காலங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்தவர் என்பதை இப்போதும் வேதனையோடு நினைவுக்கூர்கிறார்கள் தூத்துக்குடியில் உள்ள மீனவர் சங்கப் பிரதிநிதிகள்.

அண்மைக்காலமாக மீனவர் சமுதாயத்தோடு மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, மீன் வளத்துறையில் இருந்தே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகார் மனுக்களை அனுப்பி வைக்க தொடங்கிவிட்டார்கள்.

கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த 2011 முதல் 2016 வரையிலான காலத்தில் அப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்து ஜெயபால், அவரது சக்திக்குட்பட்டு மீனவர்களின் துயரங்களை போக்க முயற்சிகள் எடுத்தார் என்று நினைவுக்கூரும் தமிழ்நாடு மீனவர் சங்கப் பிரதிநிதிகள், அதற்குப் பிந்தைய எடப்பாடி பழனிசாமி அரசில் மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கண்டுகொள்ளவே இல்லை, நலத்திட்ட உதவிகள் வழங்குவதிலும் பெரியளவில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏற்கெனவே 5 ஆண்டுகள் பின்தங்கி போன ஒரு சமுதாயத்திற்கு புத்துணர்வு ஊட்ட, மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மீன்வர் நலத்துறைக்கு அமைச்சராக நியமிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று காத்திருந்த நேரத்தில், மீனவர் சமுதாயம் என்றாலே முகம் சுளிக்கும், சாதி துவேஷத்தை வெளிப்படுத்தும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, மீன் வளத்துறை அமைச்சர் பதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த அடிப்படையில் வழங்கினார் என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்கிறார்கள், மீனவர் சமுதாயத்திற்காக பல காலமாக போராடி வரும் தலைவர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு வெகு விரைவாக 100 வது நாள் வெற்றி விழாவை கொண்டாடவுள்ளது. அதற்கு முன்பாகவே, வளமான இரண்டு துறைகளை வைத்திருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இருந்து மீன் வளத்துறையை தனியாக பிரித்து, மீனவர் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்னைகளை நன்கு புரிந்து கொண்டிருக்கும் அல்லது புரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் திமுக எம்.எல்.ஏ., ஒருவருக்கு வழங்கி, ஒரு கோடி மீனவர்களின் துயரத்தை துடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் சமுதாயத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு என்கிறார்கள் மீனவர் தலைவர்கள்.

100 நாளுக்குப் பிறகும் மீன் வளத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனே நீடிப்பார் என்றால், திமுக ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முதல் சமுதாயமாக மீனவர்கள்தான் இருப்பார்கள் என்று மிகுந்த யோசனைக்குப் பிறகு குரல் உயர்த்தி சொல்கிறார் தூத்துக்குடியில் உள்ள மீனவர் சங்க தலைவர் ஒருவர்.

அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியே, ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி என்ற குறிக்கோளோடு அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர் சமுதாய மக்களின் வேதனைக் குரல்கள் கேட்குமா?