Sun. May 5th, 2024

வழக்குரைஞராக வாழ்க்கையை தொடங்கிய எல். முருகன் இன்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்கிறார். அவரின் வாழ்க்கை பயணத்தை பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவராக உள்ள எல். முருகன் மத்திய அமைச்சராக இன்று (ஜூலை 7) மாலை 6 மணிக்கு பொறுப்பேற்றார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த கோனூர் என்ற ஊரில் 1977ஆம் ஆண்டு மே29ஆம் தேதி பிறந்தவர் எல். முருகன். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த எல். முருகன், 15 ஆண்டுகள் வெற்றிகரமான வழக்குரைஞராக திகழ்ந்தார்.

அதே பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு (2020) மார்ச் மாதம் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் பாஜக தலைவராக ஜெ.பி நட்டாவால் அறிவிக்கப்பட்டார். இவர் பதவியேற்று ஓராண்டுகள் கடந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் நாகர்கோவில் எம்ஆர் காந்தி, திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி சரஸ்வதி, கோயமுத்தூர் தெற்கு வானதி சீனிவாசன் என நால்வர் சட்டப்பேரவைக்கு தேர்வாகினர்.

இந்த நிலையில் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு தீவிரமாக பங்காற்றியவர்களில் ஒருவராக எல். முருகன் திகழ்கிறார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று சட்டப்பேரவை செல்லும் என அவர் கூறியதை பலரும் கேலி கிண்டல் செய்த நிலையில் சாதித்துக் காட்டியுள்ளார்.

மேலும், இந்தத் தேர்தலில் எல். முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெறும் 1,473 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வாக்கு முடிவுகள் வெளியான அன்றைய தினம் இரவு வரை இருவரில் யார் வெற்றி பெறுவார் என்பதில் நீண்ட இழுபறி நிலவியது.

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த எல். முருகன் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் இந்த இடத்துக்கு முன்னேறி வந்துள்ளார். எல். முருகன் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் ஆங்கிலமும் பேசக் கூடியவர்.