Sun. Nov 24th, 2024

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியதாக இருப்பதாக அவரது நலம் விரும்பிகள் கவலையோடு விவரிக்கின்றனர். அவர்களில் நமக்கு அறிமுகமானவரிடம் பேசினோம். சோககீதம் வாசித்தார்.

எதிர்க்கட்சித்தலைவராக கம்பீரம் காட்டிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே கலங்கிப் போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிவுகள் வெளியாகி கொஞ்ச நாட்கள் கடந்த பிறகும் கூட, தனக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே அரசியல் செய்வார்.அதனை தனக்குள்ள ஆதரவுக் கூட்டம் மூலம் அவரை சமாளித்து, அதிமுக.வின் தலைமையை எளிதாக கைப்பற்றிவிடலாம் என்ற தைரியத்தில்தான் திமுக அரசை எதிர்த்து பேட்டி கொடுக்கவும், அறிக்கைகள் விடவும் துணிந்தார்.

ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்த வி.கே.சசிகலா, அரசியல் ஆசையை முற்றிலும் துறந்துவிடாமல், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆடியோ வாயிலான யுததத்தை ஆரம்பித்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

தன் கூடவே இருந்தாலும் தனக்கு எதிரான நிலைப்பாட்டைதான் ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார். அவரை எந்த சூழ்நிலையிலும் நம்ப முடியாது என்ற எண்ணத்தில் அழுத்தமாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்.ஸின் சமுதாயத்தைச் சேர்ந்தவரான வி..கே.சசிகலாவும் அரசியல் அரிதாரம் பூசிக் கொள்ள அதிரடி அரசியலை மேற்கொண்டுள்ள நிலையில், எத்தைத் தின்றால் பித்தம் குறையும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி.

இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திவிட்டு, வி.கே.சசிகலாவுக்கு எதிராக வீரமாக பொங்கினாலும், அவரின் ஆடியோ பேச்சு மூலம் தனது தலைமைக்கு ஆபத்து நெருங்கி விட்டது என புலம்பத் துவங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக.வுக்குள்ளேயே தனக்கு எதிரான அரசியல் சக்திகள், வி.கே. சசிகலாவுடன் இணைந்து தன்னை முழு மூச்சாக எதிர்த்து, கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என்பதால், நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

ஓ.பி.எஸ்.ஸை ஓரம்கட்டிவிட்டு அதிமுக.வுக்கு ஒற்றைத் தலைமையை உருவாக்கி அதில் தானே அமர்ந்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட கால கனவுக்கு, வி.கே.சசிகலா ஓ.பி.எஸ் கூட்டணி மூலம் ஆபத்து வநதுவிட்டதையும், இருவர் கூட்டணியை தகர்த்து, அதிமுக.வுக்கு எவ்வளவு விலை கொடுத்தாவது தலைமை வகிக்க வேண்டும் என்ற வெறி, இ.பி.எஸ்.ஸின் மனதில் கொளுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு தற்போதைய பயமே, சசிகலாவைப் பார்த்தோ, ஓ.பி.எஸ்.ஸைப் பார்த்தோ துளியும் இல்லை. தனக்கு எதிராகவும், அதிமுக.வுக்கு எதிராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுப்பார். அதில் இருந்து எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்வது என்பதில்தான் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார். ஓமலூரில் வெளிப்படையாக நடைபெற்றது அதிமுக நிர்வாகிகள் கூட்டம். ஆனால், ரகசியமாக மற்றொரு ஆலோசனையும் அங்கு நடந்தது. சேலம் மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ரகசிய ஆலோசனை நடத்தினார்.

திமுக ஆட்சியில் தன் மீதும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதும் நிச்சயமாக ஊழல் வழக்குகள் போடுவார்கள். சிறைக்கு கூட செல்ல வேண்டியிருக்கும். அப்படி நெருக்கடியான சூழ்நிலைகள் வந்தால், அதிமுக வழக்கறிஞர்கள்தான் களத்தில் தீவிரமாக பணியாற்ற வேண்டியிருக்கும். அவரவர் சக்திக்கு ஏற்ப, பிரபல வழக்கறிஞர்களை வைத்து திமுக போடும் வழக்குகளில் இருந்து அதிமுக முன்னணி நிர்வாகிகள் விடுதலை பெறும் வகையில் வாதாடும் பொறுப்பை அதிமுக வழக்கறிஞர்கள் அணி ஏற்றுக் கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் அதிமுக வழக்கறிஞர்களுக்கு போராடடமான காலமாகதான் இருக்கும். அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என நீண்ட நேரம் ஆலோசனை கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சேலம் மாவட்டம் ஓமலூர் கூட்டத்தை முடித்து சென்னை திரும்பிய இ.பி.எஸ்., அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவடடச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியதின் பின்னணியிலும், திமுக அரசு கையில் எடுக்கவுள்ள அதிமுக.வுக்கு எதிரான வழக்குகளை சமாளித்து, வழக்குகளில் இருந்து விடுபட்டு வரும் வரை, மாவட்டச் செயலாளர்கள் தனது ஆதரவாளர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்கான வியூகம்தான்.

எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நிமிடத்தில் இருக்கிற ஒரே பயம். திமுக ஆட்சியில் முதல்நபராக ஊழல் வழக்கில் தன்னைதான் கைது செய்வார்கள் என்பதும், முதல் நபராக சிறைக்கு சென்றுவிடக் கூடாது என்பதும்தான். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு, தன்னை கடைசியாக சிறைக்கு அனுப்பினால் போதும். நவம்பர், டிசம்பர் வரை தனக்கு எதிரான கைது நடவடிக்கைகளை திமுக அரசு தள்ளி வைத்தால் கூட போதும். வி.கே.சசிகலா அரசியலையும், ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் விளையாட்டுகளையும் தூள் தூளாக்கிவிட்டு, ஒட்டுமொத்த அதிமுக.வுக்கு தலைமை ஏற்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, அதிமுக.வின் , அசைக்க முடியாத தலைவராக சிறைக்கு செல்வதுதான் சரியாக இருக்கும் என்ற திட்டத்தோடு நடமாடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

முதல் நபராக தான் சிறைக்கு சென்றுவிட்டால், ஓ.பி.எஸ்.ஸும், வி.கே.சசிகலாவும் கூட்டு சதி செய்து அதிமுக.வை கைப்பற்றிவிடுவாகள் என்பதையும், அதன் மூலம் தன்னை அரசியலில் இருந்து முழுமையாக ஓரம்கட்டிவிடுவார்கள் என்ற பயத்திலும்தான் உழன்றுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே உத்தமம் என்று, அரசியல் மறுவாழ்வு பிச்சைக் கேட்டு, தனக்கு நிழல் போல இருக்கும் சேலம் மாவடட அதிமுக பரபரப்பு பிரமுகர் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தூது போகும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார், எடப்பாடி பழனிசாமி என்று ஒரே மூச்சில் இ.பி.எஸ்.ஸின் இன்றைய பரிதாப சூழலை விவரித்தார் அவரின் விசுவாசி…

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சித்து விளையாட்டு வெற்றிப் பெறுமா? அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு, எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று அடையாம் காட்ட துணிவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்… காலம்தான் பதில் சொல்ல வேண்டும்….