Mon. May 6th, 2024

சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி….

டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ்…

தமிழகத்தின் புதிய டிஜிபி யாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திரபாபு ஐபிஎஸ்.ஸை பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்களில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதைவிட மனித உரிமை இயக்கத்தினரும், டிஜிபி ஆக பதவியேற்றுக் கொண்ட பிறகு சைலேந்திர பாபு ஐபிஎஸ் அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி பொதுமக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும், மனித உரிமைகளை மதித்து காவல்துறையினர் நடந்து கொளள் வேண்டும் என்று கூறிய அறிவுரைகளை நினைவுக்கூர்ந்து, சைலேந்திரபாபு ஐபிஎஸ்.ஸால் தமிழக காவல்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு விடும் என்று நம்பிக்கைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களாக இருக்கட்டும், 24 மணிநேர செய்தி ஊடகங்களாக இருக்கட்டும், தமிழ், ஆங்கில நாளிதழ்களாக இருக்கட்டும், புதிய டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ்.ஸுக்கு சூட்டப்பட்டுக் கொண்டிருக்கும் புகழ் மாலைகள், நியாயமானவைதான். கொண்டாட்டத்திற்குரிய காவல்துறை அதிகாரிதான் சைலேந்திர பாபு ஐபிஎஸ் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிக, மிக நெருங்கிப் பழகியவர்களில் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.ஸைப் போல, வேறொரு காவல்துறை அதிகாரியை அடையாளம் காட்டுவது எளிதான விஷயம் அல்ல. அனைத்துத்தரப்பு மக்களிடமும் இதுகாறும் அவர் காட்டி வந்த அன்பில் போலித்தனம் துளியும் இல்லை என்பதும் உண்மைதான்.

ஆனால், காவல்துறையின் உயரிய பீடமான தலைமை இயக்குனர் பதவியை அலங்கரிக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ்., இன்றைக்கு காட்சியளிப்பதைப் போல, 30 ஆண்டுகளுக்கு முன்பு சாந்த சொரூபமாக, பக்குவப்பட்டவராக காட்சியளித்தவர் அவர் இருந்தவர் இல்லை என்பதுதான் துளியும் பொய் கலக்காத சத்தியம். சாமி பட ஆறுச்சாமியாக, சிங்கம் பட துரைச்சிங்கமாக தனது இளமைக்காலத்தில் திமிரிக் கொண்டிருந்தவர்தான் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.

அவரைப் பற்றி நான் எழுதும் மூன்றாவது கட்டுரை இது.. காவல்துறை கண்காணிப்பாளர்களில் பாதிப்பேர் கோழைகள் என்று நான் எழுதிய முதல் கட்டுரையில், ஐபிஎஸ் முடித்துவிட்டு உதவி காவல் கண்காணிப்பாளராக அவர் சேலத்தில் பணியாற்றிய காலத்தில், அவர் எப்படிபட்டவராக இருந்தார் என்பதை நேரடி அனுபவத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறேன்.

இரண்டாவது கட்டுரை, ஆளப்போறான் தமிழன் என்ற திரைப்பட பாடலுக்கு ஏற்ப டிஜிபி பதவியில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் அமர்த்தப்பட வேண்டும் என்றும், அவரின் கடந்த கால மனிதநேய செயல்பாடுகளின் லம், காவல்துறையின் உயரிய பதவிக்கு பெருமை சேர்ப்பார் என்ற முழு நம்பிக்கையிலும் பதவி செய்தேன். ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சராக, உலகம் முழுவதும் தமிழினத் தலைவராக பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்ட மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வரன மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதால், காவல்துறை தலைவராக சைலேந்திர பாபு ஐபிஎஸ் என்ற ஒரு தமிழர் நியமிக்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்ற பெரும்பான்மையான தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, இரண்டாவது கட்டுரையை எழுதினேன்.

கடந்த 27 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து மாலை ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த போது, அந்த செய்தியின் முழு வடிவமும் கரு கொண்டு கனவுப் போல மனதில் பதிவாகி, தூங்கவே விடவில்லை. விடியற்காலை 3.30 மணியளவில் இருந்து அந்த கட்டுரையை பதிவு செய்ய துடித்தது மனசு. தாம்பரம் வந்தவுடன் மடிக்கணினி மூலம் செய்தியை தயாரிக்க வசதி கிடைத்தது. எழும்பூர் வருவதற்குள் 30 நிமிடத்தில் அந்த செய்திக்கு முழு வடிவம் கொடுத்துவிட்டேன்.

ஐபிஎஸ் பட்டத்தோடு சேலம் மாவட்டத்திற்கு அவர் வந்த ஆண்டு 1992 அந்த காலகட்டத்தில் தராசு வார இதழும், தராசு மக்கள் மன்றமும் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நேரம். தராசு மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்டச் செயலாளராக நான் சேவையாற்றிய காலமும் அதுதான். சேலத்தில் அவரோடு ஏற்பட்ட அறிமுகத்தை முதல் கட்டுரையில் விவரித்திருக்கிறேன்.
அங்கிருந்து காவல் கண்காணிப்பாளராக பணிமாறுதல் பெற்று திண்டுக்கல் செல்கிறார். அங்கே நான் அவரைச் சந்தித்த நிகழ்வை, இன்றைக்கு நினைத்தாலும் உள்ளம் பூரிக்கிறது. 1992 ஆம் ஆண்டில் அவருக்கு வயது 28 இருக்கலாம். அந்த வயதில் முடிவெடுப்பதில் வேகமும், சலனமும் இல்லாமல் செயல்பட்ட பாங்கை கண்டு வியந்து போனேன்.

தராசு மக்கள் மன்றம் சார்பில் அந்த காலத்தில் நிறைய காதல் திருமணங்களை செய்து வைத்திருக்கிறோம். அந்த வகையில் கார்த்திகை அல்லது மார்கழி மாதமாக இருக்கும் சபரிமலைக்கு மாலையணிந்திருந்தேன். கோவையில் இருந்து இளைஞர்கள் சிலர் என்னை தேடி வந்தார்கள். அதில் ஒருவர், தனத மனைவி கடத்தப்பட்ட நிகழ்வை கூறினார். வத்தலக்குண்டு அருகில் உள்ள மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பொறியியல் படடம் படித்துக் கொண்டிருந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செயது கொண்டு கோவையில் குடும்ப வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். ஒருமாதம் கடந்த பிறகு பெண்ணின் தந்தை பால்காரர் போல, அதிகாலையில் வந்து கதவை தட்டி, அவரது பெண்ணை கடத்திக் கொண்டு சென்றுவிடுகிறார்.


அவரை மீட்பதற்கு எனது உதவியை நாடி வந்திருந்தார்கள். கடத்தல் நிகழ்வு நடந்து பத்து நாட்கள் கடந்த பிறகு என்னிடம் வந்தார்கள். அதற்கு முன்பாக, அவர்களாகவே முயன்றும் காரியம் கைகூடவில்லை. சேலத்தில் இருந்து நண்பகலில் அம்பாசிடர் கார் மூலம் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டோம்.

மாலை 6 மணியளவில் திண்டுகல்லுக்கு 20, 30 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருந்த போது, எதிர்திசையில் வந்துக் கொண்டிருந்த சிகப்பு விளக்கு சைரன் வைத்த வண்டி, எங்கள் வாகனத்தை கடந்து பழநி நோக்கிச் சென்றது. சந்தேகத்துடனேயே தொடர்ந்து பயணித்த போது காவல்துறையின் சோதனை சாவடி எதிர்பட்டது. விசாரித்ததில், எஸ்.பி. சைலேந்திரபாபு பழநிக்கு சென்று கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.
எங்கள் காரை திருப்பிக் கொண்டு பழநிக்கு வந்து சேர்ந்தோம். சௌராஷ்டிரா சமுதாயத்தினரின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட எஸ்.பி, பழநியிலேயே தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றோம். இரவு 9 மணியை கடந்திருக்கும். சற்றுமுன் சிற்றுண்டி அருந்திவிட்டு உறங்க செல்ல போகிறார் என்று அவரது கார் ஓட்டுநர் மூலம் தகவல் கிடைக்க, எஸ்.பி.யின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அணுகி விவரத்தைச் சொன்னே. சந்திப்பது கடினம் இருந்தாலும் தகவல சொல்கிறேன் என்று கூறினார். சில நிமிடங்களில் அழைப்பு வந்தது. எஸ்.பி.சைலேந்திர பாபுவிடம் விஷயததைச் சொன்னேன். நாளை காலை வத்தலக்குண்டு காவல் நிலையம் சென்றுவிடுங்கள். இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறேன். கடத்தப்பட்ட பெண்ணின் விருப்பத்தின்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கண்டிப்புடன் கூறினார்.
பழநியிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை வத்தலக்குண்டு காவல் நிலையத்திற்கு 10 மணியளவில் சென்றோம். நானும் காதலனான கணவனும் இன்ஸ்பெக்ட்ரை சந்தித்தோம். மரியாதையாக பேசி, மலைக்கிராமத்தில் உள்ள அவரது மனைவியை அழைத்து வர காவலர்கள் சென்றிருக்கிறார்கள். ஒருமணிநேரத்திற்குள் வந்துவிடுவார்கள் என்றார். காவல் நிலையம் முனபு காரை நிறுத்தி அதிலேயே காத்திருந்தோம். காரின் பின்பக்க கண்ணாடியில் தராசு ஆசிரியர் ஷ்யாம் போட்டோ அச்சடிக்கப்பட்டிருந்த போஸ்டரையும் ஒட்டியிருந்தோம்.

ஒரு மணிநேரம் கடந்த போது அரசல் பழசான ஒரு ஜீப் வந்தது. அதில் இருந்து இரண்டு காவலர்கள், இளம் பெண் ஒருவரும், அவரது பெற்றோரும் இறங்கினார்கள். அவர்கள் காவல் நிலையத்திற்குள் சென்ற சிறிதுநேரத்திலேயே குட்டி யானை போன்ற இரண்டு சரக்கு வாகனத்தில் 50க்கும் மேற்பட்ட ஆட்கள் வந்து இறங்கினார்கள். அவர்களைப் பார்த்து உண்மையிலேயே நான் பயந்து போனேன்.
கும்பலமாக உள்ளே சென்றவர்களால், காவல் நிலையத்திற்குள்ளேயே காட்டுக் கூச்சல் எழுந்தது. புதுமாப்பிள்ளை கோலத்தில் இருந்த அந்த பையனை பார்த்தேன். இரண்டு வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு என்று தயங்கத்துடன் கூறினார்.

இரண்டு மணிநேரம் பஞ்சாயத்து ஓடிய பிறகும், இன்ஸ்பெக்டர் என்னை அழைக்கவே இல்லை. பொறுமையிழந்து நானே காவல் நிலையத்திற்குள் சென்றேன். பதற்றமாக காட்சியளித்த இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்தவுடன் அவசரமாக எழுந்து வந்து, எனது தோளில் கை போட்டவாறே காவல் நிலையத்திற்கு வெளியே அழைத்து வந்து, சார், ஒரே குலத்தெய்வத்தை கும்பிடறவங்க. பங்காளி முறையிலானவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பையனும், பொண்ணும் அண்ணன் தங்கை உறவு. அதனால்தான் இரண்டு குடும்பத்தினரும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று கூறினார்.

சார், இரண்டு பேரும் ஒருமாசம் குடும்பம் நடத்தியிருக்கிறார்கள். இப்போது போய் அண்ணன் தங்கை உறவு என்று சொன்னால் எப்படி, மேலும், சித்தப்பா, பெரியப்பா முறையிலான உறவு இல்லை. பங்காளி முறை என்றால் நூறு குடும்பங்கள் கூட வரும். இப்படிப்பட்ட நேரத்தில் இதையெல்லாம் பேசுவது முறையா என்றேன். அவர்கள் கிராம மக்கள். புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று இன்ஸ்பெக்டர் சொன்னார். சரி சார். நான் எஸ்.பி.யிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு, தொலைபேசியை தேடி சென்றேன். அப்போதெல்லாம் எஸ்.டி. பூத் மூலம்தான் தொலைபேசியில் பேச முடியும். எஸ்.பி. அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். சைலேந்திரபாபு ஐபிஎஸ்.ஸே இணைப்பில் கிடைத்தார். விஷயத்தைச் சொன்னேன். திண்டுக்கல் எஸ்.பி. ஆபிஸ் வந்துவிடுங்கள் என்று கூறினார். காரை நெருங்கிய போது, கிராமத்து மக்கள் 20 பேர் எனது காரை சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர்.
உயிரோடு ஊர் திரும்புவோமா என்ற பயத்திலேயே காரில் ஏற முயன்றேன். ஒன்றிரண்டு பேர் என்னை மறித்து பேச முயன்றார்கள். அவர்களை விலக்கிவிட்டு, காரில் ஏற, சிட்டாக பறந்தது கார். திண்டுக்கல்லில் எஸ்.பி. அலுவலகத்தை விசாரித்து அங்கு போவதற்குள் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர், அந்த மலைக்கிராம மக்கள் அங்கு வந்திருந்தனர். எஸ்.பி. அறையை தேடி சென்றபோது, அவரது பாதுகாவலர் சார், உங்களைதான் கேட்டார் என்றார். அவரது அறைக்குள் நுழைந்த போது 10, 15 பேர் இருந்தார்கள். இன்ஸ்பெக்டர் எஸ்.பி.யிடம் விசாரணை விவரத்தைச் சொன்னார். அந்த நேரத்திலும் கிராமத்து பெரியவர் குறுக்கிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

இன்ஸ்பெக்டர் பேசி முடித்தவுடன், அந்த பெரியவர் மீண்டும் சத்தமாக பேசத் துவங்கினார். தனது இருக்கையில் இருந்து எழுந்து மேஜைக்கு முன்பாக வந்த எஸ்.பி. சைலேந்திரபாபு, பெண், பையன் பெற்றோர் யார் என்று கேட்டு அவர்களை தனித்தனியாக நிற்க வைத்தார். பெண்ணும், பையனும் தனியாக நின்றார்கள். நான் ஒரு பக்கமாக நின்றிருந்தேன். மற்றவர்கள் எல்லாம் வெளியே போங்கள் என்றார் எஸ்.பி. அப்போதும் அந்த பெரியவர் ஏதோ சொன்னார். இரண்டடி முன்னே வந்து அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார் எஸ்.பி. அங்கிருந்த அத்தனை பேருக்கும் சப்த நாடியும் அடங்கி போய்விட்டது. அறை வாங்கிய நபர் வெளியேறுவதற்கு முன்பாகவே அங்கு கூட்டமாக நின்றிருந்த கிராமத்து மக்கள் அத்தனை பேரும் சத்தம் இல்லாமல் அவசரமாக வெளியேறிவிட்டனர்.


பெண்ணின் தாயை அழைத்த எஸ்.பி., உங்க பெண்கிட்ட பேசும்மா என்று கூறினார் எஸ்.பி. அதே அறையில் தனது மகளிடம் கண்ணீரோடு கதறிக் கொண்டிருந்தார் அவரது தாய். திடீரென்று பெற்ற குழந்தையின் காலில் விழுந்துவிட்டார் அந்த தாய். எனக்கே தர்மசங்கடமாகிவிட்டது.
இறுக்கமாக இருந்த அந்த சூழலை உடைக்கும் விதமாக சத்தமாக அந்த பெண்ணை அழைத்தார். பெற்றோர் கூட போறியா, உனது காதலனோடு போறியா என்று கேட்டார் எஸ்.பி. தனது கணவனுடன் போகிறேன் என்று கலங்காமல் சொன்னார் அந்த பெண். என்னைப் பார்த்து, அந்தப் பெண்ணை அழைத்துச் செல்லுங்கள் என்றார் எஸ்.பி. சைலேந்திரபாபு.

தயங்கியபடியே, சார் 50 பேருக்கு மேலே இரண்டு வாகனங்களில் வந்திருக்கிறார்கள். திரும்பி செல்லும் வழியில் ஏதாவது தாக்குதல் நடத்துவார்களா என்று பயமாக இருக்கிறது என்றேன்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையை தாண்டுகிற வரை உங்கள் கார் மீது ஒரு கல் கூட விழாது. நீங்கள் பயப்படாமல் செல்லுங்கள் என்று கூறி விட்டு, இன்ஸ்பெக்டரை பார்த்தார். அவர் பதறிப் போய், பாதுகாப்புக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூற, எஸ்.பி.க்கு நன்றி கூறி விட்டு காரில் சேலத்தை நோக்கி புறப்பட்டோம்.

அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதை 28 வயதிலேயே புரிந்து வைத்திருந்தவர் ஐபிஎஸ் சைலேந்திர பாபு.. 5 மணிநேரத்திற்கு மேலாக இன்ஸ்பெக்டர் பேசிக் கொண்டிருந்த பஞ்சாயத்தை அரைமணி நேரத்தில் முடித்து வைத்தார். வத்தலக்குண்டை கடந்து ஈரோடு சாலையில் பயணித்து கொண்டிருந்த போது, முதல்நாள் விசாரித்த சோதனைச் சாவடியில் வாகனம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பாக திண்டுக்கல் மாவட்டத்தை கடந்து விட்டோம் என்பதை வயர்லெஸ் மூலம் உறுதி செய்து கொண்டார் சைலேந்திரபாபு ஐபிஎஸ்…

மீண்டும் அவரை சென்னையில்தான் சந்தித்தேன். பழனியில் சௌராஷ்டிரா சமூக நிகழ்வில் கலந்துகொண்டதால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று தவறுதலாக புரிந்து வைத்திருந்ததை 2000 ஆம் ஆண்டில் தான் திருத்தினார், அண்மையில் உடலால் மறைந்து நினைவில் வாழும் நியூஸ் 7 டிவி நிர்வாக ஆசிரியர் கோசல்ராம்.

சிங்கிளா வேட்டையாடும் குணம் படைத்த சிங்கம், அதே குணம் படைத்த நூற்றுக்கணக்கான சிங்கத்தை சைவமாக்க வேண்டும். என்ன வித்தை வைத்திருக்கிறார் டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ்.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

One thought on “சிங்கிளா வேட்டையாடற சிங்கம்.. நூற்றுக்கணக்கான சிங்கங்களை சைவமாக்க வேண்டும்…. என்ன வித்தை கைவசம் இருக்கிறதோ?”
  1. Storey vera level intrsteing …padikum pothu story screen play ana mathiri irunthuchi super

Comments are closed.