சிறப்பு ச் செய்தியாளர் தாரை இளமதி..
திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றப் பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஊடகங்களிலும், பொதுமக்களிடமும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய ஒற்றை வார்த்தை, அவரின் பலநிமிட பேச்சை விட அதிக விளம்பர வெளிச்சத்தைப் பெற்றிருப்பது விசித்திரமானதுதான். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற சொற்பதத்தை பயன்படுத்தி, ஆளும்கட்சியான திமுக.வையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சங்கத்திடத்திற்கு ஆளாக்கிவிட்டார் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகளில் ஒரு பிரிவினர்.
கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று உரத்த கூறிய அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சுயமாக யோசித்து உவமைகளை பயன்படுத்தும் ஞானம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை தமிழ் கூறும் நல்லுகம் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவரின் சொற்பதங்களைப் போல பயன்படுத்தாமல், பண்பட்ட அரசியல் தலைவரைப் போல முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து கொண்டதும் திமுக அடங்க முடியாத யானை என்று வெறுமனே குறிப்பிட்டு விட்டு மட்டும் எதிர்க்கட்சித் தலைவரின் கிண்டலை கடந்து போயிருந்தால், ஆளும்கட்சி என்ற ஆணவத்தோடு பதிலளித்து இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்திருக்கும்.
ஆனால், முதல்வரே பெருமிதத்துடன் குறிப்பிட்டதைப் போல நீதிக்கட்சியின் நீட்சி தான் திமுக என்பதை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருப்பதைப் பார்த்துதான், மானமுள்ள தமிழ் சமுதாயமும், கொள்கை அளவில் திமுக.வை எதிர்த்துக் கொண்டிருப்பவர்களும் மு.க.ஸ்டாலினுக்கு வெண் சாமரம் வீசத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ள அம்சமாகும்.
யானையின் நான்கு கால்களைப் பற்றி முதல்வர் வைத்த உவமைகள், எடப்பாடி பழனிசாமியும், அதிமுக கூட்டமும் இனிவரும் எந்த காலங்களிலும் மௌன மொழியில் கூட உச்சரிக்கும் தைரியம் இல்லாத, தன்மானம் இல்லாத அரசியல் தலைவர்கள் என்பதை பட்டுவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
சமூக நீதி, மொழிப் பற்று,சுயமரியாதை, மாநில உரிமை… இதுபோன்ற முழக்கங்களை கடந்த நான்காண்டு கால எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஆட்சியில் ஒருமுறை கூட தமிழ் மக்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அந்தவகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சரித்த தமிழர்களின் மான்பை பறைசாற்றும் வகையில் முன்வைத்த நான்கு சிந்தாந்தங்களும், தமிழ் தேசியத்தை கண் முன்னே காண விரும்புவோரின் காதில் தேன் வந்து பாய்ந்தது போன்ற இன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு நாட்கள் சட்டப்பேரவையில் நடைபெற்ற சூடான விவாதங்களை, தமிழக மக்கள் மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களும், இந்தியா எங்கும் பரவிக்கிடக்கும் ஜனநாயக வாதிகளும் கூர்ந்து கவனித்தார்கள். அந்தவகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, இது வெறும் டிரெய்லர் தான், மெயின் பிக்ஸரே இனிமேல்தான் இருக்கிறது என்று ஆணித்திரமாக கூறி பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வை வாயடைக்க வைத்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் முனைப்பில், பொதுமக்களின் துயரங்களின் மீது கரிசனம் காட்டுபவர்கள் தாங்கள் தான் என்பதை வெளிப்படுத்தும் கள்ளத்தனத்தோடு, தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் ஏன் இடம் பெறவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கூக்குரலிட்டு இருக்கிறார்கள்.
அவர்களின் கொக்கரிப்புக்கு அமைச்சர் பெருமக்களே சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியதைப் போல முந்தைய அதிமுக அரசின் ஊழல்களை தோண்டியெடுத்து தண்டனை வழங்காமல் விடமாட்டோம் என்பதை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மூலம் கோடிட்டு காட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிமுக.வினருக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கி பல நூறு கோடி ரூபாய் ஊழல் புரிந்து உள்ள விவகாரத்தை சட்டப்பேரவையிலேயே பகிரங்கமாக போட்டு உடைத்திருக்கிறார் கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி.
அதைவிட, முக்கியமாக மானத்தோடும், வீரத்தோடும் வாழ்பவன் தமிழன் என்பதை சட்டப்பேரவையில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய அரசு என்ற வார்த்தைக்கான விளக்கத்தை தெளிவாக எடுத்துக் கூறி, கடந்த 4 ஆண்டுகாலமும் அடிமை ஆட்சியை நடத்திய அதிமுக போல திமுக ஆட்சி இருக்காது என்பது மத்திய பாஜக அரசுக்கு காவடி தூக்கிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூடாரத்திற்கு உணர்த்தியோடு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கும் வியர்க்க வைத்திருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலம் போல பாவித்து ரோடு ஷோ நடத்தியதையும், முதல்வரையும், துணை முதல்வரையும் ஏவல் ஆட்களைப் போல நடத்தியதையும் இனிவரும் காலங்களில் கற்பனை கூட செய்து விட முடியாது என்பதையும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீரமிக்க முழக்கங்கள் நிரூபித்து இருக்கின்றன என்கிறார்கள் பகுத்தறிவு பாதையில் பயணிக்கும் தளகர்த்தாக்கள்.
அதைவிட சிறப்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்த அதிமுக அரசு, மத்திய பாஜக அரசுக்கும், மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கும் மாதந்தோறும் கட்டி வந்த கப்பத்தை எல்லாம் தோண்டியெடுத்து, துருவி துருவி விசாரணை நடத்தி தண்டிக்கிற ஆற்றல் திமுக அரசுக்கு இருக்கிறது என்பதையும் மறைமுகமாக எச்சரிக்கும் விதமாகவே யானை சொல்லாடலைப் பயன்படுத்தி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் தமிழ் தேசியப் பற்றாளர்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த 49 நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு சொல்லும், செயலும் சுயமரியாதை சுடரையும், போர்க்குணத்தையும் தனது இறுதி மூச்சுவரை தூக்கிப் பிடித்த கலைஞர் மு.கருணாநிதிக்கு ஒப்பான மனவலிமை கொண்டவராக தான் இருப்பதை முதல்வர் மு. க. ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார் என்று கூறும் அவர்கள், 50 நாட்களுக்குள்ளாக என்று சொல்வதை விட, ஒரே ஒருமுறை டெல்லி பயணத்தின் போதே நிரூபித்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.
முதல்வராக பதவியேற்றவுடன் முதல்முறையாக பிரதமரைச் சந்திக்கச் சென்ற மு.க.ஸ்டாலின், மோடியை தவிர வேறு எந்த மத்திய அமைச்சர்களையும் சந்திக்க துளிகூட ஆர்வம் காட்டவில்லை என்று கூறும் தமிழ் தேசியவாதிகள், தாங்க முடியாத கடன் சுமையில் தமிழகம் தள்ளாடும் நிலையிலும் கூட, முந்தைய அதிமுக ஆட்சியாளர்களைப் போல உட்கட்சிப் பஞ்சாயத்திற்கு எல்லாம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லிக்கே சென்று சந்தித்து பணிவு காட்டிய கேவலமான காரியத்தை எல்லாம் திமுக ஒருபோதும் செய்யாது என்பதையும் நிரூபித்துவிட்டே சென்னை திரும்பி இருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்று, டெல்லி பயணத்தை நினைவுக்கூறுகிறார்கள்.
இத்தனைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் தங்கியிருந்த போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கியமான எந்த அலுவலும் இன்றிதான் இருந்திருக்கிறார். அதனால்தான், தமிழக ஊடகங்களில் பாஜக செய்தித்தொடர்பாளராக விவாதங்களில் பங்கெடுத்து வரும் கே.டி. ராகவனோடு டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அமைச்சரக அலுவலகத்தில் அவரோடு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார் என்பதை சுட்டிக்காட்டும் தமிழ் தேசியவாதிகள், தமிழராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் சீதாராமன், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் வந்தபோதெல்லாம், தமிழகத்தை தூக்கி நிறுத்த மத்திய பாஜக அரசு அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அளந்துவிட்ட கற்பனை கதைகளை எல்லாம் திமுக ஆட்சியில் எடுபடாது என்ற அச்சத்தில்தான், அவரும் கூட முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
மரபுபடி மத்திய அமைச்சரை மாநில முதல்வர்தான் சென்று சந்திக்க வேண்டும் என்று கதை விடுபவர்கள், ஒரு விஷயத்தை மறந்துவிட்டே பேசுவார்கள். பிரதமராக பதவி வகித்தவர், போயஸ்கார்டன் வீட்டுக்கே சென்று விருந்து சாப்பிட்டதையெல்லாம் நினைவுக்கூராத அளவுக்கு அவர்களுக்கு ஞாபகமறதி நோய் அதிகமாக இருக்கும் என்று கிண்டலோடு கூறும் தமிழ் தேசியவாதிகள், கலைஞரை விட ராஜதந்திரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வல்லமைப் படைத்தவர் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்தே வைத்திருக்கிறது என்பதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது வீடு தேடி வந்து சந்திக்க முன்அனுமதி பெற்று சந்தித்ததை வைத்தே தமிழ் கூறும் நல்லுகமும் புரிந்தே வைத்திருக்கிறது என்கிறார்கள்.
டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அவர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்கே சென்று மத்திய அமைச்சர்கள் சந்தித்தால், பெரிய அண்ணன் தாங்கள் என்று தங்களுக்குள்ளாகவே கட்டி வைத்திருக்கும் கற்பனைச் சிகரம் உடைத்துவிடும் என்ற பயத்தில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அனுப்பி வைத்து, திமுக அரசோடு இணக்கமாக போக மத்திய அரசு தயாராகவே இருக்கிறது என்ற தகவலையும் ரகசியமாக பதிவு செய்ய முனைந்திருக்கிறார்கள் என்பதும் உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள்.
மத்திய பாஜக அரசுக்கு திமுக கட்சியின் பலமும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் போராட்டக்குணமும் நன்றாகவே தெரியும். நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி திமுக என்பதும், 38 எம்.பி.க்களும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பத் தொடங்கிவிட்டால், மக்களவையை ஒருநாளும் சுமூகமாக நடத்தி செல்ல முடியாது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறது.
அதனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அடிமை அரசை வைக்கோல் குச்சிகளால் விரட்டியடித்ததைப் போல, இனிவரும் காலங்களில் தமிழகத்தை ஆட்டிப் படைக்க முடியாது என்ற எண்ணத்தை மத்திய பாஜக அரசின் மனதில் அழுத்தமாக பதிவு செய்துவிட்ட தருணத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மு.கருணாநிதியைப் போல மாறிவிட்டார் என்பதை தமிழ் கூறும் நல்லுகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயகத்தை பாதுகாக்க துடிக்கும் தேசியத் தலைவர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்தியா முழுவதிலும் உள்ள தலைவர்களுக்கு எல்லாம் புரிந்திருக்கிற விஷயம், எதிர்க்கட்சித்தலைவராக இருக்கிற எடப்பாடி பழனிசாமியின் புத்திக்கு இன்னும் உரைக்காமல் இருப்பதுதான் விநோதம். எதிர்க்கட்சி நிலைக்கு வந்துவிட்ட பிறகும் நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிற வலிமையை வரவழைத்துக் கொள்கிற மனவலிமை இல்லாத எடப்பாடி பழனிசாமி, ஒருபோதும் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதாவாகவே முடியாது.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, மாநில உரிமைகளையும், சுயமரியாதையையும் உயிர்மூச்சாக கொண்டுள்ள திமுக ஆட்சியையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் எளிதாக உரசிப் பார்த்துவிடலாம் என்ற இறுமாப்போடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்து ஆளுநர் உரைகளின்போது எதிர்க்கட்சித்தலைவராக பங்கேற்று பேசும் வாய்ப்பை கூட இழந்துவிடும் பரிதாபத்தை காலம் பரிசாக கொடுத்துவிடும் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப அடக்கத்துடன் செயல்படுவது அவருக்கு நல்லது என்று ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள் திராவிட பற்றாளர்கள்.