Sun. Nov 24th, 2024

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக ஆளுநர் உரையுடன் கடந்த 21 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. மறுநாள் முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதியுடன் (இன்று) நிறைவேற்றப்பட்டது. நேற்றைய தினம் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து, இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

தொடர்ந்து மாலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் அவரவர் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவற்றை விரைந்து நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்று முதல் கூட்டத் தொடரை வெற்றிக்கரமாக நிறைவு செய்ததையடுத்து, மறைந்த திமுக தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அமைச்சரவை சகாக்களுடன் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.