தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜூம், அவரது மகன் பெனிக்ஸும் கடந்த ஆண்டு காவல்துறையினர் கொடூரமான தாக்குதலில் ஒருவர் பின் ஒருவரமாக மரணம் அடைந்தனர்.
இந்த கொடூர செயலுக்கு எதிராக அப்போதே பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற காவல்துறையினரின் சித்ரவதைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையும் வழங்கியது.
இருவரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஓராண்டு நினைவு நாள் இன்று சாத்தான்குளத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட திமுக எம்.பி. கனிமொழி, தந்தை, மகன் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, முடுக்குமீண்டான்பட்டியில் அமைந்துள்ள மனநலக் காப்பகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமைப் பார்வையிட்டு கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், தப்பாத்தியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் முகாமையும் பார்வையிட்ட கனிமொழி எம்.பி., அங்கு வசித்து வரும் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் திமுக அரசு நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்று வாக்குறுதி அளித்த கனிமொழி எம்.பி., நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ஆளுநர் உரையில், இலங்கை தமிழர்களுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.
தொடர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.