சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒரே தொகுதியில் மட்டும் திமுக வெற்றிப் பெற்றிருக்கிறது. அதுவும் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற சேலம் வடக்குத் தொகுதியை 2021 ஆம் ஆண்டிலும் திமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் வெற்றிப் பெற்ற திமுக வழக்கறிஞரும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான ஆ.ராஜேந்திரனே மீண்டும் தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிப் பெற்றுள்ளார்.
மற்ற 10 தொகுதிகளிலும், எடப்பாடியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்பட அதிமுக, பா.ம.க. கூட்டணி வேட்பாளர்கள்தான் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் திமுக.வுக்கு ஏற்பட்ட படுதோல்வி குறித்து திமுக தலைமை விசாரணையை முடுக்கவிட்டுள்ளளது. கட்சி ரீதியாக மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு மாவட்ட திமுக.வுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளுக்கு பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதிக்கு எதிராகவும் விசாரணை சூடு பிடித்துள்ளது.
அதேபோல கிழக்கு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கு பொறுப்பாளரான எஸ்.ஆர்.சிவலிங்கத்திடமும் தேர்தல் தோல்வி தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. இதேபோல, சேலம் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளுக்கு பொறுப்பாளரான ஆ.ராஜேந்திரனிடம், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினே நேரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்காக கடந்த 11 ஆம் தேதி சேலம் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் திமுக.வுக்கு ஏற்பட்ட தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல், ஆ.ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லையாம்.
டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கத்தை விட, வழக்கறிஞர் ஆ.ராஜேந்திரன் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் உண்டு. அதற்கு காரணம், மறைந்த திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்த காலத்தில், அவரை எதிர்த்து அரசியல் செய்தவர் ஆ.ராஜேந்திரன். அவரின் துணிச்சலான, போராட்டக் குணத்திற்காக அவருக்கு ஆதரவு கரம் நீட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதற்கு முன்பெல்லாம், சேலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் காலங்களில் சின்ன விஷயமாக இருந்தாலும் ஆ.ராஜேந்திரனிடம் கேட்டு கேட்டு அறிந்துகொள்வார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த போதும் கூட, அவரது தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற உழைத்திருக்கிறார். மற்ற தொகுதிகளில் திமுக.வின் வெற்றிக்கு ஆ.ராஜேந்திரன் உண்மையாக உழைக்கவில்லை என்று கோபம், முதல்வருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் தோல்வி குறித்த விசாரணை நடைபெற்ற நேரத்தில், பேச்சோடு பேச்சாக, தான் போட்டியிட்ட சேலம் வடக்கு தொகுதிக்கு மட்டும் 35 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்திருப்பதாக ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தொகை மீது திமுக தலைமைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சேலத்தில் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.
தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு 70 சதவீதம் வாக்குக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், ஒரு ஓட்டுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் வீதம் வழங்கப்பட்டிருந்தால் கூட 15 கோடி ரூபாய்தான் வருகிறது. மீதி தேர்தல் செலவாக 20 கோடி ரூபாயா செலவழிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் தலைமைக்கு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தான் செலவழித்ததாக கூறப்பட்ட தொகை குறித்து திமுக தலைமைக்கு சந்தேகம் ஏற்பட்டிருப்பதை தனக்கு உரிய வழியில் மோப்பம் பிடித்துக் கொண்ட வழக்கறிஞர் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, தனது தொகுதிக்குட்பட்ட முக்கிய திமுக நிர்வாகிகளிடம், தலைமையில் இருந்து போன் செய்து ஆ.ராஜேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக பணம் ஏதாவது கொடுத்திருக்கிறீர்களா என்று கேட்டால், 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் என்று கூறி வருவதாகவும், அவர் சொன்ன பொய்க்கு தங்களை தலைமையிடம் மாட்டி விட துணிந்துவிட்டாரே என்று ஆ.ராஜேந்திரனுக்கு எதிராக சேலம் மாநகர திமுக நிர்வாகிகளில் ஒன்றிரண்டு பேர் புலம்பியவாறே தகவல் தெரிவிக்கின்றனர்.
சேலம் மத்திய மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வை விசாரணை வளையம் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த மாவட்டத்தில் கொரோனோ பரவல் தடுப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய மூன்று மாவட்ட பொறுப்பாளர்களின் செயல்பாடுகளிலும் தனக்கு திருப்தியில்லை என்று திமுக தலைமையிடம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் ஒன்று சேலம் திமுக நிர்வாகிகளிடம் பரவிக் கிடக்கிறது.
இப்படிபட்டநேரத்தில், தமிழகம் முழுவதும் இன்று கொரோனோ 2 வது தவணை நிவாரணத் தொகையான ரூ.2000 மும், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பும் வழங்கப்பட்டதைப் போல சேலம் மாவட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் நகரில் அரசு தொடங்கி வைக்கும் முதல் நிகழ்வாக திமுக எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்ட பகுதியில்தான் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
அதன் பிறகுதான், சேலம் மத்திய மாவட்ட செயலாளரான ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கலந்துகொண்ட நிகழ்வில் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு, ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வின் செல்வாக்கு குறைந்துவிட்டது. மத்திய மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அவரை விரைவாக மாற்றி விடுவார்கள் என்று அவரது எதிரணியினர் கொண்டாட்டமாக பேசி வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, இப்போது மாவட்ட பொறுப்பாளராக உள்ள டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகிய மூன்று பேரையுமே நீக்கி விட்டு, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக தலைமைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் சேலம் முன்னணி நிர்வாகிகள் பலர் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.
சேலம் மாவட்டத்தில் திமுக புத்தெழுச்சி பெற வேண்டும் என்றால், புதிய பொறுப்பாளர்களை களத்தில் இறக்கினால்தான், துவண்டு போய் இருக்கும் திமுக நிர்வாகிகள் வீறுகொண்டு எழுந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பத்து எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அரசியல் செய்வார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலில் சந்தித்த தோல்விக்கு பழிக்கு பழி வாங்க உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற புதிய தளகர்த்தாக்கள்தான் வேண்டும் என்றும் சத்தமாக குரல் எழுப்புகிறார்கள் சேலம் மாவட்ட மூத்த திமுக நிர்வாகிகள்.