Mon. Nov 25th, 2024

ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதை முதன்மையான பணி என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. நாடாளுமன்ற மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்ததையடுத்து, அதே ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, அந்த மாநிலத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இதனையடுத்து, தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்றதற்குப் பிறகு முதல்முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீர் தலைவர்களுடன் வலியுறுத்திய அம்சங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், வளர்ச்சியை முதன்மையான கொண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். அந்த மாநிலத்தில் ஜனநாயகத்தின் ஆணிவேரை வலிமைப்படுத்துதே முதன்மையான பணி. மறுவரையறை பணிகள் விரைந்து நடைபெறுவதடன், அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சி அமைவதையுமே மத்திய அரசு விரும்புகிறது.

இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதே கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதே முக்கியமான பணி என்றும், அனைத்துப் பகுதிகளுக்கான வளர்ச்சியை முன்னெடுப்பதே மத்திய அரசின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை ஏற்ற ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித்தலைவர்களின் குழுவிற்கு தலைமை வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவாக சட்டமன்றத் தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் அந்த மாநிலத்தில் உள்ள இந்து சமுகத்தினர் உள்ளிட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் உளளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

.