Sun. Nov 24th, 2024

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும்! தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று நண்பகல் மேட்டூருக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் காவிரி நீர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை வந்தடையும் என்பதால், காவிரி பாசன விவசாயிகள் உற்சாகமக அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றடைவதில்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர். கால்வாய்கள் தூர்ந்து இருப்பதால், தண்ணீர் பாதி தூரத்திலேயே வீணாகிவிடுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

இதனையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில், திருச்சி, கரூர், அரியலூர்,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, கடலூர்,புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, இந்த மாவட்டங்களில் 4 ஆயிரத்து 61 புள்ளி 44 கிலோ மீட்டர் தூரத்திற்கான கால்வாயை முழுமையாக சீரமைக்க 65 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நேற்றைய தினம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கால்வாய் தூர் வாரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கல்லணை, வெள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகள் எந்த அளவிற்கு தூர்வாரப்பட்டிருக்கிறது. அணைகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்தும் மு.க.ஸ்டாலின் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று சேலம் மாவட்டத்திற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இன்று நண்பகல் மேட்டூருக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் தூர் வாரப்பட்டு வருவதால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.