Sat. Nov 23rd, 2024

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்த நேரத்திலும், கோவை மாவட்டம் மட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதிக்கத்தில்தான் தொடர்ந்து இருந்து வருகிறது என்று கோவை திமுக நிர்வாகிகள் கொதிப்போடு குரல் கொடுத்து வந்தனர்.

அந்தளவுக்கு எஸ்.பி.வேலுமணிக்கு கடந்த பல ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த அரசு அதிகாரிகள், திமுக ஆட்சி அமைந்த பிறகும் பவர் ஃபுல் பதவிகளிலேயே நீடித்து வருவதுதான் காரணமாக கூறப்படுகிறது.

அதுவும், கோவை மாநகராட்சி ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்ட, எஸ்.பி.வேலுமணியின் இதயம் கவர்ந்த குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ், திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தது, கோவை நகர திமுக நிர்வாகிகளின் கண்களை சிவக்க வைத்தது.

எஸ்.பி.வேலுமணி மனதிற்குள் நினைப்பதை, அதற்கு ஏற்ப எண்ணெய்யாக மாறி நிறைவேற்றி கொடுப்பவர் குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ் என்பது கோவையில் உள்ள சின்ன குழந்தைகளுக்குக் கூட தெரியும் என்றார்கள் திமுக முக்கிய புள்ளிகள். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் சென்னை மாநகராட்சியில் இருந்து கோவை மாநகராட்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார் குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ்.

அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் கொரோனோ தொற்று உச்சத்தில் இருந்தபோது, கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ்.ஸை வைத்து பல நூறு கோடி ரூபாய்க்கு கொள்ளையடித்துவிட்டார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார், அவரை எதிர்த்து திமுக சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட கார்த்திகேய சேனாதிபதி.

கொரோனோ தொற்று வைரஸை விரட்டுவதாக கூறி கிருமிநாசினி தெளிப்பது முதல் அனைத்து சுகாதாரப் பணிகளிலும் வரலாறு காணாத அளவிற்கு ஊழல் நடைபெற்றதற்கு மூலக்கர்த்தவாக இருந்தவர் குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ்.தான் என்று குற்றம் சாட்டினார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்.

அப்படிபட்டவர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கோவை மாநகராட்சி ஆணையராக தொடர்ந்து நீடிப்பதற்கு காரணம், அவர் தற்போதைய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் உறவினர் என்பதாலும், அவரது செல்வாக்கின் காரணமாகவே குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்றும் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்கள்.

கோவை மாவட்டத்தை கடந்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ்.ஸின் திருவிளையாடல்கள் ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இப்படிபட்ட நேரத்தில், கோவை மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்து குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ், அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக ராஜா கோபால் சுங்காரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மட்டுமல்ல, சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் பற்றியும் குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ்.ஸுக்கு முழுமையாக தெரியும். உரிய முறையில் அவரிடம் விசாரணை நடத்தினால், எஸ்.பி.வேலுமணியின் அனைத்து ஊழல்களையும் விலாவாரியாக கூறிவிடுவார் அவர் என்கிறார்கள், கோவை மாநகராட்சியில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.

எஸ்.பி.வேலுமணியின் கோட்டையில் இருந்து முதல் செங்கல் உருவப்பட்டதுடன், கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்களும், முறைகேடுகளும் ஆதியும் அந்தமுமாக தோண்டப்பட்டு, வெகு விரைவாக முன்னாள் அதிமுக அமைச்சரை கூண்டில் ஏற்றி சிறைக்கு தள்ள திமுக அரசு தயாராகிவிட்டது என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள திமுக ஆதரவு அரசு அதிகாரிகள்…

மதுரை மாநகராட்சி ஆணையராக டாக்டர்.கார்த்திகேயன் நியமனம். சேலம் மாநகராட்சி ஆணையராக .கிருஸ்துராஜ் நியமனம். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக க்ராண்டி குமார் பாடி நியமனம். நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்னு சந்திரன் நியமனம். கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சுங்காரா நியமனம்.