Mon. May 20th, 2024

மே 2 ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே ஒருவித ஏக்கத்துடன் ஜூன் 3 ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருந்தார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில், திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை இருந்ததால், தனது தந்தையின் கனவான திமுக.வை அரியணையில் ஏற்ற வேண்டும் என்ற தீராத ஆசையில் இருந்து வந்தவர் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கட்டிலை அலங்கரித்த நேரத்தில், அதுவும் தான் முதலமைச்சராக ஆட்சி புரிந்து வரும் காலத்தில் திமுக தலைவரும், தனது தந்தையுமான மு.கருணாநிதி உயிரோடு இருந்து ஆசி வழங்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே என்பது மு.க.ஸ்டாலினுக்கு தீராத மனவருத்தத்தை உருவாக்கி தந்துள்ளது என்கிறார்கள் திமுக முன்னணி தலைவர்கள்.

தனது மனவருத்தத்தை போக்கி கொள்ளும் வகையில் அவரது 97 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனே தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், மனதை தேற்றிக் கொண்டு, எளிமையான முறையில் கலைஞர் மு.கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி, கொஞ்சமாக மன ஆறுதல் பெற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.

காலையில், கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை, தொடர்ந்து அண்ணா அறிவாலயம், கோபாலபுரம் இல்லம், முரசொலி அலுவலகம், திமுக எம்.பி..கனிமொழி இல்லம் என கலைஞர் மு.கருணாநிதியின் நினைவுகளைச் சுமந்திருக்கும் இடங்களை எல்லாம் தேடி தேடிச் சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அவரைப்போலவே, கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்து உறவுகளும் அவரது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்கள். அதேவேளையில் அவரது மூத்த புதல்வர் மு.க.அழகிரி எப்போது வந்து மரியாதை செலுத்துவார், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்வாரா.? அண்ணா அறிவாலயத்திற்கோ, முரசொலி அலுவலகத்திற்கோ செல்வாரா, முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு இன்றைக்காவது நடக்குமா? கலைஞர் குடும்பத்து உறவுகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

காலை முதல் நண்பகல் வரை எங்கும் தலையை காட்டாத மு.க.அழகிரி மதிய நேரத்தில் கோபாலபுரத்திற்கு வந்து கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தனது தாயார் தயாளு அம்மாளுடன் சிறிதுநேரம் உணர்வுகளை பகிர்ந்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

முன்வாசல் வழியாக வந்து மரியாதை செலுத்துவதை விரும்பாமல், கோபாலபுரம் வீட்டின் பின்பக்கமாக வந்து, தனது கடமையை செய்துவிட்டு, அதே வழியில் திரும்பி சென்றுவிட்டதாக, திமுக நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். கோபாலபுரம் இல்லத்தில் அவர் இருந்த நிமிடங்களில் பெரிதாக அவரது முகத்தில் மகிழ்ச்சியில்லை. உறவுகளிடம் கூட மு.க.அழகிரி இயல்பாக உரையாடவில்லை என்றும் தகவல் கசிகிறது.

அண்ணன் ஒருபக்கமாகவும், தம்பி ஒருபக்கமாகவும் முகத்தை திருப்பி கொண்டிருப்பதை கண்டு வருத்தப்படும் கலைஞர் மு.கருணாநிதியின் மற்ற வாரிசுகள், திமுக ஆட்சியில் இருக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், சகோதரர்கள் பகையை மறந்து பாசத்தோடு ஒன்றிணைந்து நிற்பதுதான் மறைந்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று சத்தமில்லாமல் குரலெப்புகிறார்கள்.